Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

புலிக்கறி, புலி ஒயின்... மருந்துக்காகப் புலிகள்மீது நடத்தப்படும் பயங்கர யுத்தம்!

`அழகிய மிடுக்குடன்... கம்பீரமான தோரணையுடன் அந்தக் காட்டில் இருக்கும் மிகப்பெரிய புலி நடந்து வந்துகொண்டிருக்கிறது. அந்தக் காட்டில் அந்த விலங்கைத் தவிர ஏதும் பெரிதில்லை என்ற நினைப்புடன் நடந்து போய்க்கொண்டிருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஆயுதம் ஒன்று அந்தப் புலியைத் தாக்கிக் கொல்கிறது.' நீங்கள் வாசித்தபடி உலகளவில் வாரத்துக்கு இரண்டு புலிகள் இறப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆம், வாரம் இரண்டு புலிகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டு அதன் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 60 கி.மீ வேகத்தில் ஓடி, 10 மீ உயரம் தாண்டி ஒரு விலங்கை வேட்டையாடிய அந்தப் புலிதான், கணக்கு வழக்கில்லாமல் வேட்டையாடப்பட்டு உலகில் அழியும் தருவாயில் உள்ள இனத்தில் முக்கியமாக இன்றளவில் இருக்கிறது. இதற்குக் காரணம், உலக அளவில் புலிகளுக்கு உள்ள பெரும்பாலான கள்ளச் சந்தைகள்தான் காரணம். கள்ளச் சந்தையில் புலிகளின் பாகங்களால் புழங்கும் பணம் மட்டும் 19 மில்லியன் டாலர். இப்படி, மில்லியன்கணக்கில் கொட்டும் பணம்தான் புலிகளை வேட்டையாட மனித மிருகங்களைத் தூண்டுகிறது. 

புலிகள் கடத்தல்

உலகில் மொத்தமாக 13 நாடுகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. 1987-க்கு முன்னர் வரை புலிகள் பிடிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அதன் பின்னர், புலிகளின் எண்ணிக்கை குறையும் என்ற எண்ணத்தில், அவை பிடிப்பது தடை செய்யப்பட்டன. புலிகளைப் பிடிப்பதற்கு தடை இருந்தும், 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரைக்கும் 801 முறை புலிக்கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்களில் 13 நாடுகளைச் சேர்ந்த 1,755 புலிகளின் தோல்களும் பாகங்களும் இருந்துள்ளன. இதன் கடத்தல் எண்ணிக்கையானது ஆண்டுக்கு 110 புலிகளின் தோல்கள் என்ற விகிதத்தில் இருந்துள்ளன. அந்தக் கணக்குபடி தோராயமாக வாரத்துக்கு இரண்டு புலிகள் வீதம் வேட்டையாடப்பட்டு வந்திருக்கிறது. பிடித்த கணக்குப் போக இன்னும் பிடிபடாமல் கடத்திய புலிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. புலித்தோல்களைக் கடத்துவதற்காக மட்டும்தான் புலிகள் வேட்டையாடப்படுகின்றன என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. புலிகளின் மூக்கு, வால், எலும்பு, வயிறு, கால்நகம், கால்பாதம், பல், கண்கள் என ஒரு புலியின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பொருள்களுக்காகப் பல நாடுகளுக்காகக் கடத்தப்படுகிறது. புலிகள் கறிக்காகவும் ஒயின் மதுபானத்துக்கும்கூட சீனாவுக்குக் கடத்தப்படுகிறது. சீனாவில் இது ஒரு மிகப்பெரிய சந்தை வியாபாரம். நாளுக்கு நாள் புலிகளைக் கடத்தும் கும்பல்கள் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

புலிகள் உணவு

புலிகளின் பாகங்களிலிருந்து மருத்துவப் பொருள்களைப் பெறுவதற்காக 1886-ல் முதல் புலிகள் பண்ணை அமைத்த நாடும் சீனாதான். அதற்குக் காரணம், அப்போது நிலவிய புலிகளுக்கான டிமாண்ட்தான். இதுதவிர 1999-ம் ஆண்டு தாய்லாந்தில் புலிகளுக்காகத் தனி கோயில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது. 2016-ம் ஆண்டு அந்தப் புலிகளுக்கான கோயில் உரிமம் பெறாமல் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த 137 புலிகளும் குட்டிகளும் அரசாங்கம் கைப்பற்றப்படுகிறது. ஆனால், அதற்கிடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் வரை பணம் சம்பாதித்து வந்திருக்கிறது, அந்தக் கோயில். அங்கு இறந்த நிலையில் 40 புலிகளின் குட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதுபோல உலகில் பல இடங்களில் புலிகள் அதன் உடல் உறுப்புகளுக்காகத் திருடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. 

அழிந்து வரும் புலிகள்

புலிகளில் சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகைகள் இருந்து வந்துள்ளன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி என் மூன்று வகை இனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. சுமத்ரான் வகை புலிகள் இன்று அழியும் நிலையில் இருக்கின்றன. இப்படிக் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை உயிரினங்களின் உயிர்ச்சங்கிலி பாதுகாக்கப்படும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் புலிக்கடத்தலை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து. மேலும், தனிமனிதனாக முன்வந்து புலிகளை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். இப்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவுதான் என்பது சமீபத்திய ஆய்வு முடிவு.

புலிகளைக் காப்பாத்துங்க... ப்ளீஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement