''நிலையான மனநிலை இல்லாதவர் நாஞ்சில் சம்பத்!'' கடுகடுக்கும் சி. ஆர்.சரஸ்வதி | Nanjil sampath is never stable in his stand, says CR saraswathi

வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (18/03/2018)

கடைசி தொடர்பு:08:39 (18/03/2018)

''நிலையான மனநிலை இல்லாதவர் நாஞ்சில் சம்பத்!'' கடுகடுக்கும் சி. ஆர்.சரஸ்வதி

நாஞ்சில் சம்பத்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பேரறிஞர் அண்ணாவுக்குக் கிடைக்காத இளைஞர் படை டி.டி.வி.தினகரனுக்குக் கிடைத்துள்ளது. தமிழகம் தேடிக்கொண்டிருந்த தலைவனை ஆர்.கே.நகர் மக்கள் நமக்குக் கொடுத்துள்ளார்கள். அவர், சுயேட்சை இல்லை... சுயம்பு” எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பேசியிருந்தார், டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத். இந்த நிலையில், திடீரென்று அவரது அணியில் இருந்து விலகி இருக்கிறார் . அவருடைய இந்த விலகல்தான் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட். 

கடந்த 15 -ம் தேதி மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். இந்த விழாவில், நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. அப்போதே அவர், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து விலகக்கூடும் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து விலகியதுடன், அவர் அணியில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தும் இடத்தில் இருக்க தமக்கு விருப்பம் இல்லை” என்றார். “இந்த விலகல் முடிவுக்கு அண்ணாவையும், திராவிடத்தையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தாலும் உண்மையான காரணம் இது இல்லை” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். குறிப்பாக, டி.டி.வி.தினகரன் குறித்து சில கருத்துகளை நாஞ்சில் சம்பத் வெளியிட்டதாகவும், அதற்கு தினகரன் தனது கொதிப்பை அவர் மீது காட்டியதாகவும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே அவர் விலகியதாகவும் கூறுகிறார்கள்.

சரஸ்வதி

இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதியைத் தொடர்புகொண்டு பேசினோம்.  “ம.தி.மு.க-வில் நாஞ்சில் சம்பத் இருந்தபோது அம்மாவைப்பற்றி (ஜெயலலிதாவை) எவ்வளவு மோசமான விமர்சனங்களை வைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப் பேசிவிட்டு அ.தி.மு.க-வுக்கு வருகிறேன் என வந்தவரை, அவர் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு கட்சியில் இணைத்துக்கொண்டார் அம்மா. அதோடு நிறுத்தாமல் அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு, கார் என சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்துகொண்டு, கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத். இதையறிந்த அம்மா, அவர் தொலைக்காட்சிகளில் பேசுவதற்கு தடைவிதித்தார். அம்மா மரணித்த நிலையில், ‘சின்னம்மாவின் (சசிகலாவின்) தலைமையை ஏற்பீர்களா?’ என்றதற்கு, ‘எனக்கு பெரியம்மாவையும் தெரியாது; சின்னம்மாவையும் தெரியாது’ எனப் பேசிவிட்டு, அடுத்த நாளே சின்னம்மாவிடம் ஐக்கியம் ஆனார். ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, அம்மா கொடுத்த அதே மரியாதையைச் சின்னம்மாவும் கொடுத்தார். சின்னம்மா சிறைக்குப் போன பிறகு எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில்  கட்சி இயங்கியபோது அவரைப் பாராட்டிப் பலமுறை பேசியுள்ளார். 

இந்த நிலையில், அண்மைக்காலமாக எங்களுடைய  தலைமை ஏற்பாடு செய்யும் எந்தக் கூட்டங்களுக்கும் வராமல் தவிர்த்து வந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த முடிவு ஒன்றும் புதிது அல்ல... நிலையான மனநிலை இல்லாதவர், அவர். பல வருடங்களாகக் கட்சியில் நல்ல பொறுப்பைக் கொடுத்திருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவையே தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் அவர். அவரை, மிக மோசமாக விமர்சனம் செய்தவர். அம்மா, சின்னம்மா என பாரபட்சமின்றி மிக மோசமாக விமர்சித்துவிட்டு கட்சிக்கு வந்தவர் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்டவர், எங்களுடைய கட்சி எடுக்கும் முடிவையோ அல்லது  தலைமையை  விமர்சிப்பதையோ நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இதனால் கட்சிக்கு நஷ்டம் இல்லை. அவருக்குத்தான்” என்றார் மிகத் தெளிவாக.

விலகுவது ஒன்றும் நாஞ்சில் சம்பத்துக்குப் புதிது இல்லையே?


டிரெண்டிங் @ விகடன்