Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதிப் பழங்குடி மது மரணம்... 60 சிசு மரணம்..- கேரளத்தால் ஒதுக்கப்படுகிறதா அட்டப்பாடி? #SpotVisit

மது தனது தங்கையுடன், நல்லமனநிலையில் இருந்தபோது

`இறந்த மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறில்லை’, இப்படியாக வெளிவந்த அட்டப்பாடி மதுவின் உடற்கூறாய்வுத் தகவல்தான் தமிழகக் கேரள எல்லையில் இருக்கும் அந்த மலைக்கிராமம் வரை பயணிக்க வைத்தது. மது,வயது 31. பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் பகுதி மக்களால் அடித்துத் தாக்கப்பட்ட பழங்குடி இன இளைஞர். தாக்கப்பட்ட மது போலீஸாரால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே இரத்தம் கக்கி இறந்தார். தாக்குதலில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரே அந்தச் சம்பவத்தைச் செல்ஃபி எடுத்துப் பதிவேற்றிய காட்சி, சமூக வலைதளங்களில் பரபரப்பானது. மதுவைத் தாக்கியதாக பலசரக்குக் கடை உரிமையாளர் மற்றும் அந்தப் பகுதி ஜீப் ஓட்டுநர்கள் உட்பட பதினாறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவின் வீட்டிற்கு அதிகாரிகளுடன் சென்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதி உதவியாக பத்து லட்ச ரூபாய் தரப்படும் என்று அறிவித்துள்ளார். கூடவே, மதுவின் இறப்புக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று மதுவின் தாயார் மல்லிகாவிடம் உறுதி கொடுத்திருக்கிறார். 

மது தங்கியிருந்த மலைக்குகை

உண்மையில் அட்டப்பாடியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிண்டக்கி என்னும் மலைகிராமத்தின் உச்சியில்  இருக்கிறது மதுவின் வீடு. மிகக் குறுகலாக மூன்று அறைகள் இருக்கும் அந்த வீட்டில் மதுவின் தாயார் மட்டும் வசித்து வருகி்றார். மதுவின் அப்பா மல்லன் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். திருமணம் முடிக்கப்பட்ட மதுவின் இரண்டு தங்கைகளும் அவ்வப்போது வந்து செல்கின்றார்கள். ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டு அந்தச் சிண்டக்கி மலைப்பகுதியின் ஏதோ ஒரு குகையில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் வசித்து வந்த மகன் தற்போது நிரந்தரமாகவே தன்னுடன் இல்லை என்பதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் மதுவின் தாய் மல்லி. நம்மிடம் பேசியதெல்லாம் மதுவின் மாமன் முறை உறவினர் மருதன் மட்டுமே.

மது வீட்டின் ஒரு அறை

மது இருந்ததாகச் சொல்லப்படும் குகை கண்ணுக்கெட்டிய தொலைவில் மலை உச்சியில் தெரிய அதைப் பார்த்தபடியே அமர்ந்து பேசத் தொடங்குகிறார்,” எங்கள் மது பத்து வருடங்களுக்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தான். மர ஆசாரி வேலைக்காக டிப்ளோமா படிக்க அருகில் இருக்கும் பாலக்காட்டுக்குச் சென்று வசித்து வந்தான். அங்கு படித்துக்கொண்டிருந்த போதுதான் அவனுக்கு மனநிலை பிறழ்வு பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இங்கே ஊருக்கு வந்தவன் யார் முகத்தையும் பார்க்காமலேயே இருந்துவந்தான் யாராவது அவனைச் சந்திக்க வந்தால் இடது பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொள்வான். என்ன பிரச்னை? எதனால் இப்படி ஆனான்? என்று தெரிந்துகொள்ள நாங்கள் பாலக்காடு சென்று விசாரித்தபோது காதல் தோல்வி என்று சொன்னார்கள். ஆனால், எங்களுக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. மதுவை மருத்துவர்களிடம் சென்று காண்பித்து மருந்துகள் கொடுத்து வந்தோம். மருந்து சாப்பிட்ட காலங்களில் நன்றாகத்தான் இருந்தான். ஆனால், அவனுக்கு உடல்நிலையைச் சரியாக்க நாங்கள் மருந்து கொடுத்து வருகிறோம் என்று தெரிந்ததும் எங்களிடம் சொல்லாமல், அதோ அந்த மலை உச்சிக்குச் சென்றுவிட்டான். அதன் பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை திடீரென்று வந்து கொஞ்சம் அரிசியும் தக்காளியும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வான். அப்போதும் கூட யாரிடமும் பேச மாட்டான்.  ``எதற்குடா மலையில் போய் உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டால், ‘என் தெய்வம் என்னை அங்கதான் அழைக்குது’ என்பான். இப்படியாக  அவன் அந்த மலைக்குச் சென்று பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு நாங்களும் மதுவை இங்கே அழைத்து வரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டோம்” என்று சிறிது நேரம் அமைதியாகியவர் மீண்டும் தொடர்கிறார்.

அட்டப்பாடி மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்லும் பாதுகாப்பற்ற சாலை

“மக்களுடன் பேசுவது பிடிக்காது என்பதால் மது அந்தக் கடைகளுக்கு எல்லாம் செல்லமாட்டான். சம்பவம் நடந்த அன்று மது அவனது குகையில்தான் இருந்தான். அவன்தான் அரிசி திருடுகிறான் எனத் தவறாக நினைத்துக்கொண்ட பலசரக்குக் கடை உரிமையாளர் எங்கள் பகுதியில் இருக்கும் சில ஜீப் ஓட்டுநர்களுடன் அவனது குகைக்குச் சென்று அங்கிருந்து அடித்து இழுத்து வந்துள்ளார்கள். போதாக்குறைக்கு அவனை சுமார் இருபது கிலோ எடையுள்ள கற்களை மூட்டையாகக் கட்டிச் சுமக்க வைத்து அழைத்து வந்துள்ளார்கள். அதன் எடை தாங்காமல்தான் மது இறந்திருக்கிறான்” என்றார். 

மதுவின் தாயார் மல்லி அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளியில் அங்கன்வாடி உதவியாளராகப் பணியாற்றுகிறார்.  மது கட்டிவைத்துத் தாக்கப்படும் புகைப்படம் வாட்ஸ் அப் வழியாக அந்தப் பகுதியில் மொபைல் வைத்திருக்கும் ஒருவருக்கு வந்து சேர அதனையடுத்து தகவல் தெரிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார் மல்லி. அவர் அங்கு சென்று சேர்ந்ததும் மது இறந்துவிட்ட தகவலும் வந்தடைந்திருக்கிறது. தற்போது தன் மகன் மதுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஒவ்வொரு வழக்கறிஞர்களாகச் சந்தித்து வருகிறார் மல்லி. 

உண்மையில் அரிசி திருடிய நாற்பது வயது மதிக்கத்தக்க தாடி வைத்த நபர் பிறகு பிடிபட்டிருக்கிறார். ஆனால், மதுவிற்கு ஏற்பட்ட நிலையால் பிடிபட்ட அவரை எதுவும் செய்யாமல் எச்சரித்து மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்.

மதுவின் உறவினர் மருதன் மதுவின் இறப்பால்  தற்போது கவனம் பெற்றிருக்கும் அட்டப்பாடி இதற்கு முன்பே  குழந்தைகள் அதிகம் இறக்கும் பகுதியாக இந்தியப் பிரதமர் வரை பரபரப்பாகப் பேசப்பட்ட பகுதி. பசுமைமிக்க கேரளாவின் பஞ்சம் சூழ்ந்த மலைக்கிராமமாக அறிவிக்கப்பட்ட இடம். 2017 ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட அரசின் மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி அந்தப் பகுதியில் இருக்கும் சுமார் 3000 பிள்ளைகளுக்கு உடனடி ஊட்டச்சத்து நிவாரணம் தேவையாக இருந்தது. சென்ற வருடம் மட்டும் சுமார் 60 குழந்தைகள் வரை தங்கள் பகுதியில் இறந்துவிட்டதாகப் பேச்சினூடே பதிவு செய்கிறார் மருதன். “எங்கள் பகுதியில் மருத்துவமனை என்று தனியாக எதுவும் இல்லை. இங்கிருந்து மருத்துவமனை செல்வதற்கு மலையைக் கடந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். மலைக்குச் சாலை வசதி இல்லை என்பதால் ஜீப்புகள் மட்டுமே வந்துசெல்லும், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் செல்ல அதில்தான் பயணிக்க வேண்டிய சூழல்” என்கிறார். 

சாலைப்போக்குவரத்து மட்டுமில்லை, தண்ணீர் பிரச்னை,  மின்சாரச் சிக்கல், பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் சாலை இல்லாத சிக்கலால் பிள்ளைகள் படிப்பதற்குப் போய் வரமுடியாத சூழல் எனப் பல பிரச்னைகளை முன்வைக்கிறார்கள் மருதனும் அந்தப் பகுதியில் வசிக்கும் மற்ற மக்களும். தண்ணீர் சிக்கலுக்குத் தீர்வு காண நாங்களே எங்கள் செலவில் பவானி ஆற்றிலிருந்து நீரை கொண்டுவர இவர்களே குழாய் வசதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுவின் வீடு உட்பட சில வீட்டிற்கு மட்டுமே மின்சார வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. அவர்களைத் தவிர்த்து அங்கிருக்கும் சுமார் 4000 குடியிருப்புகளுக்கு மின்சார வசதி இல்லை என்பது அந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

அங்கிருக்கும் இளைஞர்களில் நூற்றுக்குச் சுமார் பத்து இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி இருக்கிறது. மற்றவர்கள் அரைவேளை சாப்பாட்டுக்கு நிலங்களில் உரமிடுவது போன்ற கூலி வேலைகளை நம்பிப் பிழைத்து வருகிறார்கள். சிலர் வெளியூர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்கிறார்கள். அப்படி வேலைவாய்ப்பு தேடி பயணப்பட்ட இளைஞர்களில் மதுவும் அடக்கம். ”ஒருவேளை அந்த மலைகிராமத்திலேயே தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்திருந்தால் மதுவின் இறப்பு கூடத் தடுக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறிவிட்டு மௌனமாகிறார் மருதன்.   

“எங்களது மொழி மலையாளம் இல்லை. நாங்கள் தமிழகக் கேரள எல்லையில் மலைப்பகுதியில் வசிப்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் கலந்துதான் பேசுவோம். நாங்கள்   மலையாளம் பேசுவது மிகக் குறைவு. மொழிச் சிக்கல் இருப்பதால் எங்களது கோரிக்கைகள் கேரள அரசுக்குச் சென்று சேர்வதும் மிகக் குறைவு. எங்கள் முறையீட்டை ஏற்று அரசு எங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்ய பணம் ஒதுக்கீடு செய்தாலும் எங்களுக்கு அது வந்து சேர்வதில்லை. அதிகாரிகள் எங்கள் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார் அவர். 

பழங்குடி மக்களின் இந்தப் புகார்களுடன் கேரளாவின் கலாசாரம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரைச் சந்தித்தோம், “பிரச்னைகள் என்னவென்று கேட்டு விரைவில் அத்தனையும் சரிசெய்யப்படும்” என்பதே அவரின் பதிலாக இருந்தது. 

ஆதிகுடிகள் என்பதாலேயே அவர்களது உயிரையும் உடைமையையும் துச்சமாக மதிக்கும் போக்கு எப்போது மாறும்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ