Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காட்டுத் தீ இயற்கையா... செயற்கையா?! - கானுயிர் ஆர்வலர்களின் விவாதம் #KuranganiForestFire

காட்டுத் தீ

லையேற்றம் செல்வோருக்கான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை அண்டை மாநிலமான கேரளம் கடைப்பிடித்தாலும் தமிழகம் அதைக் கண்டுகொள்வதே இல்லை என்றும் மலையேற்றப் பயணம் செய்பவர்களால்தான் பெரும் அபாயங்கள் நிகழ்கின்றன என்றும் மாறுபட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 

தேனி மாவட்டம் குரங்கணி மலையேற்றத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலத்த காயங்களுடன் மேலும் பலர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாளில் வனத்தீ ஏற்படுத்திய உயிரிழப்புகளால் மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் கானுலா போவது, மலையேற்றம் செய்வது ஆகியன பரவலாக இருந்தாலும், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. கானுயிர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒரு பக்கம் இருக்க, தகவல்நுட்பத் துறையின் வளர்ச்சியால் வார இறுதிப் பயணங்களாக அந்தத் துறையின் பணியாளர்களும் அடர் வனங்கள், மலைப்பகுதிகளுக்குச் சென்றுவருகின்றனர். இதுவரை தமிழகத்தில் இப்படியொரு பெரும் அபாயம் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இல்லை. ஆனால், முறையற்ற கானுலா, மலையேற்ற முயற்சிகள் ஆங்காங்கே நடப்பதும் அதனால் உள்ளே போனவர்கள் சிக்கி, திரும்பிவருவதற்குள் படாதபாடுபட்டதும் உண்டு என்கிறார்கள் கானுயிர் ஆர்வலர்கள். 

காட்டுத் தீ கானுலா

கோவையில் வசிக்கும் மோகன்குமாருக்கு கானுலா செல்வது, கானுயிர்களைப் படம் பிடிப்பது வாடிக்கை. முதுமலை காடு உட்பட மேற்குத்தொடர்ச்சி மலையின் தமிழக, கர்நாடக, கேரளப் பகுதிகளில் கானுலாவும் மலையேற்றமும் சென்றுவரும் இவரிடம் பேசினோம். 

அப்போது, “நகரமயம் அதிகரித்துவரும் சூழலில், பரபரப்பான தகவல்தொடர்பு சாதனங்கள், அன்றாட இயந்திரமயமான வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, கானுலா செல்வதும் மலையேற்றம் போவதும் இப்போது தேவையாக உள்ளது. காட்டுயிர்களைப் பார்ப்பதும் அடர்ந்த காடுகளின் சூழலுக்குள் இருப்பதும் மனிதருக்குள் புத்துணர்வைத் தருகிறது என்பதைச் சொன்னால் புரியாது; அனுபவித்துதான் உணர முடியும். அதேசமயம், இந்தமாதிரி போகும்போது சமவெளிப் பகுதி பழக்கவழக்கங்களை அங்கேயும் கடைப்பிடிக்கக் கூடாது. எந்தப் பகுதிக்குப் போனாலும் அங்குள்ளவர்களின் துணை இல்லாமல் உள்ளே போகக் கூடாது. கேரளத்தில் சின்னார் என்கிற இடத்துக்கு என் மனைவியுடன் கானுலா போய்வந்தேன். அங்கு வனத்துறையினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரையும் உடன் அனுப்பினார்கள். காரணம், அவர்களுக்குதான் அங்கு எந்த இடத்தில் வனவிலங்குகள் வரும், எந்தப் பகுதியில் காட்டாறு வரும். பாம்புகள் போன்ற உயிரினங்களால் எங்கே ஆபத்து வரும் வாய்ப்புகள்... என்பன குறித்து நன்றாகத் தெரியும். வனத்துக்குள் எதிர்ப்பட்ட பாறைப் பக்கத்தில் திடீரென சத்தம். மான் ஒன்றை கருஞ்சிறுத்தை ஒன்று துரத்திக்கொண்டு வந்தது. மான் தப்பிவிட்டது. அந்தச் சிறுத்தையும் திரும்பிவிட்டது. நாங்கள் பாதுகாப்பாக அதைப் பார்க்க முடிந்தது. இன்னொன்று, அந்தப் பகுதியில் கருஞ்சிறுத்தை இருப்பது எங்கள் மூலம்தான் பதிவானது. தமிழகத்தில் கானுலாவுக்கு வனத்துறையினரின் அனுமதி, கட்டுப்பாடுகள் இருந்தாலும், இப்படியான ஏற்பாடு அரிதாகத்தான் இருக்கிறது. காடுகளைப் பற்றி வனவிலங்குகளைப் பற்றி கற்பிக்கப்பட வேண்டும். இதில் அரசின் பங்கு அதிகம்” என்றார் கானுலா சூழல் ஆர்வலர் மோகன்குமார். 

கானுலா மலையேற்றம்

இப்படி கானுலா ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான், அபாயமான நிகழ்வுகளுக்குக் காரணம் என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத சுற்றுச்சூழல் கல்வியாளர் ஒருவர். 

” மாணவர்கள், ஆய்வாளர்கள் வனங்களுக்குச் செல்வது அவசியமானது. மாணவர்கள் மலையிலுள்ள தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் பாடம்செய்யவும் மருத்துவர்கள் மூலிகைகளைப் பற்றி ஆய்வுசெய்யவும் கானுலா அதிகம் பயன்படுகிறது. இவர்கள் உள்ளே போவதும் வெளியே வருவதும் தெரியாமல் பழங்களையும் கொட்டைகளையும் தண்ணீரையும் தவிர மற்றவற்றை எடுத்துச்செல்வதில்லை.  ஆனால் இப்போது கானுலாவும் மலையேற்றமும் சுற்றுலா செல்வதைப் போல ஆகிவிட்டது. இப்படிப் போகிறவர்களில் பெரும்பாலனவர்கள், வனங்களின் கானுயிர்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறை இல்லாமல் நடந்துகொள்கின்றனர். யாரும் போகாத இடத்துக்குப் போகவேண்டும் என்பதை சாதனை நிகழ்த்தியதைப் போல எண்ணிக்கொள்கின்றனர். குடித்துக் களிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. காட்டில் போய் சமைப்பது, தீமூட்டிக் குளிர்காய்வது போன்றவற்றால் காட்டு வளத்தை, தன்மையைக் கெடுப்பது மட்டுமில்லாமல், உயிருக்கு ஆபத்தான சூழல்களையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். பல கானுலா, மலையேற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், அப்பட்டமாக விதிகளை மீறுகிறார்கள். கானுலா செல்பவர்கள், குறைந்தபட்சம் 5-7 பேர் கொண்ட குழுவாகத்தான் செல்லவேண்டும். அப்படிப் போகும்போது திடீரென வனவிலங்குகளோ காட்டாறோ வேறு ஆபத்தோ வரும்போது காத்துக்கொள்ள முடியும். மகிழ்ச்சிக்காக, வார ஓய்வுக்காக கானுலா போகிறவர்கள் இதைச் சட்டைசெய்வதே இல்லை. எளிதாக இதை அலட்சியம் செய்தபடிதான் போய்வருகிறார்கள். யாரும் போகாத இடத்துக்கு நான் போய்வந்தேன் என படமெடுத்துக் காட்டிக்கொள்வது, கெடுநோயைப் போலப் பரவிவருகிறது. அந்தப் பரவசத்தில் இவர்கள் தங்களுக்கு நேரக்கூடிய உயிராபத்தைப் பொருட்படுத்துவதில்லை” என்று கோபமும் ஆதங்கமுமாகப் பேசுகிறார், சூழல் கல்வியாளர். 

கானுலா மலையேற்றம்

“குரங்கணி காட்டுத்தீ போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதற்கான இயற்கையான காரணம் மிகவும் அரிது” என்கிறார், காட்டுயிர்ப் பாதுகாப்புக்காக சட்டரீதியாகவும் பிரச்சாரம் மூலமாகவும் செயற்பட்டுவரும் சுப்பிரமணிய ராஜா. தேனியை ஒட்டியுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, கம்பம் மணலாறு, வெள்ளிமலை, குரங்கணி, தேவாரம் மலைப்பகுதிகளின் வனவளப் பாதுகாப்பு குறித்து அக்கறையாகப் பேசிவருகிறார். 

“ தேனி பகுதியைப் பொறுத்தவரை ஐநூறு ஆயிரம் மாடுகளைக் கிடை போட்டு, விவசாய நிலங்களுக்கு உரம்போடுவது ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்தக் கிடை மாடுகளை பல மாதங்களுக்கு மலைப்பகுதிகளில் மேய்த்துவருபவர்கள், தனியாக இருக்கிறார்கள். இவர்கள், கோடை தொடங்கும் சமயத்தில் புல்வெளிகள் காய்ந்துவிடும் என்பதால், தீயைப் பற்றவைத்து, குறிப்பிட்ட பகுதியில் பொசுக்கிவிடுவார்கள். மலைப் பகுதி என்பதால் அடுத்து லேசா மழை பெய்தால் , அந்த இடத்தில் புதுப்புல் முளைத்துவிடும். மேய்ச்சல் பாதிக்கப்படாது. இந்த கிடை மாட்டுக்காரர்கள், மாட்டைக் கடித்துவிடுகின்றன என்பதற்காக புலிகள், சிறுத்தைகளுக்கு விச உணவை வைக்கவும் செய்வார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். வேட்டைக்குச் செல்பவர்கள் வனத்துறையினரைத் திசைதிருப்புவதற்காகவும் இப்படி தீவைப்பார்கள். கானுலா போகிறவர்கள் சிகரெட் பிடிக்கவும், சமைப்பதும் காடு எரியக் காரணம். மேற்குத் தொடர்ச்சி மலையில் மின்னல், மின்சார கம்பிகளின் உரசலைத் தவிர வேறு காரணங்களால் இந்த அளவுக்கு காடெரிப்பு நிகழ வாய்ப்பு குறைவு. இந்தக் குழுவினர் முறைப்படி மாவட்ட வன அதிகாரி, ரேஞ்சர் ஆகியோரின் அனுமதியுடன் வழிகாட்டிகள் துணையுடன் உள்ளே போயிருக்கவேண்டும். அப்படிப் போயிருந்தால் தீ எரிந்தாலும், காற்று கீழே வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து தப்பியிருக்கமுடியும்” என்கிறார், கானுயிர்ப் பாதுகாப்புச் செயற்பாட்டாளர் சுப்பிரமணிய ராஜா. 

காட்டைக் காடாக வைப்பது, மனிதருக்கு அழகு மட்டும் அல்ல; ஆபத்தில் இருந்து காப்பதும்கூட என்பதை எல்லாரும் உணர்ந்துகொள்வது, காலத்தின் கட்டாயம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement