வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (07/02/2018)

கடைசி தொடர்பு:20:01 (07/02/2018)

ஹஜ் மானியம் ரத்து... உண்மை என்ன? கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல் #MustRead

ஹஜ் மானியம் ரத்து

''யாருக்கு மானியம்... ஹஜ் பயணிகளுக்கா... ஏர் இந்தியாவுக்கா? மானியம் ரத்து என்பதைவிட, இந்த மானியம் என்பதே ஒரு ஏமாற்றுவேலை. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்கிறது. இதை வைத்து இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. உடனே இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்''-இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் என்பது அதிகாரபூர்வமாக தற்போது நீக்கப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் பலரின் கோரிக்கை இதுவாகத்தான் இருக்கிறது.''இப்போதும்கூட மானியம் ரத்து என்பதுதான் பரபரப்புச் செய்தியாக மாற்றப்படுகிறதே தவிர, அதன் பலன், ஹஜ் பயணிகளுக்குக் கிடைக்கும் வகையில் செய்யவே இல்லை'' என்பதையே வலியுறுத்திக் கேட்கிறார்கள் அவர்கள்.'

'இதென்ன புதுக்கதை என்கிறீர்களா?'

கொஞ்சம் ஆழமாகப் புகுந்து பார்த்தால், கதை அப்படித்தான் போகிறது. அதாவது, ‘இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை அப்படியே ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குத் திருப்பிவிடும் வேலை நடக்கிறது' என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது.

இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஹஜ் என்பது ஐந்தாவது கடமை. சவுதி அரேபியாவிலிருக்கும் மக்காவில் உள்ள மசூதி உள்ளிட்ட சில முக்கியமான இடங்களுக்குச் சென்று தொழுகை செய்வதுதான் இந்தக் கடமை. முதல் நான்கு கடமைகள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொதுவானது. ஆனால், செலவு செய்வதற்கு வாய்ப்புள்ளவர்களின் கடமைதான் ஹஜ் பயணம். இஸ்லாமியர்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்திய அரசின் ஹஜ் மானியம். 

ஹஜ்  மானியம்  டேட்டா

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட அளவிலான பயணிகள் வரலாம் என்று சவுதி அரசாங்கத்திலிருந்து அனுமதி வழங்கப்படும். ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்கும், தனியார் ஏஜென்சி  மூலமாகச் செல்பவர்களுக்கும் இந்த அனுமதி பிரித்து வழங்கப்படும். அதிக எண்ணிக்கையிலான இடங்கள் ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்குத்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் ஹஜ் கமிட்டிகள், பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பும். இந்தப் பயணத்தை ஹஜ் கமிட்டிகளே ஒருங்கிணைக்கும். தற்போதைய நிலையில், இதற்கான செலவு அதிகபட்சம் 2 லட்ச ரூபாய்க்குள்ளேயே அடங்கும். தனியார் ஹஜ் பயண ஏஜென்ஸி மூலமாகச் சென்றால் செலவு குறைந்தபட்சம் 3.5 அல்லது 4 லட்சம் முதல் தொடங்கும். அதிகபட்சம், அந்தப் பயணியின் தேவையைப் பொறுத்து முடிவாகும்.

தற்போது மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், “ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதப் பயணத்துக்கான செலவுகள் குறித்து, ஆட்சியிலிருப்பவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்று வருத்தப்படும் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன், ''ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் மத்திய அரசு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது (கடந்த ஆண்டு நிலவரப்படி). அதில், பயணம் மேற்கொள்ளும்போது 34 ஆயிரம் ரூபாய், உணவுக்கானது எனக் கூறி, ஜித்தாவில் இறங்கியவுடன் பயணிகளிடம் கொடுக்கப்படுகிறது. எஞ்சிய தொகையானது சவுதி  உள்ளூர் போக்குவரத்து மற்றும் விமானக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. புனிதப் பயணம் மேற்கொள்ளும் எந்தப் பயணிக்கும் சவுதியில் உள்ளூர் போக்குவரத்துக்குக் கட்டணமே கிடையாது. ஆனால், அதை இவர்களால் எப்படி நிர்ணயம் செய்ய முடிகிறது எனத் தெரியவில்லை. மேலும் தனியார் விமானச் சேவைகளில் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்துச் செலவு 20 அல்லது 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகிறது.

 

ஹஜ்  மானியம்

34 ஆயிரம் ரூபாயை உணவுக்காகக் கொடுத்தபின், மீதமுள்ள ரூபாய்க்கு என்ன செலவு செய்யப்படுகிறது என்ற கணக்கே கொடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது, இதில் மானியம் எவ்வளவு? போக்குவரத்துக் கட்டணம் எவ்வளவு? என்பதையெல்லாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும். ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்லும் பயணிகள், ஏர் இந்தியா மூலமாக மட்டுமே செல்லமுடியும். தனியார் விமானப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகவே இருக்கிறது. இனி, ஹஜ் பயணிகளின் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிட்டு, அவர்களுடைய பயணச் செலவில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தாலே நன்மைதான்'' என்று சொன்னார்.

சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கஸாலி, அரபு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் சென்றுவரக்கூடியவர். அவரிடம் இதைப் பற்றி கேட்டபோது, ''மக்கா, மதீனா உட்பட அரபு நாடுகளில் அநேக இடங்கள் உண்டு. என்றாலும், பக்ரீத் நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயணம்தான் ஹஜ். மற்ற நாள்களில் செல்வது உம்ரா. வசதி இருப்பவர்கள் இந்தப் பயணத்தைச் செய்யாமல் இருப்பதும் தவறு... வசதியில்லாததால் கடன் வாங்கி கடமையைச் செய்வதும் தவறு. குறைந்தபட்சம் 15 நாள்களும் அதிகபட்சம் 40 நாள்களும் வசதியைப் பொறுத்து இப்பயணம் மேற்கொள்ளப்படும். வசதிமிக்கவர்கள் பல தடவை செல்வதும் உண்டு. இந்தப் பயணத்தை மேற்கொள்பவர்கள், அவர்களுடைய பெயருடன் ஹாஜி என்கிற அடைமொழியைச் சேர்த்து விளிக்கப்படுவார்கள்.

தற்போது மானியம் இல்லை என்றாகிவிட்ட பிறகு, சுமார் 200 பேர் சேர்ந்து சார்ட்டட் விமானத்தைச் சொந்தமாக எடுத்துச்சென்றால், இன்னும்கூட பயணக் கட்டணம் குறையும். கப்பல் பயணத்துக்கு வழி வகை செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது நல்ல திட்டமே. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

'தனியார் ஏஜென்ஸிகள் சுமாராக 4 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூலிக்கிறார்கள். ஹஜ் கமிட்டி மூலமான பயணமோ... 2 லட்ச ரூபாய்க்குள்இப்ராஹிம் அடங்கிவிடுகிறது எனும்போது, விருப்பப்பட்ட விமானத்தில் செல்கிறோம் என்று கூறினால்... வசதியற்ற பயணிகளும் கூடுதலாக 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்குமே?' என்ற கேள்விக்கு, பதில் தந்தார், புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ஜே.இ, ''நான் ஹஜ் கமிட்டி மூலமாக அங்கே சென்று வந்திருக்கிறேன். அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைத்தான் செய்வார்கள். ஆனால், சிற்சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நாம்தான் சமாளிக்க வேண்டும். உதாரணமாக உள்ளூர் போக்குவரத்துக்குச் சமயத்தில் கூடுதலாகச் செலவு செய்யவேண்டியதுகூட வரலாம். ஆனால், தனியார் மூலமாகச் செல்லும்போது, அவர்கள் கூடுதலாகப் பணம் வசூலிப்பதால் சிரமமில்லாமல் போய்விடும்.

முதலில் மானியம் என்பதே ஏர் இந்தியாவுக்குத்தான் செல்கிறது. அதிகபட்சமாக விமானக் கட்டணம் 40 ஆயிரத்துக்கும் மேல் வராது. ஆனால், ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்லும்போது, அதை 60 ஆயிரம் 70 ஆயிரம் என்று உயர்த்திவிடுவதுதான் பிரச்னையாக இருக்கிறது. இல்லையென்றால் இன்னமும் செலவு குறையும் என்பதே உண்மை. எனவே, எந்த விமானத்தில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று விதியை மாற்றிவிட்டு, வழக்கம்போல மற்ற ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டியே பார்த்துக்கொள்ளும் என்கிற வகையில் ஏற்பாடு செய்துவிட்டால், செலவு கூடாது... குறையவே செய்யும்.

 அதேபோல, ஹஜ் பயணத்துக்காக 500 கோடி மானியமாகத் தரப்படுகிறது. இதை சிறுபான்மையினப் பெண் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்போகிறோம் என்று சொல்கிறார்கள். இது நல்லவிஷயமே. ஆனால், அந்த 500 கோடி என்பது ஹஜ் மானியம் என்று சொல்வதைவிட, ஹஜ் சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குக்  கொடுக்கப்பட்டுவந்த  500 கோடி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்'' என்று சொன்னார்.

ஹஜ் பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்யும் சென்னையிலிருக்கும் தனியார் டிராவல் ஏஜென்ஸியைச் சேர்ந்த நாசரிடம் பேசியபோது, ''ஹஜ் கமிட்டியின் கட்டணத்தோடு ஒப்பிடும்போது, எங்களுடைய கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் மற்றும் வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம். குறிப்பாக உணவு, தங்கும் விடுதி, வழிகாட்டி, போக்குவரத்து என அனைத்துமே சிறப்பாக இருக்கும். ஒரு பயணிக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறோம். 

சாதாரண நாள்களில் ஜித்தா (சவுதி) சென்று வர 30 ஆயிரம்தான் கட்டணம். ஆனால், ஹஜ் சமயத்தில் இதை 60 ஆயிரம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று ஏர் இந்தியா நிறுவனத்தினர் ஏற்றிவிடுகிறார்கள். தனியார் விமானங்களும் இதைப் பின்பற்றி ஏற்றிவிடுகின்றன. இதனால்தான் எங்களைப் போன்ற தனியார் ஏஜென்ஸிகளுக்கான கட்டணம் உயர்கிறது. இதுவே வழக்கமான கட்டணம் என்றால், எங்களுடைய கட்டணமும் குறைவாகவே இருக்கும்'' என்று சொன்னார் நாசர்.

இதுதொடர்பாக ஹஜ் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசலாம் என்று முயற்சி செய்தபோது  யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. ஒருவர் மட்டும் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாதவராக, ''சொல்லப்படும் புகார்களில் உண்மை இருக்கிறது. மானியத் தொகையானது ஏர் இந்தியாவுக்குத்தான் செல்கிறது. ஹஜ் கமிட்டி மூலமாகச் செல்பவர்களுக்கு 88 ஆயிரம் ரூபாய் வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் 16 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால், அதிகபட்சமாக பயணக்கட்டணம் 60 ஆயிரம் என வைத்துக்கொண்டாலே மீதி 28 ஆயிரம் ரூபாய் வருகிறது. இதில் 16 ஆயிரம் ரூபாய் மானியம் என்கிற பெயரில் வழங்கப்படுகிறது. இது விமான நிறுவனத்துக்கே செல்கிறது. இதுபோக மீதி 12 ஆயிரம் ரூபாயும் பயணிகளிடமிருந்து பறித்து விமான நிறுவனத்துக்கே வழங்கப்படுகிறது'' என்று சொன்னார். 

மானியம் எவ்வளவு... அது எங்கே போகிறது என்று இத்தனை காலமாகத் தெரியாதிருந்த நிலையில், தற்போது விமானக் கட்டணமாகத்தான் செல்கிறது என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கணக்குப் போட்டுக் கூறுகிறார்கள். இதை ஹஜ் கமிட்டியிலிருப்பவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, அவர்களின் கோரிக்கையின்படி இன்றைய வியாபார உலகில் எந்த விமானத்திலும் பறக்கலாம் என்கிற அனுமதியை வழங்கிவிட்டால், செலவுகள் இன்னமும் குறையுமே. மானியத்தை ரத்து செய்துவிட்டது பிஜேபி அரசு என்கிற குற்றச்சாட்டுக்கும் வழியில்லாமல் போகுமே. இதைச் செய்ய அரசுக்கு என்ன தயக்கம்?.


டிரெண்டிங் @ விகடன்