வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (18/02/2018)

கடைசி தொடர்பு:08:29 (18/02/2018)

ஒரே ரூபாயில் மெகா மருத்துவக் கண்காட்சி..! - அசத்தும் அரசுக் கல்லூரி மாணவர்கள் !! 

மருத்துவக் கண்காட்சி

எல்லாமே உலகமயம், தாராளமயம் என ஆகிவிட்டபிறகு பசுமையும் அமைதியும் மனிதர்களின் தேடல் பட்டியலில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டது. சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது உடனடித் தேவை எனும் நிலையில், இயற்கை உணவு, மரபு மருத்துவம் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் அதிகரித்துவருகின்றன. சென்னை, அண்ணாநகரில் உள்ள அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்களாக நடந்துவருகிறது, ’நலம் வாழ்- 2018’ சித்த மருத்துவக் கண்காட்சி. சம்பிரதாயமான தொடக்க நிகழ்வுகளை அடுத்து, முதல் நாளிலேயே மக்கள் கூட்டம்கூட்டமாக வந்தபடி இருந்தனர். நாமும் வரிசையாக உள்ளே நுழைந்தோம். 

வரவேற்பில் இருந்த மாணவர்கள், பார்வையாளரின் பெயர், விவரத்தைக் கேட்டு எழுதிக்கொள்வதுடன், கருத்துகளை எழுதித்தருவதற்கான துண்டுச்சீட்டையும் கையில் கொடுத்தனுப்பினார்கள். 

சித்த மருத்துவக் கண்காட்சி

அரங்கில் நுழைந்தவுடனேயே தேயர் கருவிகள் என புரியாததைப் போல பெரும்பாலானோர் திருதிருவென முழித்தனர். அவர்களிடம் அங்கிருந்த சித்த மருத்துவ மாணவர்கள் ஆர்வத்தோடு விளக்கம் அளித்தார்கள். அங்கு வைக்கப்பட்டிருக்கும் மூலிகைகள், சித்த மருந்துப் பொருட்கள், மரபு உணவுவகைகள், அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றி ஒவ்வொரு மேசைக்கும் ஒரு மாணவராக நின்று பொறுமையாக விளக்கம் அளித்தனர். விளக்கெண்ணெயின் பயன் அதிகமாக இல்லாத சென்னைவாசிகளுக்கு, ஆமணக்கு விதை அதிசயமாகவும் இருக்கலாம்! 

கொசுவிரட்டிகள் என ஒரு மேசையில் எட்டு வகையான தாவரங்களின் பாகங்களை வைத்திருந்தனர். வைரஸ் எதிர்ப்பு குணம் கொண்ட தாவரங்களையும் பெரிய பட்டியல் போட்டிருக்கின்றனர். 

சித்த மருத்துவக் கண்காட்சி

அதே வரிசையில், அறுவைச்சிகிச்சைக் கருவிகள் எனும் தலைப்பைப் பார்த்துமே வியந்துபோய் நின்றவர்களிடம், சித்த மருத்துவத்திலும் அறுவைச்சிகிச்சை செய்யப்படுவது குறித்து மருத்துவ மாணவர்கள் விவரித்தனர். 

சித்த மருந்துகளின் வகைகளான பற்பம், லேகியம், செந்தூரம் என ஒவ்வொன்றையும் எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன், அதற்கான அடுப்பு, உரல், அம்மை, உலக்கை போன்ற கருவிகளையும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் உரல், உலக்கைகளை எடுத்துப் பார்த்து தங்களின் சிறுவயது காலத்துக்குள் மூழ்கினர். 

சித்த மருத்துவக் கண்காட்சி

மூலிகைக் குடிநீரைத் தயாரித்து, விற்பனைக்கும் வைத்திருந்தனர். வெட்டி வேர், துளசி, பச்சைக் கற்பூரம், நன்னாரி, ஏலக்காய், அதிமதுரம், சிவப்பு சந்தனம், இலவங்கம், ஓமம், கற்பூரவள்ளி ஆகியவை இந்த மூலிகைக் குடிநீரில் கலந்துள்ளன. எப்படி கலப்பது என்பதை சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள், கேட்கும் அனைவருக்கும் ஆசிரியரைப் போல சொல்லித்தருகிறார்கள், கொஞ்சம் சலிப்பில்லாமல்! 

சித்த மருத்துவக் கண்காட்சி

அஞ்சறைப்பெட்டி எனும் ஓர் அரங்கில், மிளகு, சீரகம், தனியா, பெருங்காயம், சுக்கு, கடுகு, ஓமம் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை தனித்தனியாகப் படவிளக்கத்துடன் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். பக்கத்திலேயே, பல்லாண்டுவாழ் பயனான உணவுகள் எனும் அரங்கில், மரபுப் பயிர்களைப் பற்றிய படவிளக்கமும் செய்யப்பட்டுள்ளது.  சிவப்பு அரிசி மற்றும் திணை, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை உட்பட்ட பல உணவுப்பயிர்களின் மகிமையை எடுத்துக்காட்டுகிறார்கள். 

சித்த மருத்துவக் கண்காட்சி

மூட்டுவலிப் பிரச்னையைத் தீர்க்கும் ’சைவ ஆட்டுக்கால்’ சூப் தயாரிக்கப் பயன்படும் ஒரு வகைக் கிழங்கையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பையும் முதியவர்கள் மட்டுமின்றி, வருங்கால முதியவர்கள் என்பதைப் போல நிறைய 40+ வயதினரும் கவனத்தோடு பார்த்துச்சென்றனர். இந்தக் கிழங்கு எங்கே கிடைக்கும் எனக் கேட்டவர்களில் பலரும், அந்த அரங்குக்கு மேல் ஏற்காடு, கொல்லிமலையில் கிடைக்கும் எனும் தகவலைப் படிக்கக்கூட அவகாசம் இல்லாததைப்போல ஆர்வமிகுதியை வெளிப்படுத்தினர். 

சித்த மருத்துவக் கண்காட்சி

கெடுதல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பொடி, நரை தைலம், கூந்தல் எண்ணெய், குளியல் பொடி போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத்  தயாரிப்பது எப்படி என்று கேட்பவர்களிடம், மருத்துவ மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். அந்த அரங்கத்துக்கு வந்துபோகும் பெண்ணோ ஆணோ இந்த பொருள், தொடர்ச்சியாகக் கிடைக்குமா எனும் கேள்வியைக் கேட்காமல் இருப்பதில்லை! 

மிளகு, தேன், மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், சர்க்கரை ஆகிய பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என ஒரு அரங்கில் விவரிக்கிறார்கள். 

தரைத்தளத்தின் கடைசிப் பகுதியில் உணவுப்பொருட்கள் அரங்குகளைக் கடந்தவுடன், கிரீன் அவுஸ் எனப்படும் சித்த மருத்துவக் கல்லூரியின் மூலிகைப் பண்ணையையும் பார்வைக்குத் திறந்துவிட்டுள்ளனர். அதையடுத்து அடுத்த கட்டத்தில் தரைத்தளத்தில் நெல் ஜெயராமன் குழுவினரின் தமிழகத்தின் தொன்மையான மரபு நெல்வகைகளைக் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அரிசிக்குப் பின்னால் இத்தனை பெயர்களா என ஆச்சர்யத்துடன் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 

மனநல சிகிச்சை தொடர்பான சித்த மருத்துவ முறைகளுக்குத் தனியாக அரங்கு இருக்கிறது. பக்கத்திலேயே யோகாவுக்கும் பெரிய அரங்கு உண்டு. காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள், பயிற்சிவிளக்கமும் செய்துகாட்டுகிறார்கள், வருங்கால சித்த மருத்துவர்கள். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அருகில் யோகாவுக்கென இருக்கும் தனி கல்லூரியின் மாணவர்கல் அல்ல, முழுக்க முழுக்க சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்களே, யோகாவை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். 

அடுத்ததாக, ’வேண்டியவன் யார், வேண்டாதவன் யார்’ எனும் அரங்கத்தில், பல்வேறு நோய்களுக்கு எந்த உணவு ஆகும், ஆகாது என்பதைத் தனித்தனியாகப் படங்களோடு பட்டியல் இட்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, மூலநோய்க்கு சேர்த்துக்கொள்ளவேண்டியவை பட்டியலில், கருணைக்கிழங்கு, மோர், கீரை வகைகள், வெண்ணெய் ஆகியனவும்; தவிர்க்கவேண்டியவை பட்டியலில் காரம், சூடான பொருட்கள், துரித உணவுகள் ஆகியனவும், அல்சருக்கு வேண்டியவை மணத்தக்காளி, சுண்டை, புடலை; ஆகாதவை- எண்ணெய், தேங்காய், கொள்ளு ஆகியன என பட்டியலிடப்பட்டுள்ளன. வாதம், நீரிழிவு என மற்ற நோய்கள் தொடர்பானவை கவனத்தை ஈர்த்தன. 

அதைத் தொடர்ந்து, ’அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை’ அரங்கில் என்ன இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ’ஒற்றடம் முதல் ஒட்டும் அட்டைவரை’ அரங்கில் ஒற்றட முறைகளைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டது போல இருக்க, அட்டையை வைத்து ரத்தத்தை உறிஞ்சும் சிகிச்சை முறையைப் பற்றி விளக்கி, பயத்தை உண்டாக்கி, போக்கியும் விட்டார்கள். 

நிறைவாக இளவல்களின் இனிய உலகம் அரங்கில், திண்பண்டங்களைப் பார்த்தாலே இனிப்பாக போதும் என்றபடி இருக்கிறது. 

இத்தனையையும் செய்தவர்கள், முழுக்க முழுக்க மாணவர்களே என்பதுதான் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் சித்த மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் ஆண்டைக் குறிப்பிடும்வகையில், தனித்தனியாக பெயர்கள் சூட்டப்படுகின்றன. 2013-ல் சேர்ந்த மாணவர்கள் ‘மழைச்சாரல்’ என அழைக்கப்படுகிறார்கள். ஐந்தாம் ஆண்டுக்கு இவர்கள் வரும்போது ‘மழைச்சாரல்’ மாணவர் பேரவை என்றாகும். அதன்படி இந்த ஆண்டு ’மழைச்சாரல்’ மாணவர்கள் கல்லூரியின் அனைத்து மாணவர்களின் நன்கொடையோடு லட்சக்கணக்கில் செலவழித்து, ஒரு மெகா எக்ஸ்போவை நடத்திவருகிறார்கள். 
வாய்ப்பிருப்பவர்கள், பிப்.18ஆம் தேதி மாலைவரை நடக்கும் சித்த மருத்துவக் கண்காட்சியைக் கண்டும், கெடுதியில்லாத இயற்கைப்பொருட்கள் உணவுவகைகளைச் சுவைத்தும் மகிழலாம். நம்முடைய அரசுக் கல்லூரி மாணவர்களின் சாதனைகளை, நம்மையன்றி வேறு யார் ஆதரிப்பார்கள்? 

முக்கியமான சேதியை சொல்லித்தானே ஆகவேண்டும்.. இந்தக் கண்காட்சியைக் கண்டு பயனடைவதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா, ஒரே ரூபாய்தான் ! 


டிரெண்டிங் @ விகடன்