Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இதை முதலில் கவனியுங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களே..!' உடன்பிறப்புகளின் விவாதம் #VikatanExclusive

 

ஸ்டாலின்

‘‘தன்னைச் சுற்றி இருக்கும் சிண்டிகேட்களைக் கலைக்காமல் எதற்காக இந்தக் கலந்துரையாடலை நடத்துகிறார் ஸ்டாலின்” என்று புலம்புகிறார்கள் தி.மு.க-வின் கீழ்மட்ட தொண்டர்கள். ஒற்றை நபராக ஸ்டாலின் நடத்தும் கலந்துரையாடலினால் தி.மு.க-வில் பெரிய மாற்றங்கள் ஏதும் நடைபெறப்போவதில்லை என்று வருத்ததையும் சேர்த்துச் சொல்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

கட்சிக்குள் நடைபெற்றுவரும் குழப்பங்களைக் கட்டுபடுத்தவும், கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும் உடன்பிறப்புகளுடன் கலந்துரையாடல் என்று அறிவிப்பு தி.மு.க தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்டது. இந்த மாதம் முதல் மார்ச் மாதம் வரை 32 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்துரையாடல் கடந்த வாரம் தொடங்கியது. நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மாவட்டங்கள் வரை இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு வருகின்றனர். 

மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள், பேருர், நகர் கழக நிர்வாகிகள், வட்ட மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் என்று அனைத்து நிலை நிர்வாகிகளுடனும் ஸ்டாலின் தனியாகக் கலந்துரையாடுகிறார். இந்தக் கலந்துரையாடல் முடிவில் தொண்டர்களுடன் சேர்ந்து உணவும் அருந்துகிறார் ஸ்டாலின். மேலும், கலந்துரையாடலில் இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்கும் ஸ்டாலின் அவர்கள் சொல்லும் குறைகளையும் குறிப்பெடுத்துக்கொள்கிறார். மேலும், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், தி.மு.க-வின் வரலாற்றையும் இன்றைய தி.மு.க-வினரும் அறிந்துகொள்ளும் விதமாக டாக்குமென்ட்ரி வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

உடன்பிறப்புகளுடன் களஆய்வு

கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டார் ஸ்டாலின். இதை பார்த்த தி.மு.க-வினர், “நடிகர்களின் பாணியை தளபதியும் பின்பற்றுகிறார்” என்று கமென்ட் அடிக்கவும் தவறவில்லை. அதேபோல் தீர்வுகாணும் பெட்டி என்ற ஒன்றைக் கூட்டம் நடைபெறும் அரங்கில் வைத்துள்ளார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புகார்களை ஒழுங்குபடுத்த தனிக்குழு ஒன்றையும் ஸ்டாலின் நியமித்துள்ளார். 

இந்தக் கலந்துரையாடல் தி.மு.க-வின் அடிமட்ட நிர்வாகிகளிடம் ஒருபுறம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் புலம்பலையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்கும் அனைவரும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள். அவர்கள் மாவட்டச் செயலாளருக்கு எதிராக எப்படி ஓபனாகப் புகார் கொடுக்க முடியும். அதை தவிர ஸ்டாலினைச் சுற்றி ஒரு சிண்டிகேட் போல குழு ஒன்று உள்ளது. எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா, துரைமுருகன், காந்தி என பத்துப் பேர் கொண்ட பட்டியலே அதில் உள்ளது. இவர்களில் பலர் பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக கோலோச்சி வருபவர்கள். இவர்களால் பாதிக்கப்பட்ட பல முன்னணி கட்சியினர் இந்தக் கலந்துரையாடலுக்கே அழைக்கப்படவில்லை. அதேபோல், ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் இவர்கள்மீது குற்றச்சாட்டுகள் பல இருந்தும் அதை சொல்வதற்குகூட தயக்கம் காட்டுகிறார்கள் கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள். 

ஸ்டாலினின் சிண்டிகேட்டில் உள்ள ஒரு மாவட்டச் செயலாளர் கட்சிக்காரர்களிடம், “இந்தக் கலந்துரையாடலுக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவுச் செலவையே நான்தான் ஏற்றுக்கொண்டுள்ளேன்” என்று ஓபனாகச் சொல்லிவருகிறார். இதையறிந்த அவரது மாவட்ட நிர்வாகிகள் அவர்மீது ஸ்டாலினிடம் புகார் சொல்லவே தயங்குகின்றனர். அதே போல், புகார் பெட்டியில் புகாராக எழுதிப் போட்டாலும், அந்தப் புகார்களைப் பகுப்பாய்வு செய்யும் குழுவே இந்த சிண்டிகேட் நபர்கள் சம்பந்த புகார்களை எடுத்து ஓரம்கட்டிவிடுகின்றனர். 

ஜனநாயகம் உயிரோட்டமாக இருக்கும் கட்சி தி.மு.க என்று சொல்லப்பட்டாலும் ஸ்டாலினின் இந்த சிண்டிகேட் கலாசாரத்தினால் கீழ்மட்ட நிர்வாகிகள் யாரும் வளரமுடியாத நிலையே உள்ளது. தனக்கு வேண்டிய மாவட்டச் செயலாளர்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் ஸ்டாலின், தனக்கு வேண்டப்படாதவர்கள் மீது பாராமுகம் காட்டுவது கட்சியின் வளர்ச்சியைப் பாதித்து வருகிறது என்று புலம்புகிறார்கள். திருச்சி சிவா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சேலம் ராஜா, பவானி ராஜேந்திரன், பெரியகருப்பன் என்ற பெரிய பட்டியலே ஸ்டாலினால் புறக்கணிக்கப்படும் நிர்வாகிகள் பட்டியிலில் உள்ளது. இவர்களில் பலர் திறமையிருந்தும் ஸ்டாலினைச் சுற்றி உள்ள சிண்டிகேட் அணியின் ஆட்டத்தால் ஓரம்கட்டப்பட்டு வருகிறார்கள். கலந்துரையாடல் நடத்தும் ஸ்டாலின் தன்னைச் சுற்றியுள்ள இந்த சிண்டிகேட் அணிக்கு முதலில் முடிவுகட்டிவிட்டு, இந்தக் கலந்துரையாடலை நடத்தினால் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இல்லையென்றால் இதுவும் ஒரு சடங்காகவே அமைந்துவிடும் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள். 

ஸ்டாலின்

கலந்துரையாடலில் பேசிய ஸ்டாலின், “அண்ணாவின் கடும் உழைப்பினால்தான் தி.மு.க ஆட்சி கட்டிலில் ஏறியது. அதே போன்ற ஒரு உழைப்பை நீங்கள் காட்டினால்தான், ஆட்சியை நாம் கைப்பற்ற முடியும்” என்று பேசியுள்ளார். அண்ணா திறமைக்கு மரியாதை கொடுத்தார், அதை நீங்களும் பின்பற்றினால் போதும் தளபதி... ஆட்சி கட்டிலில் நாம் அமர்ந்துவிடலாம் என்ற கமென்ட் அறிவாலயம் வாயிலில் கேட்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement