வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (06/03/2018)

கடைசி தொடர்பு:14:38 (14/03/2018)

மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணியா? காவி... காவிரி... கைவிரி! #VikatanExclusive

காவிரி

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போதெல்லாம் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ பற்றிய பேச்சும் எழும். காவிரி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், `காவிரி மேலாண்மை வாரியம்' மீண்டும் விவாதப் பொருளாகிவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை 14.74 டி.எம்.சி-யாகக் குறைத்துவிட்டது. 'தண்ணீர் குறைக்கப்பட்டது அநீதி' எனப் புலம்பல்கள் எழுந்தபோதும், இனியாவது நீதி கிடைக்கும் என நம்பினார்கள் விவசாயிகள். அதற்குக் காரணம், 'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் உத்தரவிட்டதுதான். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்.   

காவிரி நடுவர் மன்றம், தனது இறுதி உத்தரவில், 'காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இதை அப்போதே கடுமையாக எதிர்த்த கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. தமிழக அரசின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து, நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை 2013-ம் ஆண்டுதான் அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைப்பதில் மத்திய அரசு ஆர்வம்காட்டவே இல்லை. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழக அரசு, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது.

இப்படியான சூழலில்தான், 'காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்' என்று இப்போது தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம். ஆறு வாரங்களில் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைப்பதற்கான ஒரு ஸ்டெப்பைக்கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை. காவிரி தீர்ப்பு பற்றியோ காவிரி மேலாண்மை வாரியம் பற்றியோ பிரதமர் மோடியின் மன்கீ பாத்திலிருந்து எதுவும் வெளியாகவில்லை. காரணம் வெரி சிம்பிள். கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதுதான்.  

'காவிரி மேலாண்மை வாரியம்' நிச்சயம் அமையாது என்ற வாதத்துக்கு வலுசேர்க்கிறது பி.ஜே.பி-யின் கள்ள மெளனம். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், பி.ஜே.பி நடத்தும் நாடகங்களே இதற்குச் சாட்சி. ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட்டான 2016 செப்டம்பர் மாதத்தில்தான் காவிரி விவகாரம் சூடு பிடித்தது. ஜெயலலிதா இருக்கும் வரையில், அவரிடம் பம்மிய பி.ஜே.பி, அப்போலோ நாள்களுக்குப் பின் நிறம் மாறியது. போயஸ் கார்டனைத் தேடி வந்த மோடியின் முகமூடியும் கழன்று தொங்கியது.

‘இந்த ஆண்டு தமிழக விவசாயிகளின் சம்பா சாகுபடிக்கு காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என, தான் உயிரோடு இருந்தபோது, 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ‘இன்று முதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என 2016 செப்டம்பர் 2-ம் தேதி கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்குப் பிறகு, கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. தமிழக பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. ஆனாலும், தமிழகம் அமைதியாகத்தான் இருந்தது.

இந்தச் சூழலில், கர்நாடகா அரசு தொடர்ந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ‘மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என காலவரம்பு விதித்தது. இந்த விஷயங்கள் நடக்கும் வரையில் ஜெயலலிதா நலமுடன்தான் இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்த இரண்டாவது நாள். அதாவது செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அட்மிட் ஆகிறார் ஜெயலலிதா.

‘அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என 2016 செப்டம்பர் 30-ம் தேதி அடுத்த உத்தரவை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம். அதற்கு நீதிமன்றத்தில் மத்திய அரசும் ஓகே சொன்னது. அப்போது, ஜெயலலிதா மருத்துவனையில் சிகிச்சையில் இருந்தார். இதன்பிறகு நடந்த விஷயங்கள் எல்லாம் பக்கா அரசியல்.

'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட்டால் மாதம்தோறும் தமிழகத்துக்கு எவ்வளவு டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும் என்பதை 'காவிரி மேலாண்மை வாரியம்' கண்காணிக்கும். இது கர்நாடகாவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். உஷாரான கர்நாடகம் நிதானமாக அரசியல் காய் நகர்த்தல்களை நடத்தியது. கர்நாடகா பி.ஜே.பி. டெல்லியில் லாபி செய்தது.

அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்தது. 'இனி ஜெயலலிதா எழுந்திருக்கவே மாட்டார்' என்பதை உறுதி செய்துகொண்டது மத்திய பி.ஜே.பி அரசு. அதன் பிறகு, தமிழகத்துக்கு நடந்தது எல்லாம் பச்சைத் துரோகம். ‘மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என செப்டம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தபோதும் அதன்பிறகு, 'அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நீதிமன்றத்தில் தலையாட்டிவிட்டு வந்த மத்திய அரசு, ஜெயலலிதா தலைதூக்க மாட்டார் எனத் தெரிந்துகொண்ட பிறகு பல்டி அடிக்க ஆரம்பித்தது.

இதன் பிறகு, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு திடீர் எதிர்ப்பு காட்டியது. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றதுக்கு அதிகாரம் இல்லை’ எனப் புதிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ‘அரசியல் சட்டத்தின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீடு தொடர்பான சட்டத்தின் அடிப்படையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றதுக்கு அதிகாரமில்லை’ என மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடினார். உடனே நீதிபதிகள், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என நாங்கள் உத்தரவு பிறப்பித்தபோது அதை ஏற்றுக்கொண்டீர்கள். அது எப்படி’ எனக் கேள்வி எழுப்பியபோது ‘தவறு நேர்ந்துவிட்டது. அதைச் சரி செய்துகொள்ள மத்திய அரசு விரும்புகிறது’ எனச் சொன்னார் முகுல் ரோகத்கி. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். ஏறத்தாழ கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவில் உள்ளதைப் போலவே அமைந்தன மத்திய அரசின் வாதங்கள். இந்த நிலையில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி 50 பேர் கொண்ட அ.தி.மு.க எம்.பி-க்கள் பிரதமர் மோடியைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குப் போனபோது, தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். ஜெயலலிதா உணர்வற்ற நிலையில் மருத்துமனையில் கிடந்தபோது, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சிக்கு கிடைத்த மரியாதை இது. ஜெயலலிதா இருந்திருந்தால் பி.ஜே.பி-க்கு இந்தத் துணிச்சல் வந்திருக்குமா, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட அவர் காட்டிய பாய்ச்சல் ஒன்று போதுமே!

'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கும் விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இப்படிக் கபட வேடம் ஆடிய மத்திய அரசு, இப்போது தமிழகத்தின் ஆட்சியை ரிமோட் கன்ட்ரோலில் வைத்திருக்கும் நிலையில், என்னவெல்லாம் செய்யும் என்பது ஊரறிந்தது. 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க மத்திய அரசு எந்த மூவும் செய்யாது. காரணம் அதற்குப் பின்னால் இருக்கும் நுண்ணரசியல்.

தென் மாநிலங்களில், பி.ஜே.பி-க்கு ஓரளவு செல்வாக்கு உள்ள மாநிலம் கர்நாடகம் மட்டும்தான். 2008-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 110 இடங்களை பி.ஜே.பி. கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் 2001 சட்டசபைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக நான்கு இடங்களில் பி.ஜே.பி வென்றது அதுவும் தி.மு.க தயவோடு. நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் அதிகபட்சமாக நான்கு இடங்களைப் பிடித்தது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும்தான் செல்வாக்கு. மத்தியில் இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வரும். ஆனால், தமிழகத்தில் பி.ஜே.பி-யால் காலூன்ற முடியாது. நோட்டாவோடு போட்டியிட்டு பி.ஜே.பி தோற்றுப்போன வரலாறு ஆர்.கே.நகரில் எழுதப்பட்டது.

வரும் மே 15-ம் தேதிக்குள் கர்நாடகா சட்டசபையின் ஐந்தாண்டு ஆயுள் முடிகிறது. இந்த மாதம் கர்நாடகா தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் தயாராகிக்கொண்டிருக்கிறது. இடையில் இருப்பது இரண்டே மாதங்கள்தான். தண்ணீரைவிட வாக்குச் சீட்டுக்குதான் வலிமை அதிகம். அந்த வாக்குச் சீட்டும் எந்த நிலத்தில் அறுவடையாகும் என்பது ஐந்தாம் வகுப்பு  மாணவனுக்குக்கூட தெரியும். மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியாதா. கர்நாடகாவுக்குத் தண்ணீரையும் தமிழகத்துக்குக் கண்ணீரையும் கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கிறார்கள். எந்த வகையிலும் கர்நாடகாவுக்குத் தமிழகத்தால் பாதிப்பு வந்துவிடக் கூடாது. தமிழகத்தின் சின்ன மூவ்கூட கர்நாடகாவுக்கு குந்தகம் ஆகிவிடக் கூடாது. அதற்குத் தமிழகத்தில் தலையாட்டி ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பி.ஜே.பி-யின் ராஜதந்திரம், அர்த்தசாஸ்திரத்தின் பக்கங்களில் புரட்டினால்கூட தேடிப் பார்க்க முடியாது. கர்நாடகாவுக்குக் காவிரியை அளித்து, அரியணையில் அமர நினைக்கிறது காவி. தண்ணீர் பெரிதா... ஓட்டு சீட்டு பெரிதா எனக் கூட்டிக் கழித்துப் பார்த்து தமிழகத்தை வஞ்சிக்கத் தயாராகிவிட்டது மத்திய பி.ஜே.பி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதைப் பாதுகாக்கும் அமைப்புகளையும் கொஞ்சமும் மதிக்காத கர்நாடகாவோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. வாட்டாள் நாகராஜுவுக்கும் மோடிக்கும் பெரிய வித்தியாசமில்லை. வாட்டாள் கத்துகிறார். வாய் திறக்காமல் மோடியோ அமைதி காக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அந்த மாநிலத்தைப் பொறுத்த வரையில் அது நியாயமாகப் பார்க்கப்படும். ஆனால், மத்திய அமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குதானே! ஆனால்,  உண்மையில் அப்படியில்லை. ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது'' எனச் சொல்லியிருக்கிறார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு வாக்குப் பசி எடுத்திருக்கிறது பா.ஜ.க-வுக்கு. ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது’’ என நிதின் கட்கரி சொல்லியிருக்கிறார். அதாவது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட வாக்குச் சாவடியில் கன்னடர்கள் எழுதப்போகும் தீர்ப்புக்குதான் மத்திய அரசு தலைவணங்கத் தயாராக இருக்கிறது.

காவிரி பிரச்னைக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது தமிழக அரசு. அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்' என வலியுறுத்த அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முடிவெடுத்து இரண்டு வாரம் எட்டப் போகிறது; பிரதமரைச் சந்திப்பதற்கான அப்பாயின்ட்மென்ட் கிடைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த பிரதமர் மோடி, அப்படியே அனைத்துக்கட்சித் தலைவர்களைச் சந்தித்திருக்கலாம். ஸ்கூட்டர் வழங்கும் விழாவில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவாக அமைக்க வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தபோது, அவருக்குப் பிறகு பேசிய மோடி, அதற்குப் பதில்கூட அளிக்கவில்லை. சந்திப்போ பதிலோகூட கர்நாடகாவுக்குப் பாதகமாகிவிடக் கூடாது என நினைக்கிறாரா?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பதவிக்காகப் பன்னீரும் எடப்பாடியும் டெல்லிக்குப் பறந்தார்களே... மோடியை எத்தனை முறை சந்தித்தார்கள். எடப்பாடியாவது முதல்வர். பன்னீர் எந்தப் பதவியிலும் இல்லாத வெறும் எம்.எல்.ஏ-தான் அவருக்கு எத்தனை முறை மோடி நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். இப்போது காவிரிக்கு மட்டும் நேரம் ஒதுக்குவதற்கு மோடிக்கு ஏன் நேரம் வாய்க்கவில்லை. ஆதாயம் இருந்தால் சந்திப்புக்கு நேரம் கிடைக்கும் என்றால் அது பிரதமர் அலுவலகமா... இல்லை கார்ப்பரேட் ஆபீஸா?

ஜெயலலிதா

எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தங்களின் சொந்த ஆதாயத்துக்காக மோடியை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்தார்களே. பிரதமர் அலுவலகத்துடன் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் இவர்களால், பிரதமர் சந்திப்புக்கு டைம் வாங்க முடியாமல் போனது ஏன். 2016-ம் ஆண்டு அ.தி.மு.க எம்.பி-கள் அனைவரும் பிரதமரைச் சந்திக்க முடியாமல் தோற்றுப்போனது போலவே இப்போதும் பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்க மறுக்கின்றன.

'' 'பிரதமரைச் சந்திக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் அந்தத் துறையின் அமைச்சரைச் சந்தியுங்கள் என எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது' என்று என்னிடம் முதல்வர் எடப்பாடி சொன்னார் என மீடியாவிடம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். உடனே பதறிப்போன அமைச்சர் ஜெயக்குமார், பிரதமரைச் சந்திக்க மறுத்ததாக ஸ்டாலின் சொன்னதை மறுத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் போனாலும் பரவாயில்லை. மோடி கோபித்துக்கொள்வார் என நினைக்கும் பயந்தாங்கொள்ளி அரசை என்ன சொல்ல?

காவிரியில் தமிழகம் தோற்றுக்கொண்டே இருக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன்களும் ப.சிதம்பரங்களும் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணியா?

’'காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது. அது மிகவும் கடினமான பணி'' எனச் சொல்லியிருக்கிறார் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. ஒரு வாரியத்தை உருவாக்குவது அவ்வளவு கடினமான பணியா. இதற்கு நடுவர் மன்றத் தீர்ப்பிலேயே பதில் இருக்கிறது. மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது நடுவர் மன்றம். பக்ரா - பியாஸ் வாரியத்தின் நகலாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது  நடுவர் மன்றம்.

மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களை நியமிப்பதிலும் சிக்கல் இல்லை. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வள ஆதார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில், மாநிலத் தலைமைச் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, காவிரி மேற்பார்வை குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ என 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி 22.5.2013 அன்று மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மேலும் சில தொழில்நுட்ப வல்லுநர்களைச் சேர்த்தாலே போதும். இதன்படி பார்த்தால் மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள்கூட ஆகாது. 2016-ம் செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதாவது, நான்கு நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு. நான்கு நாள்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்பதால்தானே அப்போது அப்படியொரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

இப்போது கடினமான பணி எனச் சொல்வது எல்லாம் தமிழர்களை ஏமாற்றத்தான்.

மேலாண்மை வாரியத்தைத் தடுக்க தேர்தல் நன்னடத்தை விதிகளா?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்துகொண்டிருப்பதற்குப் பின்னணியும் உண்டு. கர்நாடகா சட்டசபைத் தேர்தலை இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்போகிறது தேர்தல் கமிஷன். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதைக் காரணம் காட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு சொல்லலாம்.

கர்நாடகாவுக்கு சாதகமாகவும் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமலும் தப்பித்துக்கொள்ளும் சூழல் ஏற்படலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறது பி.ஜே.பி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்