வேடந்தாங்கல் ஓகே... சென்னைக்கு அருகிலிருக்கும் கரிக்கிலி சரணாலயம் போயிருக்கீங்களா?

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இச்சரணாலயம் பறவைகளுக்கு உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தமிழகச் சுற்றுப்பயணத்தில் வேடந்தாங்கல் நிச்சயமாக இடம்பெறும். ஆனால், வேடந்தாங்கலுக்கு அருகில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் பற்றி அதிகமானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படாளம் கூட்ரோட்டிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிக்கிலி பறவைகள் சரணாலயம். சாலையில் உள்ள நுழைவாயிலில் எழுதப்பட்ட எழுத்துகள் ஆதிகாலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தன. நுழைவாயிலில் இருந்தே பாதைகள் பரிதாபத்தின் உச்சகட்டத்தில் இருந்தது. ஒரு முறை போடப்பட்ட சாலை மறுமுறை போடவே இல்லை போல. எல்லாவற்றையும் கடந்து சரணாலயத்தின் முகப்புப் பக்கத்திற்குச் சென்றோம். அங்கே சரணாலயப் பாதுகாப்புக்கென அதிகாரிகள் யாரும் இல்லை. 

கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

சரணாலயத்தில் சிமென்ட் கற்களால் பதிக்கப்பட்ட சாலையில் மெதுவாக நடந்தோம். ஐம்பது அடிதூரம் நடந்து சென்று ஓய்வு எடுப்படுப்பதற்காக அமைக்கப்பட்ட திண்ணையில் அமர்ந்தோம். சிறிது தூரத்தில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சரணாலயத்துக்குள் சர்வ சாதாரணமாக மது அருந்திக் கொண்டிருந்தனர். நம்மைக் கண்டதும் மது பாட்டில்களை மறைத்துக்கொண்டு வெறும் தண்ணீர் பாக்கெட்டுகளை குடிப்பதுபோல நடித்துக்கொண்டிருந்தனர். வன உயிரினச் சட்டம் அங்கு காற்றில் பறந்துகொண்டிருந்தது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு உள்ளே சென்றோம். பறவைகள் உருவத்தில் பொம்மைகள் அமைத்து அதில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தண்ணீர்க் குழாய்களிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை. மேலும், பறவைகள் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பொம்மைகள் அனைத்தும் சிதிலமடைந்து இருந்தன. நல்லவேளையாக நாங்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு சிறிது தூரம் நடந்து பறவைகள் பார்க்கும் கோபுரத்தை அடைந்தோம். அக்கோபுரம் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டிருந்தது. அதிக எடையுள்ள ஆட்கள் ஏறினால் நிச்சயமாகக் கோபுரம் விழுந்துவிடும் அளவிற்கு துருப்பிடித்துப் போயிருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு அதன்மீது ஏறி பறவைகளைப் பார்வையிட்டோம். அங்கே ஒன்றிரண்டு பறவைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதையும் கேமராவில் பதிவேற்றிக் கொண்டோம். கீழே இறங்கி சிறிது தூரம் கடந்துசென்றோம். 

கரிக்கிலி நடைபாதை

நாம் கடந்த இடம் படு பயங்கரமாக இருந்தது. இந்தச் சரணாலயத்திற்கு எந்தத் தடுப்பும் இல்லை. நாங்கள் நின்றிருந்த இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. குடும்பத்தை அழைத்துச் செல்ல கரிக்கிலி பறவைகள் சரணாலயம் பாதுகாப்பானதாக இருக்காது என்றே தோன்றியது. அதற்குக் காரணம், அந்த அடர்த்தியான நடைபாதையில் அசாதாரணமான தோற்றத்தில் இருந்த உள்ளூர் வாலிபர்களின் செயல்கள். அவர்களைத் தாண்டி அடுத்த பறவைகள் பார்க்கும் கோபுரத்தை சென்றடைந்தோம். முதல் கோபுரம்தான் துருப்பிடித்து இருந்தது, இதாவது நன்றாக இருக்கும் என எண்ணி அருகில் சென்றோம். பாதி படியேறிய பின்னர்தான் இந்தக் கோபுரத்திற்கு முதல் கோபுரமே பரவாயில்லை எனத் தோன்றியது. ஆம், பறவைகளைப் பார்ப்பதற்காகப் போடப்பட்டிந்த கோபுரத்தின் கால்மிதிப் பாகம் உடைந்து மரத்தால் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மீது ஏறினால் நிச்சயம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றே தோன்றியது.  அடுத்தது பறவைகளை அமர்ந்து பார்க்கும் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிகளும் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்பதுபோல அமைந்திருந்தன. நாங்கள் கடந்து வந்த பாதை முடியவே மீண்டும் நுழைவாயிலுக்குத் திரும்பினோம். 

சிதைந்த பொம்மைகளும் கோபுரமும்

இதை மேம்படுத்துவதற்காகச் செலவு செய்யப்பட்ட பெருந்தொகை நிச்சயம் வீண்தான் என்பதுபோல மனதில் தோன்றியது. 2014-ம் ஆண்டு வேடந்தாங்கல் சரணாலயத்தைப் பார்வையிட்ட அப்போதைய வன உயிரினக் காப்பாளர் கீதாஞ்சலி கரிக்கிலி சரணாலயத்தை மேம்படுத்துவதாக சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். "வேடந்தாங்கலுக்கு அருகில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேடந்தாங்கல் சரணாலையத்திற்கு வரும் தண்ணீரை விட கரிக்கிலி சரணாலயத்திற்கு வரும் நீரின் வரத்துக் குறைவாக உள்ளது. எனவே, கரிக்கிலி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்பதுதான் அது. 2014-ம் ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றனபோலும். வேடந்தாங்கல் ஏரியைவிட கரிக்கிலி ஏரியின் தண்ணீர் தூய்மையாகத்தான் இருக்கிறது. ஆனால், பறவைகள் வரவில்லை. பறவைகளுக்கேற்ற சூழலும் அங்கு நன்றாகத்தான் இருந்தது.

பறவைகள்

இந்தச் சரணாலயத்தை மேம்படுத்தினால் நிச்சயமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இதுதவிர, அருகில் உள்ள வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அருகில் உள்ள கரிக்கிலிக்கு வராததற்கான காரணத்தை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். சரணாலயத்திற்குப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். வனப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாகப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சரணாலயம் பாதுகாப்பைத் தரும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தருவதாக இருக்கக் கூடாது. இதையெல்லாம் வன உயிரினக் காப்பகம் செய்யுமானால் நிச்சயமாக வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இணையாக கரிக்கிலி பறவைகள் சரணாலயம் புகழ்பெற்று விளங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!