வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (17/03/2018)

கடைசி தொடர்பு:16:06 (17/03/2018)

'கே.சி.பழனிசாமி ஸ்டேட்மென்ட் ... ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் நடுங்கியது ஏன்..?''

ஜெயலலிதா கே.சி.பழனிசாமி அதிமுக

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, கருத்து தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி. பழனிசாமி, கட்சியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஆளும் கட்சியை கலங்கடிக்கச் செய்து விட்டது. அதற்கான காரணங்கள் என்ன என்பதுதான், இப்போது தமிழக அரசியலில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக 29.12.16 அன்று, அவரின் தோழி வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தமுள்ள 2,141 பொதுக்குழு உறுப்பினர்களில் அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த 2,090 பேர் சசிகலாவை ஒருமனதாகக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தனர். 

'சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என்று தெரிவித்து 6.1.2017 அன்று காங்கேயம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருச்செங்கோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.பழனிசாமி, இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், அ.தி.மு.க-வில் நடந்த அதிரடி அரசியல் திருப்பங்களால், முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார். பன்னீர்செல்வத்தோடு இணைந்து கே.சி.பழனிசாமியும் செயல்பட்டார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்னர், முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமியை உட்காரவைத்தார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனையும் அவர் நியமித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி தனித்து செயல்பட்டார். சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டியதுடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதலில் அறிவிக்கப்பட்டபோது, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் இணைந்தனர். தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு, ஓ.பன்னிர்செல்வம் அணி வழக்கு, டி.டி.வி.தினகரன் அணியினரின் வழக்கு எல்லாவற்றையும் விசாரித்து, இரட்டை இலையையும் அ.தி.மு.க-வையும் ஒன்றிணைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்கியது தேர்தல் ஆணையம்.

இரு அணிகளும் இணைந்த பிறகு பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு நியமிக்க வேண்டியது இருந்தது. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மற்ற 11 பேர் இதுவரை நியமிக்கப்படவே இல்லை. வழிகாட்டும் குழுவில் தனக்குப் பொறுப்பு வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், டெல்லி தேர்தல் ஆணையத்தில் போட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோர் வலியுறுத்தினர். அதை கே.சி. பழனிசாமி கேட்காதது மட்டுமல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கே.சி.பழனிசாமி வலியுறுத்தி வந்தார். மேலும், கோவையைச் சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் கே.சி.பழனிசாமிக்கும் அரசியல்ரீதியாக பனிமோதல் இருந்து வந்தது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; இல்லை என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கும்' என்று கே.சி.பழனிசாமி சொன்னதை முதல்வர் பழனிசாமியிடம் எடுத்துச் சொல்லியதே வேலுமணி டீம்தான் என்று சொல்கிறார்கள். அதாவது, கே.சி.பழனிசாமியின் பேச்சு, தமிழக ஆட்சிக்கே ஆபத்தாகி விடும் என்று போட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். இதையடுத்தே தடாலடியாக கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்கள்.  

கே.சி.பழனிசாமி கல்யாணத்தில் எம்.ஜி.ஆர்

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாக 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. இதில், தமிழக அமைச்சர்கள் பலருடைய பெயர்களும் இருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமான வரிச்சோதனை, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு, மேலும் 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கு ஆகியவையும் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில், தலைக்கு மேல் கத்திபோன்று தொங்கிக் கொண்டு, மிரட்டிக் கொண்டு இருக்கின்றன. இவையெல்லாம் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் நடுக்கத்துக்கு காரணம் என்றும், அதன் காரணமாகவே கே.சி.பழனிசாமிக்கு எதிராக அவசர, அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் உள்விவரம் அறிந்தவர்கள். 

இந்தப் பிரச்னை குறித்து கே.சி.பழனிசாமி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர சட்டப்போராட்டம் நடத்தினார். அதை வலியுறுத்தித்தான் நான் பேட்டி கொடுத்தேன். அப்படி நான் சொன்ன கருத்தில் தவறு இருந்தால் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கி இருக்கலாம். ஆனால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே டிஸ்மிஸ் செய்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எல்லாம் செல்லாது. இந்தப் பிரச்னை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் என்னை வளர்த்தெடுத்தார்கள். அவர்கள் வழியில் நடப்பேன். அ.தி.மு.க தொண்டர்களே கட்சிக்குப் பலம். எனக்கு, மடியில் கனம் இல்லை; எனவே, வழியில் பயம் இல்லை. எப்போதும் போல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பரப்பும் வேலைகளில் ஈடுபடுவேன்'' என்றார். 

அ.தி.மு.க-வில் மேலும் ஒரு அணி உதயமாவதற்கான வேலைகள் தொடங்கி விட்டன..? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்