ஜானகி, பன்னீர்செல்வத்தை விஞ்சினார் எடப்பாடி பழனிசாமி... ஓராண்டில் என்ன சாதித்தார், எதிலெல்லாம் சறுக்கினார்? #OneYearofEPS | Edappadi Palanisamy Overtakes Ex CM Janaki and OPS. What did EPS do in One Year

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (16/02/2018)

கடைசி தொடர்பு:16:15 (16/02/2018)

ஜானகி, பன்னீர்செல்வத்தை விஞ்சினார் எடப்பாடி பழனிசாமி... ஓராண்டில் என்ன சாதித்தார், எதிலெல்லாம் சறுக்கினார்? #OneYearofEPS

எடப்பாடி பழனிசாமி

ஜானகி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விஞ்சிவிட்டார்... கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வரிசையில் இணைந்துவிட்டார்... ஆம், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஓராண்டை நிறைவு செய்துவிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என அடையாளம் காட்டப்பட்டபோது, 'இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாள்கள் தாக்குப்பிடிக்கும்' என்ற கேள்வி பரவலாக ஒலித்ததைக் கேட்க முடிந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி ஓராண்டு ஆட்சியை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்க தடுமாறியது ஆட்சி. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 98 பேர் எதிர்க்க, மீண்டும் ஆட்டம் கண்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வரை மாற்ற வேண்டும் எனச் சொல்லப்பட்டபோது கவிழ்ந்து விடும் என்று உறுதியாக நம்பப்பட்டது. இத்தனை போராட்டத்தை மீறி ஓராண்டை தாக்குப்பிடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்றும், அ.தி.மு.க.வுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு நிச்சயம் அ.தி.மு.க.வினரிடமே சரியான பதில் இருக்காது.

இந்த ஓராண்டில் கட்சி, ஆட்சி, நிர்வாகம் என மூன்றின் தலைமைப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஓராண்டில் இந்த மூன்றிலும் என்னவெல்லாம் சாதித்தார், எதிலெல்லாம் சறுக்கினார் என்றால் சறுக்கிய பட்டியலே பெருமளவு நீள்கிறது.

எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என சொந்த ஆளுமையால் வழிநடத்தப்பட்ட ஆட்சி இப்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. 'ஆளுமையான தலைமைத்துவம் இல்லை; நிர்வாகத் திறன் இல்லை' என்பது கடந்த ஆண்டு எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றபோது இருந்த விமர்சனம். ஓராண்டு ஆட்சிக்குப் பின்னரும் அந்த விமர்சனம் அப்படியே இருப்பது என்பது நிச்சயம் எடப்பாடி பழனிசாமியின் தோல்வி. 'கொள்கை, கோட்பாடுகளைக் கடந்து, தலைமையையே முக்கிய அம்சமாக பாவிக்கும் கட்சி அ.தி.மு.க.' எனச்சொல்வார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வரானதன் மூலம் அதிலும் மாற்றம் நடந்திருக்கிறது. கொள்கை, கோட்பாடு, தலைமை என எதையும் முக்கிய அம்சமாக பாவிக்காத கட்சியாக, ஆட்சியாக இந்த ஓராண்டை கடக்கச் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும், டெல்லி வரை சென்று இடைவிடாது போராடியபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை. பெரும் பதற்றத்தை டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தியபோது, எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தார். நெடுவாசலும் கதிராமங்கலமும் பற்றி எரிந்தபோது கவலை கொள்ளவில்லை. மாட்டிறைச்சி தடை என மத்திய அரசு சொன்னபோது, 'எங்கள் உணவைத் தடை செய்ய நீ யார்?' எனக் கேட்காமல், அமைதியாகக் கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்ற போராடினார்.  ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த `நீட்' தேர்வுக்கு எதிராக வாய்கூட திறக்காமல் அமைதி காத்தார். மாநில உரிமைகள் பறிபோக அமைதியாய் வேடிக்கைப் பார்த்தார். ஒகி புயல் பாதிப்புகளைப் பார்வையிடக்கூட காலதாமதம் செய்தார். இவை எல்லாம் போதாது என்று அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில்  வருமானவரித்துறை சோதனை, குட்ஹா ஊழல், பறிபோன மாநில உரிமைகள் என அத்தனை பிரச்னைகளையும் ஓராண்டில் பார்த்துவிட்டது போன்ற உணர்வே விஞ்சுகிறது. நாட்டு மக்கள்மீது சிறிய அளவு சிந்தனைகள்கூட இல்லாததைப் பார்க்க முடிகிறது.

எடப்பாடி பழனிசாமி

ஆட்சியிலும் நிர்வாகத்திலும்தான் இப்படி. கட்சியில் என்ன செய்தார் என்றால், அங்கும் சறுக்கல்களே அதிகம். பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோது, 11 எம்.எல்.ஏ-க்கள் ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவர்களை சரிசெய்து பதவி கொடுத்து, கை குலுக்கி இணைந்தபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் முதல்வருக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்து, பிரச்னையை சரி செய்ய முயன்றது.

ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்புகளை மட்டுமே பெற்றிருந்த தினகரனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவரை ஒழிப்பதற்கு பதில், அவரை வளர்த்துவிட்டது. தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, திஹார் சிறைவாசம், அ.தி.மு.க-வில் அதிகாரம் கைவிட்டுப் போனது என அவருக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொண்ட தினகரன் வளரவே செய்தார். விளைவு தமிழகத்தில் மிகப்பெரிய பலம் கொண்ட அரசியல் கட்சி, அடுத்தடுத்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் வலிமை கொண்ட அரசியல் கட்சி என்ற பெருமை கொண்டிருந்த அ.தி.மு.க. இடைத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதுவும் சுயேச்சையாய் களமிறங்கிய தினகரனிடம் ஆளுங்கட்சி தோற்றது.

இந்த ஓராண்டில் பிரச்னைகள் மட்டும்தானா, சாதனைகள் இல்லையா என்றால் நிச்சயம் ஒன்று இரண்டு இருக்கத்தான் செய்கிறது. அதில் முக்கியமானது கல்வித்துறையில் செய்த சில மாற்றங்கள். அதை விட முக்கியமானது ஒன்று இருக்கிறது, ஆட்சியை இழந்துவிடும் சூழலிலும், இழந்துவிடாமல் இறுகப்பற்றி சமாளித்து வருவதுதான் அது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்