``கோஷ்டிப் பிரச்னைகளை மறப்போம்!" - தி.மு.க-வின் மறு சீரமைப்பு பிளான்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களை முன்வைத்து தி.மு.க-வைப் பலப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், அவசியமாகச் செய்யவேண்டிய அறுவைசிகிச்சையை செய்யவும் தயாராகி விட்டார் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.-வில் மாவட்ட மறு சீரமைப்புக்கான திட்டம், வரும் மார்ச் 20-ம் தேதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட இருக்கிறது. 

தி.மு.க. 'உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு' என்ற கூட்டத்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். முதல் நாளில் கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார் அவர். தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக மொத்தம் 65 மாவட்டக் கழக நிர்வாகிகளுடனான சந்திப்பு வரும் மார்ச் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம், சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ஸ்டாலின். மொத்தம் 32 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இன்று, 15-ம் நாளாக மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடைபெறுகிறது. 

தி மு க

கள ஆய்வு குறித்து ஜனவரி 23-ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை மேற்கோள்காட்டி இருந்தார். அதில், ''கழகத்தின் நலன் பெருக்கும் இந்தக் கள ஆய்வின்போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கழகத்தின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள், கருத்துகள், ஆலோசனைகளை எல்லாம் சிறு கடிதமாக எழுதி, அறிவாலயத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்'' என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்தக் கள ஆய்வின் அடிப்படையில் மாவட்டக் கழகங்களை மறு சீரமைப்பு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது. அதில், ''தி.மு.க மாவட்டக் கழக நிர்வாகங்களை மேலும் எளிமையாக்குவதற்கும், சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் மாவட்டக் கழகங்களில் உரிய மறு சீரமைப்பு செய்வதற்கும் தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, கழகத் தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயல் திட்டக்குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. (செய்தித் தொடர்பாளர்), எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ., (மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மார்ச் 20-ம் தேதிக்குள் செயல் தலைவர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கள ஆய்வின் தாக்கமே இந்த அறிவிப்பு' என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டக் கழக மறு சீரமைப்பு அறிவிப்பைக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். தி.மு.க. அமைத்துள்ள மூவர் குழுவைத் தொடர்புகொண்டு, தங்கள் மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகப் பிரச்னைகளைச் சொல்லி வருகிறார்கள். மேலும், கிளைக்கழக அளவில் கட்சியைப் புனரமைப்பது, பேரூர், நகர அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்தவும் மூவர் குழு ஆலோசனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தி.மு.க தோற்றபோது, கட்சி நிர்வாகத்தை மறு சீரமைப்பு செய்ய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு கொடுத்த பரிந்துரை அடிப்படையில்தான் தி.மு.க-வை அமைப்பு ரீதியாக 65 மாவட்டங்களாகப் பிரித்தனர். 

இப்போது நடக்கும் கள ஆய்வு, மேலும் கட்சியை வலுவாக்க உதவும் என்று ஸ்டாலின் நம்புகிறார். கள ஆய்வு குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், 'நீலகிரியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, 1982-ம் ஆண்டு இளைஞரணி தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு நான் வந்திருந்ததையும், அந்த நிர்வாகியின் தந்தையார், அன்று மறைந்த செய்தியைக் கழக நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்த நான் உடனடியாக அப்போதைய இளைஞரணி நிர்வாகிகள், நண்பர்கள் அன்பில் பொய்யாமொழி, பரணிகுமார் ஆகியோருடன் உடனே அவரது இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்ததையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், 'தளபதி, எங்கள் இல்லத்துக்கு வந்தபோது இரவு 1.30 மணி. நீலகிரியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து ஆறுதல் தெரிவித்ததுடன், எனக்கு தைரியமும் கொடுத்தார். இன்று தளபதி முன்பாகவே பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்' என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து, தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்ற உறுதியினை வழங்கினார்.

ஆண் நிர்வாகிகளுக்கு இணையாக, கழகத்தின் பெண் நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட மகளிரணித் துணை அமைப்பாளர் காந்திமதி, கழகம் வளர்க்கும் பணி குறித்த தனது அனுபவங்களை மிகச்சிறப்பாக முன்வைத்தார். 'நீங்க கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி எல்லாரும் கட்சிக்காகப் பாடுபட்டால், கழகத்தின் மகத்தான வெற்றியை எவராலும் மாற்ற முடியாது. குடும்பம் என்றால் அதில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கும். கழகம் என்பது ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் குடும்பம். அதிலும் சில பிரச்னைகள் இருப்பது வழக்கம். அதையெல்லாம் பெரிதாக்காமல், தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பதுதான் எல்லோரும் செய்ய வேண்டிய வேலை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலையை முடித்துவிட்டு வந்து, மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டுபோய் கட்சி வேலைகளைச் செய்வேன். மக்களைச் சந்திப்பேன். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, முடிந்த அளவு தீர்த்து வைப்பேன். அதனால் எனக்கு 'சேவை காந்திமதி' என்ற பெயரே உண்டு' என்று பெருமை பொங்கச் சொன்னார். எளிய பெண்மணியான தன்னால் கழகத்திற்கு இயன்றவரை தொண்டாற்ற முடிகிறது என்பதுதான் அந்தப் பெருமிதம்.

திருப்பூர் தெற்கு மாவட்டத்தைத் சேர்ந்த தொண்டரணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, எதையோ சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பேச வந்ததால், நானும் அரங்கில் இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அவர் மிகவும் சுருக்கமாக, 'உங்க உடம்பை மட்டும் பார்த்துக்குங்க தளபதி. எங்களுக்கு அது போதும். மற்றதை நாங்க பார்த்துக்குறோம்", என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். இப்படி எத்தனையோ நிர்வாகிகள், கழகம் வளர்க்கும் பொறுப்பினைத் தங்கள் தோளில் சுமந்திட முன் வந்ததைப் பார்த்தபோது, கடைசித் தொண்டன் உள்ளவரை இந்தக் கழகம் உயிர்ப்புடன் வாழும் - தமிழகத்தை உயர்த்தி வாழ வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. 

சேலம் மத்தியத் தொகுதியின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சொன்ன கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 'என்னுடன் வேலை பார்க்கிறவர்களிடம் நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேட்பேன். அவர்களில் தி.மு.க. ஆதரவாளர்களும் இருப்பார்கள். வேறு இயக்கங்களை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். 'தி.மு.க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' எனக் கேட்பேன். மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். எனக்கு உள்ள குரூப் மூலம் 70 பேருக்கு மெயில் அனுப்புவேன். அவர்களில் பலர் இப்போது நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும்'  என்றார். 

இதுபோலவே, அரசியல் களத்தின் இயல்பான நிலையை எடுத்துச் சொன்னவர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் விசாலாட்சி. அவர் முன்னாள் கவுன்சிலர் என்பதால் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். 'கோஷ்டிப் பிரச்சினைகளை நிறைய பார்த்துட்டோம் தளபதி. ஆனா, இப்ப நீங்க கூப்பிட்டு பேசினது பெரிய தெம்பா இருக்கு. இனி கோஷ்டிப் பிரச்னையெல்லாம் மறந்துட்டு, கட்சி வேலையைப் பார்ப்போம். எல்லோரும் அப்படிப் பார்க்கணும். சில தொகுதியில் கூட்டணிக் கட்சிக்கு சீட்டு கொடுத்திடுவாங்களோன்னு நினைக்கிறது சகஜம்தான். ஆனா, தளபதியை சந்திச்ச பிறகு தெம்பு வந்திடிச்சி. டெல்லியிலிருந்துகூட ஆளுங்க வந்து எங்க தொகுதியில நிற்கட்டும். தி.மு.க. கூட்டணின்னா ஜெயிக்க வெச்சிக் காட்டுவோம்' என்றார் உறுதியான குரலில்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலாளர் மகாலிங்கம், 'நான் 28 ஆண்டுகளாக கட்சியிலே இருக்கேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கோஷ்டிப் பிரச்னை இல்லாம வேலை செய்யணும். அவ்வளவுதான். எங்களுக்குக் கட்சிதான் முக்கியம்', என்று சென்னார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒலித்த குரல்களால் உணர்ந்தபோது, இயக்கத்தின் வலிமையும், வளமும் மேலும் மேலும் கூடுவதை அறிய முடிந்தது'' என்று ஸ்டாலின் தனது மனநிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தக் கள ஆய்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பிரச்னை இருப்பது வெளிப்படையாக தெரிந்து இருக்கிறது. மேலும் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தைச் சீரமைப்பது, தி.மு.க-வை மக்களிடம் கொண்டுசெல்வது, இளைஞர்களை ஈர்ப்பது என்று பல ஆலோசனைகளைக் கள ஆய்வில் தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்பதை முன்வைத்து, இரட்டைப் பதவியில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார் ஸ்டாலின். எனவே, இந்தக் கள ஆய்வு முடிந்தவுடன் கட்சி வளர்ச்சிக்குத் தேவையான அறுவைசிகிச்சையை மேற்கொள்ளத் தயாராகி விட்டார் ஸ்டாலின் என்பது உறுதியாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!