காவிரி வாரியமா... கர்நாடகத் தேர்தலா?- மார்ச்சுக்குள் மத்திய அரசு போடும் கணக்கு!

காவிரி

“தமிழகமும் கர்நாடகாவும் இரு கண்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சீக்கிரமே அதற்கான பணிகள் முடிவடையும்” - மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி காவிரி விவகாரம் பற்றிச் சொன்ன இரண்டு வரிச் செய்தி இது. 

“கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழக விவசாயிகளின் கண்ணீரோடு கலந்த கதைதான் காவிரி மேலாண்மை வாரியம் என்பது. மத்தியில் ஆளும் ஒவ்வோர் அரசும் காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போது, மறக்காமல் சொல்லும் ஓர் உறுதிமொழி, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்’ என்பதுதான். இதற்குமுன்பு தமிழக, கர்நாடகா இடையே நடைபெற்றுவந்த காவிரிப் பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டும்தான் இதற்கு ஒரே வழி என்று 2007-ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த வாரியம் வந்துவிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு அந்த விஷயத்தில் மெத்தனமாகச் செயல்பட்டது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அப்போது மத்தியிலும் தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது. அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், இன்று தண்ணீருக்கு கர்நாடகாவைக் கையேந்தும் நிலையைத் தவிர்த்து இருக்கலாம்” என்கின்றனர் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள்.

பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டுக் காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு, இப்போது உச்ச நீதிமன்றம்  நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் புறம்தள்ளும் மனநிலையில்தான் கர்நாடக அரசின் நடவடிக்கை இருந்துவருகிறது. கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு மத்திய அரசும் கர்நாடகாவுக்குச் சாதகமான போக்கிலேயே செயல்படும் நிலை உள்ளது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கருதப்படும். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன” என்று சொல்லியுள்ளார். 

உச்சநீதிமன்றம்

காவேரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன?
மத்திய நீர்வளத் துறையின்கீழ் செயல்படும் நிரந்தரக் குழுவாக இது அமையும்.காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் நியமிக்கப்படும் முழுநேரத் தலைவர் ஒருவரையும் இரு உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். தலைமைப் பொறியாளர் தரத்திலுள்ள, நீர் மறுவள நிர்வாகத்தில் 20 வருடங்களுக்குக் குறையாத அனுபவமுள்ள நீர்ப்பாசனப் பொறியாளரே தலைவராக நியமிக்கப்படுவார். மேலும், இரண்டு நிரந்தர உறுப்பினர்களும் இதில் இடம்பெறுவார்கள். அவர்கள் இருவருமே நீர்பாசன விஷயத்திலும், அணைகள் குறித்த செயல்பாட்டிலும் அனுபவத்திலும் திறமையுடையவராக இருக்க வேண்டும். மேலும், விவசாயம் குறித்த அறிவும் இவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தக் குழுவின்  ஆயுட்காலம் ஐந்தாண்டுகள்வரை இருக்கலாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. 
இவர்களைத் தவிர, காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின்  உறுப்பினர்களும் இந்த ஆணையத்தில் இடம்பெறுவார்கள். அவர்களை, அந்தந்த மாநிலங்களே நியமித்துக்கொள்ளும் அதிகாரம் உண்டு. ஆனால், இவர்கள் பகுதி நேர உறுப்பினர்களாகவே கணக்கில் எடுத்துல்கொள்ளப்படுவர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியக் கூட்டங்களில் குறைந்தபட்சம் ஆறு உறுப்பினர்கள் அவசியம் இடம்பெற்றாக வேண்டும். முடிவு என்பது பெருபாண்மை உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் எடுக்கப்படும். வாரியத் தலைவருக்கு மத்திய நீர்வள ஆணையம், தேசிய நீரியல் நிறுவனம், இந்திய விவசாய ஆய்வு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர அமைப்புகளிலிருந்து வாரியக் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க அதிகாரம் உண்டு.

வாரியத்தின் அதிகாரம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அந்த வாரியத்துக்கு என்று சில அதிகாரங்களும் உள்ளன. ஒவ்வொரு  மாநிலங்களின் அணைக்கட்டுகளில் உள்ள அதிகபட்ச நீரிருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்பட தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் குறித்த தரவு, மழைப்பொழிவு விவரம், பாசன நிலம், பயன்படுத்தப்படும் நீர் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி மாநிலங்களைக் கேட்கலாம். இந்திய வானிலைத் துறை, மத்திய நீர்வள ஆணையம், காவிரி வடிநிலப் பகுதியிலுள்ள மாநிலங்கள் இவற்றின் முக்கிய மழைநீர் அளவீட்டு நிலையங்களிலிருந்து தரவுகளை வாங்கிச் சேமிக்கும். பல்வேறு பருவக்காலங்களில் பெய்யும் மழைப்பொழிவு தரவுகளையும், பல்வேறு இடங்களில் நீர்வரத்தை அளவிட்டுப் பதிவுசெய்யும் அமைப்பான காவிரி வரன்முறைக் குழு மூலமாகக் காவிரி நதியின் முக்கியப் பகுதிகளில் நீர்வரத்து குறித்த தரவைப் பெறும்.கேரளாவில் பாணாசுரசாகர், கர்நாடகாவில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டில் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகளை வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும். தேவை ஏற்படின் அணைகளின் பாதுகாப்பினை இந்த வாரியமே மேற்கொள்ளலாம்.ஒவ்வொரு மாநிலத்தின் நீர்பாசனத் தேவை, அந்தந்த மாநிலங்களின் மழை அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு நீர்ப் பங்கீட்டை இது மேலாண்மை செய்யும். மேலும் வீணாகும் நீரைக் குறைக்கும் முயற்சியில் இந்த ஆணையம் செயல்படும்.  

மாநிலங்கள் ஒத்துழைக்காவிட்டால்?
காவிரி மேலாண்மை வாரியத்துக்குக் கட்டுப்பட்ட நான்கு மாநிலங்களில், இந்த வாரியத்துக்கு ஒத்துழைக்காத நிலை ஏற்படுமாயின், மத்திய அரசின் உதவியை இந்த வாரியம் நாடலாம். எந்த ஒரு மாநிலமாவது குறிப்பிட்ட அட்டவணைப்படி நீரை விநியோகம் செய்யாமல் இருந்தாலோ அல்லது குறைந்த அளவு நீரை வெளியேற்றினாலோ... வாரியம் தேவையான நடிவடிக்கை எடுத்து, தராமல் இருக்கும் நீரைப் பெற்றுத் தருவதற்கு வழிசெய்யும் அதிகாரம் இந்த வாரியத்துக்கு உண்டு. இந்தக் காரணங்களால்தான் கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது. மேலாண்மை வாரியம் அமைத்தால், அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் அணைகள் சென்றுவிடும், இஷ்டத்துக்கு நீரை தங்கள் மாநிலத்துக்குப் பயன்படுத்த முடியாத என்ற அச்சம் கர்நாடகாவுக்கு உள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

மார்ச் 15-க்குள் வாரியம் அமையுமா?
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதன்படி, 'நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்' என்று சொல்லியுள்ளது. அதாவது, மார்ச் 15-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். சென்னையில் அம்மா இருசக்கர வாகனத் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம் நிகழ்ச்சி மேடையில்வைத்தே முதல்வர் பழனிசாமி, 'காவிரி விவகாரத்தில் ஒரு நல்லமுடிவை எடுக்க வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதன்பிறகு பேசிய மோடி ஒரு வார்த்தைகூட காவிரி விவகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் , “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ''கர்நாடகாவும், தமிழகம் எங்களுக்கு இரு கண்கள்'' என்று சொல்லியிருக்கிறார். அதாவது, வரப்போகும் கர்நாடகத் தேர்தலும் எங்களுக்கு முக்கியம், தமிழகத்தின் பி.ஜே.பி கால் ஊன்றுவதும் எங்களுக்கு அவசியம் என்பதையே அவர் நாசுக்காகச் சொல்லியுள்ளார். மேலும், தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மார்ச் முதல்வாரம் டெல்லியில் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தமிழக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெறும்போது, மோடி ஏதாவது ஓர் உறுதிமொழியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், சந்திப்பைத் தள்ளிப்போடுகிறார் என்கிறார்கள். அதற்கு முன்பு கர்நாடக பி.ஜே.பி தரப்பிடம் மோடி பிரதிநிகள் ஆலோசனை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்தபிறகே தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு இருக்கும் என்கிறார்கள். 

மார்ச் 15-க்குள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு வராவிட்டால், வேறு சில காரணங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யலாம். ஏனென்றால், காவிரி நீரைவிடக் கர்நாடகத் தேர்தலே மத்திய அரசுக்கு இப்போது பெரிதாகப்படுகிறது. அதைத்தான் அவர்கள் செயல்படுத்தவும் செய்வார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!