வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (13/03/2018)

கடைசி தொடர்பு:15:07 (13/03/2018)

அடிக்கடி பழுதாகும் கூடங்குளம் உலை... காரணத்தைச் சொல்ல மறுக்கிறதா அணுசக்தித் துறை?

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அலகுகளின் செயல்பாடுகுறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது, சி.ஏ.ஜி. இந்த ஆய்வில், கூடங்குளம் அணு உலையில் 1 மற்றும் 2-ம் அலகுகள் நிறுவப்பட்டதுகுறித்தும், அவற்றின் செயல்பாடுகள்குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அவ்வறிக்கையில், கடன் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை, சரியான மேற்பார்வை இல்லை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதுகுறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், இப்போது இரண்டு அலகுகளும் ஒரே நேரத்தில் பழுதடைந்திருக்கின்றன. அதில், முதல் அலகைச் சரிசெய்துவிட்டாலும், இரண்டாவது அலகானது இன்னும் சரி செய்யப்படவில்லை. இதற்கு முன்னர், கூடங்குளம் பழுதடைந்த வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம். 

கூடங்குளம் அணு உலை

இது இந்த வருஷம்(2018)... 

கூடங்குளம் அணுஉலையின் இரண்டாவது அலகில், கடந்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி, திடீரென வால்வு பழுது ஏற்பட்டது. அதைச் சரிசெய்யும் பணிகள் ரஷ்ய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், முதலாவது அணு உலையின் நீராவிக் கொதிகலன் வால்வில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக, மார்ச் 8-ம் தேதி, முதலாவது அணு உலையின் செயல்பாடும் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே, இரண்டாவது அணு உலை பழுது காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், முதலாவது அணு உலையின் வால்வு பழுதடைந்து செயல்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணு உலைகளிலும் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டது. விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியின் காரணமாக, முதல் அலகு நேற்று முதல் தற்காலிகமாகச் செயல்பட்டு, மின் உற்பத்தியைத் துவங்கியது. ஏன் தற்காலிகம்? கூடங்குளத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, சரிசெய்துவிட்டதாக இவர்கள் ஒவ்வொரு முறை கூறியபோதும், மீண்டும் மீண்டும் பழுதுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.

இது போன வருஷம்(2017)... 

2016-ம் வருடத்திலும் கூடங்குளம் பழுதானதற்கான கதைகள் அதிகமாக உண்டு. கடந்த 2017-ம் வருடம் டிசம்பர் மாதம், முழுக் கொள்ளளவை எட்டும் என நம்பிக்கைகொண்டிருந்த இரண்டாம் அலகில்தான் இம்முறை வால்வு பழுதடைந்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணுஉலை இன்னும் முழுமையான மின் உற்பத்திக் கொள்ளளவை எட்டவில்லை. இது ஒருபுறம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முதல் அலகிலும் இப்போது வரை பழுதுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று.

"கூடங்குளம் 2-வது அணு உலையின் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதற்காக, ஆகஸ்ட் 4-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்தப் பழுது சரிசெய்யப்பட்டதால்,  நவம்பர் மாதம் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பின்னர், அணு உலையின் பணிகள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சாதகமான நிலை உருவானதால், மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, பவர் கிரீட் எனப்படும் தென்மண்டல பகிர்மானக் கழகத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது. கூடங்குளம் முதல் அணு உலையிலிருந்து தற்போது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது. இரண்டாம் அணுஉலையில், அடுத்த ஒரு வார காலத்துக்குள் முழு மின்உற்பத்தி அளவான 1000 மெகாவாட் அளவை எட்டும்" என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநரான எஸ்.வி.ஜின்னா, கடந்த வருட அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

ஆனால் உண்மையில், கூடங்குளம் அணு உலை மொத்தமாக இதுவரை 40-முறைக்கும் மேல் பழுதடைந்துள்ளது. இந்தியாவின் 'மிகப்பெரிய அணு உலை', 'மைல்கல்' என வர்ணிக்கப்பட்ட இது, அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவிகிதத்தைக்கூட முழுமையாக எட்டவில்லை. நிலைமை இப்படியிருக்க, இப்போது மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், ஐந்து மற்றும் ஆறாம் அலகுகள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

சுந்தர்ராஜன்

இதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், "கூடங்குளம் அமைக்க ஆரம்பித்த நேரத்திலேயே இந்த அணுஉலை பாதுகாப்பானது இல்லை என்று போராடிய மக்கள் பலமுறை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்திய அணுசக்திக் கழகம், மிகவும் பாதுகாப்பானதுதான் என்று உறுதிபடச் சொன்னது. இன்று அடிக்கடி பழுதாகும் அணு உலையால், என்ன ஆபத்துகள் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது, மக்கள் சொன்னதுதான் சரி என்பதை நிரூபித்துள்ளது. முதலில், இவர்கள் சொன்ன இரண்டு அலகுகளிலும் முழு மின் உற்பத்திக் கொள்ளளவைக் கொண்டுவந்து இரண்டு வருடம் முழுமையாக இயக்கிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் வேண்டுமானால் அடுத்தடுத்த அலகுகளைக் கட்டலாம். இதுதவிர, கூடங்குளம் வழக்கின் விசாரணை நடந்த சமயத்தில், அணுஉலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகள் எப்படி மேலாண்மை செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு இந்திய அணுசக்தி துறை, கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகள், அணு உலையிலேயே சுமார் 7 ஆண்டுகள் பாதுகாக்கப்படும் என்றும், பின்பு நிரந்தர சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் கூறியது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணு உலையிலேயே அணுக்கழிவுகளைச் சேமித்துவைப்பது என்பது ஆபத்தானது என்றது. அதற்கு முக்கிய காரணம், புகுஷிமாவில் அணுஉலையில் இருந்த அணுக்கழிவு சேமிப்புக்கிடங்கு விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளானது என்பதுதான். அதன் அணுக்கதிர் வீச்சு, அதிபயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க, அணு உலையிலிருந்து தொலைவில் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்குகள் (Away from Reactor) அமைக்கப்படும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்கு வாரியம் கூறியிருந்தது. 

இதை, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, 2013-ம் ஆண்டு தீர்ப்பில் 5 வருட காலத்திற்குள்ளாக கூடங்குளம் அணுக்கழிவுகளைச் சேமிக்க அணு உலையிலிருந்து தொலைவில் சேமிப்புக் கிடங்கை அமைக்க உத்தரவிட்டது. மேலும், அணுக்கழிவுகளை நிலத்தின் ஆழத்தில் நிரந்தரமாகப் புதைக்கும் (Deep Geological Repository) திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
ஆனால், தற்போதுதான் இந்திய அணுசக்தி நிறுவனம் வேறு ஓர் இடத்தில் (Away from reactor AFR ) அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் திட்ட வரையரைகளை வகுத்துக்கொண்டுவருகிறது. கடந்த வருடம்தான், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், கூடங்குளம் அணு உலை, இதுவரை இந்திய விஞ்ஞானிகள் அறியாத புதிய தொழில்நுட்பம் கொண்டது. அந்த உலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவுகள் முழுவதும் மாறுபட்டவை. அதை மேலாண்மை செய்ய, தங்களிடம் தற்போது போதிய தொழில்நுட்ப வல்லமை இல்லை என்றும், ஆய்வு நிலையிலேயே திட்டம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது, அணுசக்தி நிறுவனம். மேலும், நிரந்தர அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு (DGR ) அமைக்க வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றும் கூறுகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா வகை அணுக்கழிவுகளும் மறுசுழற்சி செய்யப்பட்டு, அணு உலையில் மீண்டும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அணுக்கழிவு என்பது பாரத தேசத்தின் சொத்து என்று கூறி, இதற்காகத்தான் கல்பாக்கத்தில் ஈனுலைகள் அமைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், உலகத்தில் எங்கேயும் இல்லாத ஈனுலைகளை அமைக்கும் தொழில்நுட்பமும் இந்தியாவில் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய, அதற்குரிய தொழில்நுட்பத் திட்டம் இல்லாதபோது, அணு உலைகளைச் செயல்பட எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது" என்றார். 

சுப.உதயகுமார்

இதுபற்றி சமீபத்தில் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஏராளமான குளறுபடிகளும் கோளாறுகளும் இருக்கின்றன. இந்திய கணக்குத் தணிக்கையாளர் குழு (சி.ஏ.ஜி) ஆய்வில், தவிர்த்திருக்கவேண்டிய வட்டித் தொகைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கடன்கள் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை. மின்சாரக் கட்டணம் நிர்ணயித்ததில் பல பிரச்னைகள், ரஷ்ய நிறுவனங்களுக்குத் தேவையில்லாத சலுகைகள் எனப் பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை உலகத் தரமற்றது; அது ஆபத்தானது என்று கூடங்குளம் ஆரம்பிக்கப்பட்ட அன்றே சொன்னோம். அதுவும் விரைவில் நிரூபிக்கப்படும். இந்த அணுமின் நிலையம், தென்தமிழக மக்களின் மேல் தொங்கும் கத்திதான்" என்றார். 

முன்னர் கூறியதுபோல, கூடங்குளம் அணுஉலை பழுதாவது, இன்றோ, நேற்றோ நடப்பது அல்ல. இதுபற்றி ஆர்.டி.ஐ-யில் கேட்டபோது, அணு உலையின் செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டு 27.12.2017-ம் தேதி வரை முதல் அலகு 480 நாள்களும், இரண்டாவது அலகு 138 நாள்களும் பழுது காரணமாகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மூடி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அணுசக்தி நிறுவனத்திடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்படும்போதெல்லாம், அவை ரகசியத் தகவல்கள் என்கிற ரீதியிலேயே பதில்கள் வருகின்றன.

 


 


டிரெண்டிங் @ விகடன்