Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"ஹாதியாவின் மனஉளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?"

ஹாதியா

``ஹாதியாவும், ஷஃபின் ஜஹானும் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி செல்லும்'' என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

`அகிலா' என்ற பெயரைவிட, `ஹாதியா' என்ற பெயர்தான் நம்மில் பலருக்குத் தெரிந்த பெயராக இருக்கும். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. இவர், 2010-ஆம் ஆண்டு சேலம் சிவராஜ்  ஹோமியோபதி ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளநிலை ஹோமியோபதி படிக்கத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் அவர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவிகளுடன் தங்கியிருந்தார். அப்போது இஸ்லாம் மதத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 2015-ம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறி, தன்னுடைய பெயரை `ஹாதியா'  என்று மாற்றிக்கொண்டர். தன் மகளின் இந்த மதமாற்றச் செயலுக்கு விருப்பமில்லாத ஹாதியாவின் தந்தை அசோகன், கேரளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். விசாரணையில், `மதம் மாறுவது தனிநபர் விருப்பம்' என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்த நிலையில், தன்னுடைய திருமணத்துக்காக இஸ்லாமிய இணையதளத்தில் ஹாதியா, தன் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார். அதன்மூலம் அறிமுகமாகிய ஷஃபின் ஜஹான் என்பவரை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை எதிர்த்து ஹாதியாவின் தந்தை, `லவ் ஜிகாத்' என்ற முறையில் அகிலாவை (ஹாதியா) தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதாக ஷஃபின் ஜஹான் குடும்பத்தினர் மீது குற்றஞ்சாட்டியதுடன், இதுதொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஹாதியாவை தன் பெற்றோருடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் இவர்களின் திருமணத்தை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது.

ஹாதியா

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஹாதியா அதே கல்லூரியில் மாநில அரசின் செலவிலேயே  படிக்கலாம். ஆனால், கணவரின் பொறுப்பில்விட முடியாது'' என்று  தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவித்த ஹாதியா, ``என் கணவருடன் சேர்ந்து இருக்கவே ஆசைப்படுகிறேன்'' என்றார். 

மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஹாதியா -ஷஃபின் ஜஹான் ஆகிய இருவரின் திருமணம் சட்டப்படி செல்லும். மேலும், ஹாதியா விருப்பத்துக்கேற்ப அவர் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் அவருக்கு உண்டு'' என்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ``முதலில் கேரள உயர் நீதிமன்றம், இவர்களுடைய திருமணம் செல்லாது என்ற தீர்ப்பு அளித்ததே தவறு.  இருவரும் மேஜராக இருந்தும், மனம் விரும்பியும் செய்துகொண்ட ஒரு திருமணம் செல்லாது என்று கேரளா உயர் நீதிமன்றம் சொன்னது நியாயமில்லாதது. இப்போது அந்தத் தவற்றைச் சரி செய்துள்ளது உச்ச நீதின்றம். இவ்வளவு காலம் அவர்கள் இருவரும் கொண்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி உள்ளது? உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவிலும், ஹாதியாவுக்கு அந்தக் கல்லூரி டீனைப் பாதுகாவலாக வைத்ததும் தவறான ஒன்று. `லவ் ஜிகாத்' என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கி, ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்தின்மீது அபாண்ட பழி போடப்பட்டு, இந்தத் தம்பதியரைப் பலிகடாவாக்கியுள்ளனர். திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது, அவர்களுக்கு கிடைத்துள்ள ஆறுதல் என்றுதான் சொல்ல வேண்டும். நீதிபதிகள், சட்ட அடிப்படையில் தீர்ப்பை வழங்க வேண்டும்; மனம்போன போக்கில் தீர்ப்பை வழங்கக் கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு" என்றார் தெளிவாக.

ஃபாத்திமா, ஜவாஹிருல்லா

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பாத்திமா, ``இந்தத் தீர்ப்பை இந்திய நாட்டில் வசிக்கும் ஒரு மேஜர் பெண்ணுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். அநீதியை எதிர்த்து குரல் கொடுத்தால், வெற்றி கிடைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள், தைரியமாக இருக்க வேண்டியது அவசியம். சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகள் தைரியசாலிகளாக வளர்க்கப்பட வேண்டும். அதுவே, அவர்களை அநீதிக்கு எதிராகப் போராடவைக்கும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

இந்தத் தீர்ப்பு, ஹாதியாக்களாக வாழும் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றிதான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement