பாலியல் வன்முறைதான் தாக்குதலின் நோக்கமா?! - விழுப்புரம் ஆராயி சம்பவப் பின்னணி | A women and her two children were brutally attacked near villupuram for reasons unknown

வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (27/02/2018)

கடைசி தொடர்பு:09:33 (27/02/2018)

பாலியல் வன்முறைதான் தாக்குதலின் நோக்கமா?! - விழுப்புரம் ஆராயி சம்பவப் பின்னணி

பாலியல் வன்புணர்வு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெல்லம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி  அவரது பெண் தனம் மற்றும் மகன் சமயன் ஆகியோர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவிவந்த சூழலில் பிரச்னை தற்போது தீவிரமடைந்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில் நள்ளிரவில் நடந்த இந்தக் கோரத் தாக்குதல் அந்தப் பகுதியையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

வழக்கை எடுத்து நடத்தும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புஉணர்வு இயக்கத்தின் இயக்குநர் பாண்டியன் கூறுகையில், “சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு தனது பக்கத்து வீட்டில் ஆராயி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அதன் பிறகே வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குத் தண்ணீர் பிடிக்க வருபவர் மறுநாள் தண்ணீர் பிடிக்க வரவில்லை. என்னவென்று அண்டை வீட்டில் இருக்கும் சுகந்தி என்பவர் ஆராயி வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார். வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடக்கவே அலறிக்கொண்டு அக்கம்பக்கத்தவரை அழைத்து வந்து பார்த்திருக்கின்றார்கள். அங்கே ஆராயி அவரது 14 வயது மகள் தனம் மற்றும் 10 வயது மகன் சமயன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கின்றார்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூவரையும் உடனடியாக அருகில் இருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். சிறுவன் சமயன் இறந்துவிட்டதாக அங்கேயிருந்த டாக்டர்கள் தெரிவித்தார்கள். சமயனின் நுரையீரலில் தாக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த ஆராயி மற்றும் தனம் இருவரையும் புதுவை ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். தலையில் தாக்கப்பட்டதால் ஆராயிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவருக்கு தலை மழிக்கப்பட்டு காயங்களுக்குத் தையல் போடப்பட்டுள்ளது. மேலும், அவர் கழுத்தில் பாத்திரத்தால் தாக்கியுள்ளதால் கழுத்து எலும்பு உடைந்துள்ளது. மருத்துவர்கள் அதற்கும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தாக்கப்பட்ட நிலையில் இருந்த தனத்தின் உடலைப் பார்க்கவரும்போதே உள்ளாடைகள் அனைத்தும் ரத்த வெள்ளத்தில் கிடக்க முணகிக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் சென்று காண்பித்தபோது சிறுமியின் கர்ப்பப்பையில் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்கள். தற்போது சிறுமியின் பிறப்புறுப்பில் இரண்டு தையல்கள் போடப்பட்டு அவரும் தீவிர சிகிச்சையில் உள்ளார். ஆராயி பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்று முதலில் மருத்துவர்கள் சொன்னாலும் தற்போது அவரது உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாகவேத் தெரிகிறது. நாங்கள் இருவரிடமும் பேச்சுக் கொடுக்க முயன்றோம். ஆனால், எவ்வித அசைவும் தெரியவில்லை. அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருள்கள் அத்தனையும் அந்தந்த இடத்திலேயே இருந்தன. அதனால் இது பொருள்களுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் போலத் தெரியவில்லை. அந்தச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யவே இந்த வன்முறைத் தாக்குதல் மொத்தமும் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது” என்றார். 

மெத்தனம் காட்டுகிறதா போலீஸ்?

பாண்டியன்மேலும் அவர் தொடர்கையில், “வெல்லம்புதூர் கிராமத்தில் இன்றளவும் தீண்டாமை நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் மக்கள் அனைவருக்கும் ஆராயி வீட்டின் முன்புறமுள்ள நிலத்துக்குச் சொந்தக்காரரான ராஜேந்திரன் என்பவர் மீதுதான் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ஏற்கெனவே அந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளார். அண்மையில்கூட அவர் தொடர்பான ஒரு பிரச்னையை உள்ளூர் மக்களே சமாதானம் செய்துவைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் சம்பவம் நிகழ்ந்ததற்கு முந்தைய நாள்தான் அருகில் இருக்கும் வீரபாண்டி என்னும் கிராமத்து திருவிழாவுக்காக தாயும் மகளும் சென்று வந்திருக்கிறார்கள். ஒருவேளை திருவிழாவிலிருந்து இவர்களைத் தொடர்ந்து வந்த நபர்கள்கூட இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். போலீஸ் தரப்போ இந்தக் கோணங்களில் எல்லாம் விசாரிக்காமல், அதே பகுதியில் இருக்கும் ஆலடியான் என்கிற உடல் ஊனமுற்றவரைக் கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறது. இன்னொருபுறம் ஆராயினுடைய நடத்தையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அவருக்குக் கள்ள உறவு இருந்தது அதனால்தான் இப்படி நிகழ்ந்தது என்கிற ரீதியிலும் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. ஆராயி, பெண் என்பதாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதற்காக இப்படிச் சொல்லப்பட்டு வருகிறது. பொதுவாகவே, பாலியல் தொழிலாளியாக ஒருவர் இருந்தாலும் அவருக்கான உயிர் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பை எந்த ஒரு ஜனநாயக அரசும் அதன் சமூகமும் உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் இதுபோன்று பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் என்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, இப்படியாக நான்கைந்து வழக்குகள் போலீஸாரால் சரிவர விசாரிக்கப்படாமலேயே இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் பிரச்னை நிலவி வரும் சூழலில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குக்கூட போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில்கூட பட்டியல் சமூகத்துக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் வந்து பார்த்துச் சென்ற பிறகே போலீஸ் ஓரளவு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்