"மானிய விலை ஸ்கூட்டர்கள் ஆட்சியாளர்களின் தவறுகளை மறைத்துவிடாது!” - ஜோதிமணி | "New schemes won't hide AIADMK's mistakes" - Jothimani

வெளியிடப்பட்ட நேரம்: 21:08 (06/02/2018)

கடைசி தொடர்பு:21:08 (06/02/2018)

"மானிய விலை ஸ்கூட்டர்கள் ஆட்சியாளர்களின் தவறுகளை மறைத்துவிடாது!” - ஜோதிமணி

மானிய விலை ஸ்கூட்டர்

ணிபுரியும் பெண்களுக்காகத் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் பிப்ரவரி  மாதம் 5-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிகப்படியான பெண்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியதால், இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 10-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

“வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கு 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்’’ என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின்போது சொல்லியிருந்தார். அதன்படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு வாகனம் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 5-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அறிவித்திருந்த அந்தக் கடைசி நாளுக்குள் போதிய நகல்களை இணைக்க முடியாமல் பெண்கள் அவஸ்தைப்பட்டனர். குறிப்பாகக் குடும்பப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுள்ள பெண்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதுவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் நகலை இணைப்பதற்காக அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. அத்துடன், அதிகப்படியான பெண்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதால் அதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 10-ம் தேதிவரை நீட்டித்துள்ளது அரசு. இதனால் பெண்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். அவர்களிடம் பேசினோம்...

மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் கல்பனா என்பவரிடம் பேசினோம். “எனக்கு திருவள்ளூர்தான்  சொந்த ஊர். திருநின்றவூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பு வந்தவுடன், எனக்குத் தெரிந்த பலரும் இதில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினார்கள். நானும் விண்ணப்பத்தை வாங்கி, தேவையான ஆவணங்களைச் சேகரித்தேன். என்னிடம் ஓட்டுநர் உரிமம் இருந்ததால், எனக்குச் சிரமம் எதுவும் இல்லாமல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடிந்தது. நேற்று என் தோழிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, விண்ணப்பத்தை ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர். இப்போது கால அவகாசம் நீட்டித்திருப்பதால், இன்னும் பலர் விண்ணபிக்க இது சிறந்த வாய்ப்பாக இருக்கும். எனக்கு இலவசங்கள் வாங்குவதில் உடன்பாடில்லை. ஆனால், இது நம்முடைய பணம்தானே என்பதால், இதற்கு விண்ணப்பித்திருக்கிறேன். தேவையான எல்லா ஆவணங்களும் கொடுத்திருப்பதால், முதல்கட்டத்திலேயே எனக்கு ஸ்கூட்டர் வந்துவிடும் என்று நம்புகிறேன்’’ என்றார் அவர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியிடம் பேசினோம். “இந்தத் திட்டம் அறிவிக்கும்போதே பலஜோதிமணி சர்ச்சைகளோடுதான் தொடங்கப்பட்டது. 'கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும், பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது, அ.தி.மு.க-வில் இருப்பவர்களுடைய பணமோ, அரசாங்கத்தின் பணமோ கிடையாது. மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில்தான் வாகனம் வழங்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களின் முன்னேற்றதுக்குத்தான் இந்தத் திட்டம் செயல்பட வேண்டும். ஊழலற்ற திட்டமாக அமைந்தால், இந்தத் திட்டம் முழுப் பலனடையும். வாகனங்கள் பெறத் தகுதியான விண்ணப்பங்களை வெளிப்படையாகப் பரிசீலனை செய்ய வேண்டும். எந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். பொதுமக்களைப் பற்றி அடிப்படை புரிதல்கூட இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். ஹெலிகாப்டரே கொடுத்தால்கூடப் பேருந்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இருசக்கர வாகனம் கொடுத்தால் மட்டும் பேருந்து நெரிசல் எப்படிக் குறையும்? இவர்கள் என்னதான் திட்டம் கொண்டுவந்தாலும் அவர்கள்மீது இருக்கும் தவற்றை மறைக்க முடியாது’’ என்றார்.

“அம்மா இருசக்கர வாகனத் திட்டம் வெறும் கண்துடைப்பாக இல்லாமல், அந்த வாகனம் வாங்குவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களுடன் சமர்ப்பித்திருக்கும் அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் வாகனம் வழங்கி, அரசு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்’’ என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

ஒருலட்சம் பேருக்கும் இருசக்கர வாகனம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்