வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (20/03/2018)

கடைசி தொடர்பு:19:15 (21/03/2018)

144 தடை..பலர் கைது..சமூக நல்லிணக்கத்திற்குச் சவால்விடுகிறதா... ராம ராஜ்ஜிய யாத்திரை?

 

ராம ராஜ்ஜிய யாத்திரை

ராமர் கோயில் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் ராம ராஜ்ஜிய யாத்திரை என்ற  தங்களுக்கு பலம் சேர்த்த பழைய ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத்.

”தமிழகத்தில் இதுபோன்ற ரதயாத்திரைக்கு எந்த அரசும் அனுமதி அளித்தது இல்லை. இது மதவாத சக்திகளுக்கு இடம் இல்லாத மண். ஆனால், ஆளும் அ.தி.மு.க. அரசு இப்போது ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து தமிழகத்தில் மதகலவரத்துக்கு வழிவகுக்கிறது” என்று குற்றசாட்டை ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளார்கள். 

வடமாநிலங்களில் இந்துத்வாவின்  பலமான அமைப்பாகவும், ஏற்கெனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ராம் ராஜ்ய யாத்திரை என்ற பெயரில் ரதயாத்திரையை அயோத்தியில் துவங்கியது. இந்த ரதயாத்திரையின் முக்கிய கோரிக்கையாக தற்போது வரை சர்ச்சைக்குரிய விசயமாக கருதப்படும் ராமர் கோயிலை கட்டுவதும், ராம ராஜ்ஜியத்தை அமைத்தல், உலக இந்து தினம் அனுசரித்தல், பள்ளி கல்வியில் ராமாயணத்தை கொண்டுவருதல் போன்ற வலுவான மதச்சார்புச் செயல்திட்டத்தை முன்வைத்து இந்த யாத்திரை துவக்கப்பட்டது.  

அத்வானி ரத யாத்திரை

இந்த யாத்திரை  உத்திரபிரதேசத்தில் துவங்கி, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் நிறைவடையும் என்று அறிவித்தார்கள். கேரளா வரை எந்த பிரச்னையும் இல்லாமல் வந்த இந்த யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இதே போன்று ரத யாத்திரையை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அத்வானி குஜராத்தில் இருந்து அயோத்தி வரை நடத்திய முடிவால் கரசேவகர்களின் கரங்களால் பாபர் மசூதி இடிக்கபட்டது. இந்திய மதசார்பின்மைக்கே அச்சுறுத்தலாகவும், இந்திய அரசியல் சாசனத்திற்கு சவாலாகவும்  அமைந்தது அந்த யாத்திரை. அத்வானி நடத்திய அந்த ரதயாத்திரை வடமாநிலங்களில் தாக்கத்தை உண்டுபண்ணியபோதும், தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.மேலும், இது போன்று எந்த ரதயாத்திரையும் தமிழகத்தில் நடப்பதற்கு இதுவரை ஆண்ட எந்த அரசும் அனுமதிக்கவில்லை. ஆனால், முதல்முறையாக விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ரதயாத்திரைக்கு அ.தி.மு.க அரசு அனுமதி அளித்திருப்பதால் தான் இத்தனை எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 

அத்வானியுடன் பிரதமர் மோடி

வடமாநிலங்களில் உள்ளது போன்ற மத உணர்வினால் உந்திதள்ளக்கூடிய சமூகமாக தமிழகம் இருந்ததில்லை. அந்த காரணத்தினால் தான் பி.ஜே.பி-யினால் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற முடியாததற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தை பார்த்த பிறகே இந்துத்வா அமைப்புகள் தமிழகத்தையும் தங்கள் கேந்திரமாக்க முடிவு எடுத்துள்ளார்கள் என்கிறார்கள் இந்த ரதயாத்திரைக்கு எதிரானவர்கள். தமிழக எல்லைக்குள் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என்று சீமான், வேல்முருகன், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டையில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனால் பதட்டம் உருவாகும் என்று கருதிய ஆட்சியாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் மூலம் மூன்று நாட்களுக்கு திருநெல்வேலியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். சட்டசபையிலும் ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நான்கு உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கபட்டதால்,அவர்கள் வெளிநடப்பும் செய்துள்ளார்கள். 

கைது செய்யப்பட்ட வேல்முருகன்

தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலி்ன், “மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபிடியாக அதிமுக அரசு நடப்பதையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும்.உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதுவும் குறிப்பாக அந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது நடத்திக் கொண்டிருக்கும்போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல உச்சநீதிமன்றத்துக்கே அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டியதாக இருக்கிறது. எனவே இந்த ரதயாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் ” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.  

கைது செய்யப்பட்ட திருமாவளவன்

மேலும் ரதயாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்தவும் தமிழக காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை செல்ல இருந்த தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர் காவல்துறையினர். செங்கோட்டை நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்ட திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு சவாலாக இந்த யாத்திரை அமைந்துவிடுமோ என்ற அச்சமும் சிலருக்கு ஏற்படுள்ளது. சமீபத்தில் பெரியாருக்கு எதிரான கருத்துகள், ஆண்டாள் விவகாரம், என பல்வேறு மதபிரச்னைகள் தமிழக அரசியல் களத்தை சூடாக்கிவரும் நிலையில் இந்த ரதயாத்திரை அதற்கு உரமாகிவிடக்கூடாது என்றும் சொல்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்