அ.தி.மு.க-வுடன் இணக்கம்: மோடி சென்னை வருகையின் நோக்கம் என்ன? | Whether any change will happen due to PM Modi's visit to Chennai to attend TN government's function?

வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (24/02/2018)

கடைசி தொடர்பு:09:45 (24/02/2018)

அ.தி.மு.க-வுடன் இணக்கம்: மோடி சென்னை வருகையின் நோக்கம் என்ன?

மோடி

Represented image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் நடைபெறவுள்ள 'அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை'த் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (24.02.18) சென்னை வருகிறார். மோடியின் இந்தப் பயணம், தமிழக பி.ஜே.பி. மற்றும் அந்தக் கட்சியுடனான அ.தி.மு.க-வின் உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அரசியல் பார்வையாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழகத்தில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பு முடிவுசெய்துள்ளார். மோடியின் நண்பரும், மற்றொரு தமிழகத் திரையுலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், அடுத்த ஓரிரு மாதங்களில் தன் அரசியல் கட்சிப் பெயர், கொடி உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளார்.

ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகி விட்டார். தற்போது, அவருக்கு மேலும் ஓர் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு, கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. 

கமல் மக்கள் நீதி மய்யம்ஜெயலலிதா இருந்தவரை பி.ஜே.பி-யுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தாலும்கூட, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016-ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டசபைத் தேர்தலிலும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஜெயலலிதா எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி சேராமல், அ.தி.மு.க-வை தனித்துப் போட்டியிடவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, முதல்வரானார். அ.தி.மு.க-வில் அவரால் வெற்றிபெற்றவர்கள்தான், இப்போது முதல்வராகவும், துணை முதல்வராகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களாகவும் வலம் வருகிறார்கள். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரும். தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்" என்று தெரிவித்து வருவதுடன், அதற்கான முன்முயற்சிகளில் உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வைக் கூட்டணி சேர்த்துக்கொண்டு, தமிழகத்தில் தங்களுக்கான தனியான ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என்று பி.ஜே.பி. தலைமை கருதிவந்த நிலைப்பாட்டுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. 

அண்மையில் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எடப்பாடி தரப்பிலிருந்தும் மோடிக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜெயலலிதாவின் படத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாலும் பிரதமர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று பி.ஜே.பி. நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இருசக்கர வாகனங்கள்

இந்தச் சூழ்நிலையில்தான் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் சார்பில் நடைபெறவுள்ள அம்மா இருசக்கர வாகனத் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமரின் சென்னைப் பயணத் திட்டம் முடிவாகிவிட்ட நிலையில், அவர் தமிழக அரசின் விழாவில் மட்டும்தான் பங்கேற்பாரா அல்லது ரஜினி போன்ற வேறு யாரையும் சந்திப்பாரா என்பது சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது.

'தினத்தந்தி' நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க பிரதமர் சென்னை வந்தபோது, கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், அவரின் மனைவி தயாளுவையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தி.மு.க-வுடனும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கலாம் என்பதே பி.ஜே.பி. மேலிடத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், பி.ஜே.பி-யுடன் எதிர்காலத்தில் கூட்டணி என்பது, தமிழகத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தி.மு.க அனுதாபிகளிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கும் என்பதால், தி.மு.க. தரப்பில் இருந்து பி.ஜே.பி-க்கு பச்சைக்கொடி காட்டுவது போன்ற சூழல் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிஇதனிடையே கமல்ஹாசனை புகழ்ந்து ரஜினி பேட்டியளித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த், பி.ஜே.பி. பின்னணியில்தான் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்று பரவலாகப் பலரும் கூறிவந்த நிலையில், அவர் காட்டும் சுணக்கம், பி.ஜே.பி-க்கு உடன்பாடாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கு முன்னர் கமல் அதிரடியாகக் கட்சி தொடங்கிவிட்ட நிலையில், அ.தி.மு.க-வைத் தங்கள் பக்கம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும்நோக்கிலேயே பிரதமரைச் சென்னை விழாவில் பங்கேற்க பி.ஜே.பி. மேலிடம் முடிவெடுத்து, இந்த விழா அவசரமாக ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எடப்பாடி அறிவித்தார். ஆனால், அவர் வரவில்லை. ஜெ. படத்திறப்பு விழாவில் சட்டசபை வளாகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி மோடி பங்கேற்காமல் தவிர்த்தார். ஆனால், இருசக்கர வாகனத் திட்டம் மகளிருக்கானது என்பதாலும், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் விழா என்பதாலும், இவ்விழாவில் பங்கேற்க மோடி ஒப்புக்கொண்டதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இதுபோன்ற அரசு விழாக்களில் கலந்துகொண்டு, மத்திய அரசின் திட்டங்களையும், தமிழகத்தின் நலனில் பி.ஜே.பி. அக்கறை கொண்டுள்ளது என்பதையும் விரிவாக எடுத்துக்கூறும் வகையிலும் சென்னை ஸ்கூட்டர் வழங்கும் விழாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அக்கட்சி கருதியதன் விளைவே மோடியின் இந்தச் சென்னைப் பயணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

"மோடி மற்றும் பி.ஜே.பி-யின் நோக்கம் நிறைவேறுமா... தமிழ்நாட்டில் பி.ஜே.பி-க்கான செல்வாக்கு உயருமா" என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். கூடவே தமிழ்நாட்டு மக்களும்....!?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்