வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (09/03/2018)

கடைசி தொடர்பு:10:59 (09/03/2018)

அரிய பறவைகள் வாழும் செய்யூர்... அனல்மின் நிலையம் கட்டும் அரசு... கொதிக்கும் சூழலியலாளர்கள்!

செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் செய்யூர், விளாம்பூர், பனையூர் என்ற மூன்று கிராமங்கள் உள்ளன. விளைநிலங்கள் நிறைந்தது விளாம்பூர் பகுதி என்றால் செய்யூர், பனையூர் இரண்டுமே மீனவப் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் செய்யூரில் அனல்மின் நிலையம் தொடங்குவதற்காக 2014-ல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி பனையூரில் சரக்குத் துறைமுகம் கட்டப்படும். அதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் கரியை, கரிதூக்கி இயந்திரம் வழியாக செய்யூருக்கு எடுத்து வருவார்கள். கரி இறக்குமதி செய்வதற்காகத் துறைமுகம் கட்டப்படும் இடத்தில் மீன்பிடித் துறைமுகம் கட்டித் தருமாறு அரசாங்கத்திடம் அந்தப் பகுதி மீனவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், அரசாங்கம் தொழிற்சாலைக்கான துறைமுகத்தை அங்கே கட்டுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவம் அங்கே தரப்படவில்லை. அது மட்டுமின்றி கரிதூக்கிமூலம் கொண்டு செல்லப்படும் கரி, விளாம்பூர் விவசாய நிலங்கள் வழியாகத்தான் செல்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். 

செய்யூர்

உச்சமாக, செய்யூர் அனல்மின் நிலையத்தில் உருவாகும் கழிவுகளைக் கொட்டுவதற்காக ஓடையூர் கடற்கரையில் அமைந்திருக்கும் காயல் (Lagoon) எனப்படும் உவர்நீர் ஏரிப்பகுதியைத் தேர்வுசெய்து அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை ரத்து செய்யுமாறு செய்யூர் மக்கள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது செய்யூரில் அனல்மின் நிலையம் தொடங்கப்படுவதால் மக்களுக்கு மட்டுமின்றி பல்லுயிர்ச்சூழலுக்கும் பெருங்கேடு விளையும் என்பது தெரிய வந்துள்ளது.

என்ன சீர்கேடு?

'இந்தியாவின் முக்கியமான பறவைகளின் பகுதிகள்' (Important Birds Area sites) என்ற ஆய்வறிக்கை 2004-ஆம் ஆண்டு பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் (Bombay Natural History Society) வெளியிடப்பட்டது. அதேபோல் மீண்டும் ஆய்வுகள் செய்து 2017 அக்டோபர் மாதம் மேலும் புதிய பகுதிகள் சில முக்கிய இடங்களாகச் சேர்க்கப்பட்டு வெளியிட்டுள்ளது. 

அதென்ன முக்கியமான பறவைகளின் பகுதிகள்?

பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவை இருக்கும் இடங்களில் பல்லுயிர்ச் சூழல் பெருகுவதற்குப் பேருதவி செய்கின்றன. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவி செய்கின்றன. இயற்கையின் செழுமைக்குப் பக்கபலமாக இருக்கும் பறவைகளைக் காப்பதற்கு அவை அதிகம் வாழக்கூடிய, வலசை (Migration) வரக்கூடிய இடங்களைத் தெரிந்துகொண்டு அது சீர்கெடாமல் பராமரிக்க வேண்டும். அதன் முதல்படியாக ஆய்வுசெய்து பறவைகள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளை பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பட்டியலிட்டனர். அதன் முக்கியத்துவம் உணர்ந்தும் சுற்றுச்சூழல் என்பது மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இதனை உணர்ந்து, பறவை வாழிடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்துகொள்ள, மீண்டும் அதேபோன்ற ஓர் ஆய்வு 2017-ல் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டபோது மேலும் புதிய பகுதிகள் பறவைகளின் வாழிடங்களாக இருப்பதும், பறவைகள் அதிகம் வாழும் காடுகளில் பல்லுயிர்ச் சூழல் மிகுந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

செய்யூர்

பிரச்னை என்னவென்றால், அந்த ஆய்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்யூரும் ஒன்று. அந்தப் பட்டியலின்படி செய்யூர் அதி முக்கியமான பறவை மற்றும் பல்லுயிர்ச் சூழல் பகுதி. இந்த முக்கியமான பறவை மற்றும் பல்லுயிர்ச் சூழல் பகுதிகள் பற்றி பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் முன்னாள் இயக்குநரும், மேற்குறிப்பிட்ட வெளியீட்டின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ஆசாத் ரஹ்மானி அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

ஓர் இடத்தை முக்கியமான பகுதி என்ற வரையறைக்குள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

''ஓர் இடம் முக்கியமான பறவைகளின் பகுதியாகக் குறிப்பிடுவதற்கு நான்கு அடிப்படைக் கூறுகள் கவனிக்கப்படுகின்றன.
- இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வகைப்படுத்திய பட்டியலின் படி, அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களின் எண்ணிக்கை அல்லது வரவு அங்கே குறிப்பிடத்தக்க வகையில் இருக்கவேண்டும்.
- என்டெமிக் உயிரினங்கள் (Endemic species) எனப்படும், அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் பறவைகள் அதிகளவில் இருந்திட வேண்டும்.
- பயோம் உயிரினங்கள் (Biome species) குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் இருந்திட வேண்டும்.
- மொத்தப் பறவைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் இருந்திட வேண்டும்.
இந்த மேற்கூறிய கூறுகளைக் கொண்டுள்ள பகுதிகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெறும்.

டாக்டர் ஆசாத் ரஹ்மானிஅந்தப் பட்டியலின்படி இந்தியாவில் மொத்தம் எத்தனை இடங்கள் முக்கியமான பறவை மற்றும் பல்லுயிர்ச் சூழல் பகுதிகளாக உள்ளன? அதில் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன?

''இந்தியாவில் மொத்தம் 554 இடங்களும், தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன.''

தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் செய்யூர் முக்கியமான பகுதி என்று எவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்?

''பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகளும் முக்கியமானதுதான். அனல்மின் நிலையம் வருவதால் செய்யூர் முழுவதும் உள்ள பல்லுயிர்ச் சூழல் பாதிக்கப்படும். ஏன் அழியக்கூட வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அது தற்போது முக்கியமாகக் கருதப்படுகிறது. செய்யூர் போலவே கொடைக்கானலில் உள்ள பாம்பாறும் இந்தப் பட்டியலில் உள்ள முக்கியமான பகுதி. அங்கும் பாதரசக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்யூர், பாம்பாறு பகுதிகள் இரண்டுமே காக்கப்பட வேண்டியது சுற்றுச்சூழலின் நன்மைக்கான செயற்பாடுகளில் முக்கியமானது.

நீங்கள் கூறும் பட்டியலிட்ட பகுதிகளைக் காப்பதற்கு ஏதேனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளதா?

''ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன் Form 1 என்ற படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். தொழிற்சாலை தொடங்கவிருக்கும் இடம் பிரச்னைக்குரியதா? அது விவசாய நிலமா? தொடங்கவிருக்கும் பகுதிக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பறவை வாழிடப் பகுதிகள், பல்லுயிர்ப் பகுதிகள் ஏதேனும் உள்ளனவா? என்று சில கேள்விகள் அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும். இயற்கை வரலாற்றுச் சங்க விஞ்ஞானிகள் அங்கே ஆய்வு செய்யச்சென்ற ஒரே நாளில் அவர்கள் 77 வகைப் பறவைகளைப் பார்த்திருக்கிறார்கள். அதில் 8 வகைகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. அது மட்டுமின்றி அங்கே வாழும் மக்களே அங்குள்ள பல்லுயிர்ச் சூழல் பற்றி எடுத்துக் கூறுகின்றனர். அப்படியிருக்கத் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஆய்வுசெய்த ஆய்வாளர்கள் அப்படி எந்த விவரங்களையும் அந்தப் படிவத்தில் சேர்க்கவில்லை. சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு இருக்கும் அக்கறைகூட அரசாங்கத்திற்கு இல்லாமலிருப்பது வருத்தத்திற்குரியது.''

செய்யூர் போலவே பட்டியலில் உள்ள வேறு ஏதேனும் பகுதிகள் அரசால் பாதுகாக்கப்படாமல் இருக்கிறனவா?

''இந்தியாவில் 200 முக்கியமான பறவை மற்றும் பல்லுயிர்ச் சூழல் பகுதிகள் பாதுகாக்கப்படாமல் உள்ளன. அதில் 15 இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.''

பின்னர் வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "பட்டியலிடப்பட்டது தொடக்கம் மட்டுமே, அப்பகுதிகளைப் பாதுகாப்பதுதான் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான கடமை" என்பதையும் வலியுறுத்தினார். அந்த முயற்சியில் அவர் பொதுமக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செய்யூர் அனல்மின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்தபோது அங்கே பல்லுயிர்ச் சூழல் எதுவும் இல்லை என்று பொய்யான அறிக்கையை அளித்துள்ளது. ஆனால், அங்கே உறுதியான பல்லுயிர்ச் சூழல் இல்லாமல், பறவை வரத்து இல்லாமல் மேற்கூறும் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. அனல்மின் நிலையம் வருவது, பல்லுயிர்ச் சூழல் நிறைந்திருந்த எண்ணூர் கடற்கரைப் பகுதியின் இன்றைய மோசமான நிலைக்கு செய்யூரும் மாறுவதற்கான தொடக்கமே.

சூழலியல் நன்மையில் பெரும்பங்கு வகிக்கும் பறவைகளை நாம் இழந்துவிட்டால் அந்தப் பகுதியின் பல்லுயிர்ச் சூழலும் அழிக்கப்படும். பல்லுயிர்ச் சூழலின் அழிவு காடுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். அது சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இத்தகைய சங்கிலித் தொடர்புகொண்ட பாதிப்புகளுக்குத் தொடக்கப்புள்ளியாக அமையும் செய்யூர் அனல்மின் நிலையத் திட்டம் வெற்றி அடைவது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பெரிய தீங்கு என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.


டிரெண்டிங் @ விகடன்