வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (08/02/2018)

கடைசி தொடர்பு:20:50 (08/02/2018)

''மதுரையில் களம் இறங்கியுள்ள வைகோ... தி.மு.க. உடனான கூட்டணி உறுதியாகிறதா?''

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வரும் 13-ம் தேதி  மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எந்தெந்த தலைவர்கள் எங்கு பேசப்போகின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் வைகோவை களம் இறக்கி விட்டுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் வைகோ

தமிழகத்தில் ஒரேநேரத்தில் 3,600 கோடி ரூபாய் அளவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டணத்தை 20.1.2018 அன்று திடீரென்று நள்ளிரவில் உயர்த்தியதற்குக் கடுமையாக எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் போராடினார்கள். தி.மு.க. உள்ளிட்ட  அனைத்துக் கட்சியினரும் 27.1.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும், பிறகு 29.1.2018 அன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தி கைதானார்கள். அவர்கள் அனைவரும் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். எதிர்க் கட்சிகளின் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு ரூ.4 என்கிற அளவுக்குக் கட்டணக் குறைப்பு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தவிர, உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணங்களை முழுமையாகத் திரும்பப் பெறவில்லை. இதனால் மாணவ மாணவியர், அமைப்புசாராத் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, ஒருநாள் பயணக் கட்டணத்தை ரூ.50/-லிருந்து ரூ.80/-ஆகவும் உயர்த்தியது அ.தி.மு.க அரசு. மேலும்,''பேருந்துக் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை பல லட்சங்கள் குறைந்தது. கட்டண உயர்வு விகிதத்துக்கேற்ப, போக்குவரத்துக் கழக வருவாய் உயரவில்லை'' என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ''பிப்ரவரி 6- ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தோழமைக் கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில், ''பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறாத அ.தி.மு.க அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 13-2-2018 (செவ்வாய்) அன்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், ''மக்களுக்கு எதிரான போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆங்காங்கு போராடிய மாணவர்கள்மீது கண்மூடித்தனமாகத் தடியடி செய்து காட்டுதர்பார் நடத்தியது தமிழக அரசு. முதலமைச்சர் இல்லத்தின் முன்பே போராடிய மாணவர்கள் அராஜகமாகக் கைது செய்யப்பட்டு, ஈவு இரக்கமின்றி மாணவச் செல்வங்கள் என்றுகூடப் பாராமல் அவர்கள்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போராடிய மாணவர்கள்மீதும் மற்றவர்கள்மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை அ.தி.மு.க அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். மாணவர்கள்மீது கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளையும் திரும்பப் பெறவேண்டும்'' என்று பல தீர்மானம் போட்டனர்.

ஸ்டாலின் வைகோ

இந்நிலையில், பிப்ரவரி 13- ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை அந்தந்த கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மு.க.ஸ்டாலின் - திருவள்ளூர், துரைமுருகன்- வேலூர், கனிமொழி - கடலூர் என்று மாவட்டம் வாரியாகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தரப்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்பட மாவட்டம் வாரியாகக் கட்சி உறுப்பினர்கள் பேசும் விவரங்கள் உள்ளடக்கிய அறிக்கையை வைகோ வெளியிட்டுள்ளார். அது, முரசொலியில் வெளியாகியிருக்கிறது.

மதுரையில் வைகோ பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத்தரசன் விழுப்புரத்திலும், மூத்த தலைவர் தா.பாண்டியன் தென் சென்னையிலும் பேசுகிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் முகைதீன் ஈரோட்டில் பேசுகிறார். நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பேசுகிறார். மேலும், காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பேசுவோர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று முரசொலியில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தோழமைக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசிதான், யார்யார், எங்கு பேசுகிறார்கள் என்ற பட்டியலை அந்தந்த கட்சித் தலைவர்களே வெளியிட்டுள்ளனர். மதுரையில் வைகோ பேசுகிறார் என்பதுதான் இந்த அறிவிப்பின் ஹைலைட் விஷயம்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்