Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"நெருப்புக்கு நடுவுல மாட்டிக்கிட்டோம்... தயவு செஞ்சு காப்பாத்தும்மா..!" #KuranganiForestFire

குரங்கணி காட்டுத்தீ

நிவ்யா பிரகிருதிக்கு வயது 23. வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து குரங்கணியில் மலையேற்றம் செய்வதற்காகக் கிளம்பியிருக்கிறார் நிவ்யா. அங்கு ஏற்பட்ட தீ விபத்தினால் தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தாய் விஜயாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

என்ன நடந்தது?  

சி.டி.சி என்கிற சென்னை ட்ரெக்கிங் கிளப் ஏற்பாடு செய்த மலையேற்றப் பயிற்சி அது. என் மகளையும் சேர்த்து 29 பெண்கள் அந்த மலையேற்றத்துக்காகக் குரங்கணி சென்றனர். முறையாக 1,000 ரூபாய் கட்டி, டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். முதல் நாள், அதாவது சனிக்கிழமை காலை ட்ரெக்கிங் சென்று விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். மறுநாள், ஞாயிறன்று ட்ரெக்கிங் சென்றபோதுதான் தீயில் சிக்கியிருக்கிறார்கள். 2 மணிக்குத் தீ ஏற்பட்டிருக்கிறது. நான் சென்னையில் இருந்தேன். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே நாங்கள் 100, 108 என அனைவரிடமும் தொடர்பு கொண்டு பேசினோம். அங்கே சிக்கிக்கொண்டவர்களும் இயன்றளவு எல்லா வகையிலும் தப்பிக்க வழி தேடினார்கள். ஆனாலும் நாங்கள் உதவி கேட்ட யாருமே, தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்த கிராமத்து மக்கள் இரவிலிருந்து காலை வரை சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

தீ விபத்து எப்போது ஏற்பட்டது?

2 மணிக்கு ஏற்பட்டது. ஆனால், அந்த தீ வெள்ளிக்கிழமையிலிருந்தே இருக்கிறது. முதலில், வனத்துறையினர் அங்கு மலையேற்றம் செய்வதற்கு அனுமதி தந்திருக்கக் கூடாது. இரண்டாவது, அங்கு தொடர்பு கொள்வதற்கான எந்த நெட்வொர்க் வசதிகளும் கிடையாது, கைபேசி மூலமாகத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமல் அங்கு சிக்கிக்கொண்டவர்கள் தவித்துக்கொண்டிருந்தார்கள். எங்களால் சிக்கிக்கொண்டவர்களுடன் பேசவே முடியவில்லை. நிர்மலா சீதாராமன் இரவு எங்களால் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க இயலாது, காலையில்தான் அனுப்பி வைக்க முடியும் என்று கூறிவிட்டார். காப்பாற்ற வழியின்றி அங்கு இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தீக்காயங்கள் அதிகமாகி, 9 பேர் இறந்தும் போய்விட்டார்கள். என் பெண் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாள், கடவுளிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். அவளுக்கு வயது 23, தற்போது தான் BBA முடித்துவிட்டு, MBA படித்துக்கொண்டிருக்கிறாள். நாளையிலிருந்து வர்த்தக மேலாண்மை - வெளிநாட்டு வர்த்தகம் என்ற ஆன்லைன் கோச்சிங் அவளுக்குத் தொடங்க இருந்தது. ஆனால், இப்போது அவள் மருத்துவமனையில் இருக்கிறாள்.

ட்ரெக்கிங் ஏற்பாடு செய்த அந்த தனியார் கம்பெனி முறையாக அனுமதி வாங்கியதா? அதை உங்கள் பெண் உறுதி செய்துவிட்டுத் தான் கிளம்பினாரா?

அனுமதி வாங்காமல் அவர்கள் எங்கும் கூட்டிச் செல்ல மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் மகளும் அதை உறுதிபடுத்திக்கொண்டுதான் முன்பதிவு செய்தாள். முறையாக, சட்டரீதியாக அனுமதி பெற்றப் பின்தான் அழைத்துச் செல்வார்கள். உண்மை என்னவென்றால், அங்கு ஏற்கெனவே தீ ஏற்பட்டிருந்தது, இங்கிருந்து கிளம்பிச் சென்றவர்களுக்கு அது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. முறையான தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை.

எப்போது சென்னையிலிருந்து நிவ்யா கிளம்பினார்? காட்டுத் தீ குறித்த செய்திகள் எப்போது உங்களை எட்டின?

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பினாள், சனி காலை ட்ரெக்கிங் சென்றாள். நேற்று 3 மணிக்கு என்னைத் தொடர்புகொண்டு பேசினாள். மேலே ஒரு டீ எஸ்டேட் இருந்தது, அங்கு அவளுக்கு நெட்வொர்க் கிடைத்தது. அங்கிருந்து என்னை அழைத்தாள். “ அம்மா என் கை எல்லாம் எரிந்துவிட்டது, நாங்கள் தீக்கு நடுவில் இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுவதற்கு ஆளில்லை. முகமெல்லாம் தீக்காயம் பட்டுவிட்டது அம்மா. என்னைக் காப்பாற்றும்மா!” என்று கதறினாள். என்னால் என்ன செய்ய முடியும். நான் 100, 108 என்று அழைத்துப் பேசினேன். அங்கு என் பெண்ணுடன் விஜயலட்சுமி என்பவர் இருந்தார். அவர் மாவட்ட ஆட்சியர் முதல் அனைவரையும் தொடர்புகொண்டு பேசினார். அங்கிருந்த கிராமத்து மக்களும் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்ற தங்களால் இயன்றதெல்லாம் செய்தார்கள். கடைசி நொடியில் நிர்மலா சீதாராமன் ராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருக்கிறார், நடுராத்திரியே அவர்கள் வந்துவிட்டார்கள். எல்லாமே அவளுக்குத் தாமதமாகக் கிடைத்ததால் எந்த முயற்சியும் வெற்றிகரமாக அமையவில்லை.

யார் பக்கமோ நேர்ந்த சின்ன கவனக் குறைவு பெரும் வலிகளை உருவாக்கிவிட்டது. வலி சீக்கிரம் ஆற வேண்டும், இதுபோன்ற கவனக் குறைவுகள் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement