Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிபர் ரீகன் சந்திக்க நினைத்த அமெரிக்காவின் செல்லப் பிள்ளை ஒசாமா  - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 3

அமெரிக்கா

'நீ பற்ற வைத்த நெருப்பொன்று 
பற்றி எரிய உனை கேட்கும்...
நீ விதைத்த வினையெல்லாம்
உனை அறுக்கக் காத்திருக்கும்...'

இந்த வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... அமெரிக்காவுக்குப் பொருந்தும்! அமெரிக்கா விதைத்த ஒசாமா என்ற விதைதான் 2001-ல் அமெரிக்காவை அறுத்தது என்பது மட்டுமன்றி சர்வதேச சாம்ராஜ்யத்தின் அதிகார அரசியலையும் அசைத்துப்பார்த்தது. ஆப்கான் - சோவியத் போரில் ஆதாயம் தேட அமெரிக்கா வளர்த்த செல்லப்பிள்ளைதான் ஒசாமா பின்லேடன். இதன் உச்சம் என்னவெனில், அமெரிக்க அதிபர் ரீகன், ஒசாமாவை ரகசியமாகச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் சந்திப்பு நடக்காமல் போனது. இந்த அளவுக்கு அமெரிக்கா ஒசாமாவுக்கு உதவியது. இவ்வளவு பெரிய தேசம் ஏன் இந்தத் தனிநபருக்கு உதவ வேண்டும் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுவது நியாயமானதுதான். அதற்குப் பதில்தான் ஒசாமா பின்லேடன் எனும் சவுதி அரேபிய இளைஞனின் கதை.

ஒசாமா பின்லேடன், முகமது பின்லேடனின் மகன். ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் ஒசாமாவின் தந்தை. ரஜினி படங்களில் வருவதுபோல கூலித்தொழிலாளியாக இருந்து கட்டடத்தொழிலில் வளர்ந்து ராஜ குடும்பத்துக்கு இணையான அந்தஸ்துக்கு வளர்ந்தவர். ஒசாமா மெதினாவில் பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இளைமைக்காலம் முழுவதும் தாயின் அரவணைப்பில்தான் ஒசாமா அதிகம் வளர்ந்தார். திருமணம் ஆனபிறகு மேனஜ்மென்ட் படிக்கச் சென்றார். இதில் தேறிவிட்டால், தந்தையின் தொழிலைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்த ஒசாமா, உலகின் நம்பர் 1 தீவிரவாதியாக மாறினார்.

இந்த மாற்றம் ஜெட்டா பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்றபோது ஏற்பட்டுள்ளது. அங்கு மதப்பாடங்களில் ஒசாமாவின் கவனம் அதிகமானது. இதற்கிடையில், ஒசாமாவின் தந்தை இறந்து போக 4 மனைவிகளும், 52  குழந்தைகளும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஒசாமா தந்தையின் நண்பரான சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் ஒசாமாவின் குடும்பத்துச் சொத்துகளை நிர்வகிக்க கமிட்டி அமைத்துத் தந்தார். அதிலும் ஒசாமாவின் சகோதரர் அலிக்கு உடன்பாடு இல்லாததால், அவருக்குச் சொத்துகளைப் பிரித்துக்கொடுத்து மற்றவை கமிட்டியின் கண்காணிப்பில் இருக்குமாறு வழி செய்து கொடுத்தார்.

பின்லேடன்

தந்தையின் கனவான அரசியலில் ஈடுபடுவதில் ஒசாமாவுக்கு இஷ்டமில்லை; பிசினஸும், இஸ்லாம் வளர்ச்சியும்தான் அவரது பிரதானக் கனவாக இருந்தது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட இஸ்லாம் நண்பர்களுக்கு உதவி வந்தார். இப்படியே இஸ்லாம் நண்பர்களுக்கு உதவியபோதுதான் ஆப்கான் - சோவியத் போரில் உதவ பெஷாவர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்தவர்களிடம் ''நாம் ஏன் தயங்குகிறோம்... நம்மால் அவர்களை வீழ்த்த முடியாதா'' என்ற கேள்வியை முன்னிறுத்தினார். அதற்கு '' போராளிகள் குறைவு; முறையான ஆயுத  பயிற்சி இல்லை'' என்பது போன்ற காரணங்கள் பதிலாய் வர... ''நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார் ஒசாமா. 

ஜோர்டானில் இருந்த பேராசிரியர் அப்துல்லாவின் உதவியை நாடினார். அவரும் இஸ்லாம் வளர்ச்சிக்காகப் போராளிகளைத் திரட்டி வந்தவர். ஒசாமாவின் கனவு இஸ்லாம் தேசம். இதற்காக எவ்வளவு உழைத்தார் என்றால், அமெரிக்கா ஆரம்பித்து பிலிப்பைன்ஸ் வரை இளைஞர்களை ஒன்று திரட்டினார். இந்த நடவடிக்கைகளால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த சி.ஐ.ஏ. பின்லேடனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஏற்படுத்தித் தந்த தனி அமைப்பு போல செயல்படத் தொடங்கியது. சி.ஐ.ஏ-வின் பாதுகாப்பில்தான் அமெரிக்காவுக்குப் பேராசிரியர் அப்துல்லா சென்றார் என்பதும், அனைத்து மாகாணங்களிலும் ஆதரவு திரட்டினார் என்பதும் வரலாறு. 

எந்த ஒரு காரியத்திலும் பக்கா ஸ்கெட்ச் இல்லாமால் களமிறங்க மாட்டார் ஒசாமா. கிட்டத்தட்ட ஒரு நாடு, போருக்கும், பட்ஜெட்டுக்கும் எப்படித் தயாராகுமோ அப்படி ஒரு கள ஆய்வு நடத்துவது, தாக்குதல் நடத்தும் இடத்துக்கு ஆட்களை அனுப்பி நிலவரங்களை ஆராய்ந்து களமிறங்கி அடிப்பது... என ஒசாமா ஒரு சி.இ.ஓ போல செயல்பட்டார். இதற்கிடையில் பேராசிரியர் அப்துல்லாவுடன் கருத்து வேறுபாடு முற்றியது. ஆப்கன் முஜாகிதின்கள் ஒசாமா தலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக சோவியத்தை விரட்டத் தொடங்கினர். சோவியத் அதிபரும் தோல்விகளால் உடைந்துபோனார். அமெரிக்காவின் நட்புறவு சோவியத்துக்கு இல்லை. போதாக்குறைக்கு ரீகன் ''சாத்தான் தேசம்'' என நேரடியாக விமர்சித்தார். ஆனால், பின்வாசல் வழியாக ஆப்கானுக்குப் பணம் தருவதை மட்டும் அமெரிக்கா நிறுத்தவேயில்லை.

பேராசிரியர் அப்துல்லா சுயவிளம்பரம் தேடுகிறார் என்று அவரது கதையை ஒசாமாவே முடித்தார். பின்னர் இஸ்லாம் தேசத்தைக் கனவாகக் கொண்டு இயங்கிவந்தார் ஒசாமா. ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார் ஒசாமா. அமெரிக்காவின் குள்ளநரித்தனம் தெரிந்திருந்ததால், தன்னைப்பற்றிய விஷயங்களை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார். வளைகுடா தேசங்களின் மீது அமெரிக்காவின் பார்வை விரிந்தது. இஸ்லாமிய தேசங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒசாமாவுக்கு எரிச்சலூட்டின. அப்போதுதான் ஷேக்கை தன்னுடன் இணைத்து அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்ட நினைத்தார் பின்லேடன். 

வர்த்தக மையம்

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ஐ.நா சபை உள்ளிட்ட முக்கியமான 7 இடங்களில் தாக்குதலுக்கான ஸ்கெட்சை தயார் செய்தனர். 1993- ல் உலக வர்த்தக மையத்தின் தரைத்தளத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி தனது ஸ்கெட்சை தொடங்கிவைத்தார் ஒசாமா. அப்போது அதிபர் ஜார்ஜ் புஷ். அன்று 6 பேர் இறந்தனர். அப்போது ஜார்ஜ் புஷ் 'தீவிரவாத அமைப்புகளைக் கண்டறிந்து வேரறுப்போம்' என்றார். ஆனால், என்ன செய்யப்போகிறோம் என்றத் தெளிவில்லாமல் இருந்தார். அதன் பின் 8 வருடங்கள் கழித்து ஜார்ஜ் புஷ்ஷின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபரான பிறகு, 2001 -ல் ட்வின் டவர் தாக்குதல் வரை அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

சிறிய அளவிலான தாக்குதலுக்கே பெரிய ஸ்கெட்ச் போடும் ஒசாமா. ட்வின் டவர் தாக்குதலுக்குப் போட்ட திட்டம் பிரமிக்க வைக்கும் விதமானது. அமெரிக்காவின் சர்வதேசப் பிம்பத்தை உடைத்துப்பார்த்த இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது? அன்று அங்கிருந்தவர்களின் நிலை என்ன? குதிரையில் இருப்பது போன்ற சுமாரான ஒரு போட்டோவாக மட்டுமே இருந்த ஒசாமா பின்லேடன் முகம் காட்டத்தொடங்கியது பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்....

தொடரின் முந்தைய பகுதிகளுக்கு க்ளிக் செய்க | பாகம் 1 | பாகம் 2 |

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement