5 லட்சம் பேரின் வாழ்வாதாரம்... அமைச்சர் வேலுமணியால் ரூ.1,500 கோடி இழப்பா?!

விளம்பரப்பலகை

போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அவற்றை நடத்தும் தமிழக அரசுக்கும் நிதிநிலைமை மிக மோசமாகவே இருக்கிறது. இந்த நிலையில், விளம்பரப்பலகைகள் மூலம் அரசு பெறவேண்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடி ரூபாய் வருமானத்தை வரவிடாமல் அமைச்சரும் அதிகாரிகளும் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று பலமாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 

தனியார் இடங்களில் விளம்பரப் பலகை வைக்கவிடாமல் இருப்பதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது; 10 இலட்சம் பேருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் இருக்கும் 'நியாய' விளக்கம்!

சாலையோரம், நடைபாதை போன்ற பொது இடங்களில் பெரிய பெரிய பலகைகளில் விளம்பரம் செய்வது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தொடங்கியது. பிறகு அரசு, பொதுத்துறை, தனியார் இடங்களில் மெகா விளம்பரப் பலகைகளை வைப்பது என விரிவடைந்தது. பொதுவாக, 24 அடி-12 அடி, 15 அடி-10 அடி, 12 அடி-6 அடி ஆகிய மூன்று அளவுகளில்தான் இந்த விளம்பரப் பலகைகள் அமைக்கப்படுகின்றன. முதல் வகைப் பலகைகளை பெரிய சாலைகளை ஒட்டியும் மூன்றாம் வகைகளை சிறிய தெருக்களிலும் இரண்டாம் வகைப் பலகைகளை அந்தந்தப் பகுதிகளில் மையமான பார்வையுள்ள இடங்களிலும் வைக்கின்றனர். 

சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்ட பெரும்பலகை விளம்பரம், மதுரை, கோவை, திருச்சி போன்ற மற்ற நகரங்களுக்கும் பரவியது. ஒரு கட்டத்தில் இவற்றை ஒழுங்குபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1985ஆம் ஆண்டில் விளம்பரப்பலகை அமைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பொது இடங்களில் கண்டபடி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. சென்னையில் 598 பொது இடங்களில் மட்டும் இருந்த பலகைகளுக்கு அனுமதி நீட்டிக்கப்பட்டது. 

அனுமதிக்கப்பட்ட விளம்பரப்பலகைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 100க்குள் என ஆனது. இதற்கிடையில் அனுமதி இல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. பல இடங்களில் போக்குவரத்தை பாதிக்கக்கூடியவகையிலும் விபத்துகளை உண்டாக்கும்வகையிலும்கூட விளம்பரங்கள் வைக்கப்பட்டன. இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டது.

2008-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள விளம்பரப்பலகைகளை ஒழுங்குபடுத்த உத்தரவிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், அனைத்து விளம்பரப்பலகைகளையும் அகற்ற ஆணையிட்டதுடன், புதிதாக உரிமம் பெற விண்ணப்பிக்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும் விண்ணப்பித்த தனியார் விளம்பரப்பலகை அமைப்பாளர்கள் பெரும்பாலனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதே இப்போதைய பிரச்னை! 

இது பற்றி நம்மிடம் பேசிய தனியார் விளம்பரப் பலகை அமைப்பாளர்கள் தரப்பினர், “ 2015ஆம் ஆண்டுவரை நான்கு நிறுவனங்களைத் தவிர விண்ணப்பித்த பெரும்பாலானவர்களுக்கு விளம்பரப்பலகை உரிமம் வழங்கப்படவே இல்லை. இதனால் ஆங்காங்கே அனுமதி பெறாமல் விளம்பரப்பலகைகளை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பற்றிய வழக்கில் 2016 ஆகஸ்ட் 29ஆம் தேதி, அப்போதைய தலைமைநீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் இந்த உரிமம் வழங்குவதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி தரவேண்டும்’ அதற்கான குழுவில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், குறிப்பிட்ட இடத்தின் வட்டாட்சியர், அங்கு பொறுப்பிலுள்ள செயற்பொறியாளர், போக்குவரத்து போலீசின் உதவி ஆணையர், விண்ணப்பதாரர் அல்லது அவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறவேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. அந்தத் தீர்ப்பு வந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், சென்னையில் ஆட்சியருக்குப் பதிலாக உரிமம் வழங்கும் அதிகாரமானது மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டது” என்றவர்கள், அப்போதிருந்துதான் பிரச்னை என மூச்சுவிட்டனர். 

தொடர்ந்து பேசியவர்கள், “ மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்ற பின்னர் அவரிடம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி கோரிக்கையை வைத்தோம். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை ஆணையருக்குக் கடிதம் எழுதியும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு உள்ளாட்சித் துறைச் செயலாளருக்கும் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கும் எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு தனியார் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதும், அதில் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது. அதையும் அவர் செயல்படுத்தவில்லை என அந்த நிறுவனம், நீதிமன்றத்தில் முறையிட, ஆணையருக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் விண்ணப்பங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்கத் தொடங்கினார். ஆனால் இதுவரை யாருக்கும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை; மீன்வளத் துறையின் சேத்துப்பட்டு சூழலியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 6 விளம்பரப்பலகைகளைத் தவிர! இதனால் அரசுக்கு மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு” என அதற்கான கணக்குவழக்குகளையும் விவரிக்கிறார்கள். 

” விளம்பரப் பலகைக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டாலே தலா 500 ரூபாய் கணக்குப்படி, 7 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ரூ.35 இலட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். அரசாணைப்படி, ஒவ்வொரு விளம்பரப்பலகைக்கும் 87 ஆயிரம் ரூபாய் வரியாக மாநகராட்சி வசூலிக்கமுடியும். சென்னை மாநகராட்சியின் தீர்மானப்படி, வார்டுக்கு விளம்பரப்பலகை மூலம் ஒரு கோடி ரூபாய் இலக்கு என்றால், தாராளமாக ரூ.200 கோடியை வருமானமாகப் பெறமுடியும். இதையே திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கினால், கட்டாயம் ஆண்டுக்கு ரூ.1,500 ரூபாயை அரசு பெறமுடியும். ஆனால், குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி தந்துவிட்டு, மற்ற நிறுவனங்களுக்கு இழுத்தடிக்கிறார்கள். அந்த நிறுவனங்கள் சென்னையில் உள்ள நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதால், தனியார் இடங்களில் விளம்பரப் பலகை அமைப்பதன் மூலம் அவர்களுக்கு வருமானம் குறையும் என்பதுதான் காரணம் என்கிறார்கள்.  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சார்புள்ளவர்கள் அந்த நிறுவனங்களை நடத்துவதுதான், இதன் பின்னணி! இதனால் 5 ஆயிரம் விளம்பரப்பலகை அமைக்கமுடியாமல் அவற்றை நம்பியிருக்கும் 5 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என சோகத்தைக் கொட்டுகிறார்கள், தனியார் இடத்தில் விளம்பரப் பலகை அமைப்பவர்கள். 

இந்த விவகாரத்தில் நீதிமன்ற ஆணை, அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என விளக்கம் அறிய, மாநகராட்சி ஆணையர் டாக்டர் கார்த்திகேயனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருக்கு குறுந்தகவலும் அனுப்பினோம். பதில் வரவில்லை. 

இதைப்போலவே, அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைத் தொடர்புகொண்டும் அவரிடமிருந்தும் பதில் வரவில்லை!

இதன் மூலம் எதை உணர்த்தவிரும்புகிறார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது. 

இருந்தாலும் அவர்களின் பதிலுக்காகக் காத்திருப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!