''வழக்கே நடத்தாமல்..!'' கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியை வீழ்த்தியது இப்படித்தான்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரி டி.எஸ்.பி பாண்டியன். பிப்ரவரி 28 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த அவரை, அதிரடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று அதைச் சட்டத்துக்குப் புறம்பாக விற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குதான் இந்த அதிரடிக்கு பின்னணி என்று  தெரியவந்துள்ளது. 

பாண்டியன் கருணாநிதி

கருணாநிதி முதல்வராக (2006-2011) இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பாண்டியன். இப்போதும் அவர்தான் கருணாநிதிக்கு பாதுகாவல் அதிகாரியாக இருக்கிறார். டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரியான அவருக்கு 2008 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இரண்டு கிரவுண்டு  (4,800 சதுர அடி) நிலம் ஒதுக்கப்பட்டது. இதுபோலவே, அப்போது கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த வினோதன், கணேசன் ஆகியோருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த இடங்களின் விலை தலா ரூ.75 லட்சம் என்று வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்திருந்தது. இந்த நிலம் ஒதுக்கீடு பிரச்னை தி.மு.க ஆட்சியில் இருந்தபோதே விஸ்வரூபம் எடுத்தது.

இவர்கள் மூவர் உள்பட பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சில வி.ஐ.பி-க்களும் இந்தப் புகாரில் சிக்கியிருந்தார்கள். 2009 ஆம் ஆண்டு, செல்வராஜ் என்ற சமூக ஆர்வலர், 'வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...'  லஞ்ச ஒழிப்புத்துறையில்  புகார் அளித்தார். அந்தப் புகாரின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்தப் புகார் தூசி தட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து புகாரில் சிக்கியவர்களது வீடுகளில் திடீர் ரெய்டு நடத்தினர்.  லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை நடத்தி வருகிறது. டி.எஸ்.பி-யாக இருக்கும் பாண்டியன், இப்போதும் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிதான். இன்று அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென அவரை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்,  ''கடந்த 6-3-2008 அன்று தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் முகப்பேர் கோட்டத்தில், 'காலி வீட்டு மனை வேண்டும்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் விண்ணப்பித்தார். அவர், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசு விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் 10-3-2008 அன்று அரசு ஆணை மூலம் 2 கிரவுண்ட் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றார். வீட்டு மனை ஒதுக்கீட்டு ஆணையை 18-3-2008 அன்று பெறுவதற்கு முன்பே, அந்த வீட்டு மனையைச் சொந்தப் பயன்பாட்டுக்கு என்று பெற்றுக்கொண்டு வீட்டு வசதி வாரிய சட்டத்துக்குப் புறம்பாக லாபத்துக்காக தனியாருடன் கூட்டு சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர், மனைக்கான மொத்தத் தொகையையும் தனிநபரிடம் மொத்தமாகப் பெற்று வீட்டு வசதி வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தி உள்ளார்.

இந்த முறையில், விநோதன், கணேசன் ஆகியோரும் முறைகேடு செய்துள்ளனர். இந்த வகையில், ஒவ்வொரு அதிகாரியும் 19 லட்சம் ரூபாய் வீதம் சட்டவிரோதமாக லாபம் அடைந்துள்ளனர். வாரியத்துக்கும் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளனர். 1-3-12 அன்று இவர்கள் மூன்று பேர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இப்போது டி.எஸ்.பி-யாக இருக்கும் பாண்டியன் இன்று ஓய்வுபெற இருந்த நிலையில், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியாததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.'' என்றார்கள்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாண்டியன், 1984 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தவர். ஆயுதப்படைப் பிரிவில் லாரி ஓட்டுநராகப் பணியைத் தொடங்கியவர். 1989 ஆம் ஆண்டு முதல் நிலைக் காவலர் ஆனார். பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கு கார் ஓட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனராக காளிமுத்து இருந்தபோது பாண்டியன்  சப்- இன்பெக்டர் ஆனார். பின்னர், கார் ஓட்டுவதை விட்டுவிட்டு, கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி ஆனார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று டி.எஸ்.பி ஆனார். தி.மு.க தலைமைக்கு நெருக்கம் என்பதால்தான் இந்த அளவுக்கு அவருக்குப் பதவி உயர்வு கிடுகிடுவென கிடைத்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. கிரேடு காவலராக  காவல் துறையில் சேர்ந்து டி.எஸ்.பி ஆனது மிகப்பெரிய வளர்ச்சி என்று அந்தத் துறையில் இருப்போர் சொல்கிறார்கள். வீட்டு வசதித்துறையில் நில ஒதுக்கீடு பிரச்னையில் சிக்காமல் இருந்திருந்தால் அவர் இன்று நிம்மதியாக ஓய்வு பெற்று இருப்பார். 

லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும் இந்த வழக்கை முறையாக, விரைவுப் படுத்தாததும் பாண்டியன் சஸ்பெண்டுக்கு முக்கியக் காரணம் ஆகிவிட்டது. பணியில் இருந்து  ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு எவ்வித ஓய்வூதிய பலன்களும் கிடைக்காது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி வெற்றி பெற்ற பிறகே பாண்டியனுக்கு ஓய்வூதிய பலன்களும் மாதாந்திர ஓய்வூதியமும் கிடைக்கும். பாண்டியனுடன் சேர்ந்து விசாரணையில் இருக்கும் மற்ற இரண்டு பேர் மீது வழக்கு இருந்தாலும் பாண்டியன் இன்று பதவி ஓய்வு பெறுவதால் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!