''ஜெயலலிதா பேசியதை அந்த மூன்று பேர் பார்த்தார்கள்..!'' - சசிகலா வாக்குமூலம் திருப்பம் உண்டாக்குமா? | Three ministers saw jayalalitha, says sasikala affidavit

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (21/03/2018)

கடைசி தொடர்பு:18:09 (21/03/2018)

''ஜெயலலிதா பேசியதை அந்த மூன்று பேர் பார்த்தார்கள்..!'' - சசிகலா வாக்குமூலம் திருப்பம் உண்டாக்குமா?

ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்க அவருடைய தோழி சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனது வக்கீல் மூலம் பிரமாணப்பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கும் சசிகலா, அதில் ஜெயலலிதா பற்றிய விவரங்களைச் சொல்லியிருக்கிறார். 

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாகக் கடந்த 22-09-2016 அன்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தொடர்ந்து 75 நாள்கள் அங்கேயே தங்கி  சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016-ஆம் நாள் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று குரல்கள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் பலரும் ஆஜராகி தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின்  தோழியான சசிகலாவும், இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.  

``ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக யார் யாரெல்லாம் கூறினார்கள்; என்னென்ன சொன்னார்கள் என்பதைக் கூறினால்தான் தன்னால் சம்மனுக்குப் பதில் தர முடியும்'' என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2,956 பக்க ஆவணங்களைச் சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் வழங்கியது. சசிகலா வாக்குமூலத்தை ஆவணமாகத் தாக்கல் செய்யவும் விசாரணை ஆணையம் அனுமதி அளித்தது. 5 முறை வாய்தா வாங்கிய சசிகலா, மார்ச் 12-ஆம் தேதி தனது வக்கீல் மூலம் பிரமாணப்பத்திரத்தை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார். 55 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், 2016 செப்டம்பர் 22-ஆம் தேதியில் இருந்து 2016 டிசம்பர் 5-ஆம் தேதிவரை ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்று சசிகலா விளக்கி இருக்கிறார்.

நீதிபதி ஆறுமுகசாமி

அதில், ``2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி, முதல் மாடியில் தனது அறையில் இருந்து உதவி கேட்டு அக்கா (ஜெயலலிதா) அழைத்தார். அப்போது அவர், பாத்ரூமில் பல் துலக்கிவிட்டுப் படுக்கைக்குப் போய் இருந்தார். இரவு சுமார் 9.30 மணி இருக்கும்போது உதவி கேட்டு அக்கா அழைத்தார். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக, அக்காவுக்கு வழக்கமாக மருத்துவம் பார்க்கும் டாக்டர் சிவக்குமார் அழைக்கப்பட்டார். அக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேரை உடனே அழைத்தோம். அக்காவின் கார் டிரைவரும் வரவழைக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலையில் அக்கா உடல்நிலை இருந்ததால், அப்போலோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரித்தா ரெட்டியின் கணவர் விஜயகுமார் ரெட்டிக்கு அதுபற்றிய தகவலை டாக்டர் சிவக்குமார்  அவசர அவசரமாகத் தெரிவித்தார். 

இதையடுத்து, 10 அல்லது  15 நிமிடங்களில் தேனாம்பேட்டை மற்றும் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைகளில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தன. மயக்க நிலையில் தனது படுக்கையில் இருந்த அக்காவை, ஸ்டெச்சர் மூலம் அப்போலோ மருத்துவமனைப் பணியாளர்கள் கீழே கொண்டுவந்தனர். அதே நேரத்தில், அப்போலோ மருத்துவனைக்கு வேகமாகக் கொண்டு செல்லும் வகையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.  ஆம்புலன்ஸ் வண்டியில் அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அக்காவுக்குச் சுயநினைவு வந்து, `எங்கே கொண்டு செல்கிறீர்கள்..' என்று கேட்டார். `மருத்துவமனைக்குச் சென்றுகொண்டு இருக்கிறோம்'' என்று சொன்னேன். 

செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு முந்தைய நாள், டாக்டர் சிவக்குமார், இரண்டு தடவை அக்காவைப் பரிசோதனை செய்து பார்த்தார்.  `உடல்நிலை மோசமாக இருக்கிறது; கண்டிப்பாக, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்' என்று டாக்டர் சிவக்குமார் சொன்னார். ஆனால், அதை அக்கா ஏற்கவில்லை. `மருத்துவமனைக்கு வர முடியாது' என்று மறுத்துவிட்டார். 2014-ஆம் ஆண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு மன அழுத்தம் காரணமாக அக்கா உடல் நிலை மோசமானது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவரால் முன்புபோல வெகுதூர பயணங்கள் மேற்கொள்ள முடியவில்லை. எனவேதான், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். 

ஆர் கே நகர் மனுதாக்கல்

கட்டுக்கடங்காமல் போன சர்க்கரை நோய் அவரை, மிகவும் வாட்டி வதைத்தது. அதனால், செப்டம்பர் முதல் வாரம் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. சர்க்கரை நோய் மற்றும் தோல் நோய் மருத்துவர் அடங்கிய இரண்டு மருத்துவக் குழுவினர் அக்காவுக்குச் சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தாலும், செப்டம்பர் 19-ஆம் தேதி அக்காவுக்கு காய்ச்சல் அடிக்க அரம்பித்தது. செப்டம்பர் 21-ஆம் தேதி அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதுவே அவரது கடைசி நிகழ்ச்சி ஆகிவிட்டது. 2014 நவம்பர் மாதத்தில் இருந்து செப்டம்பர் 2016 வரை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து 20 மருத்துவர்கள், அக்காவுக்குச் சிகிச்சை அளித்தனர். தேவைப்பட்டால், அவர்களை இந்த விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கலாம்.

செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கண்ணாடி தடுப்பு வழியாக அக்காவைப் பார்த்தார். அப்போது, அக்கா கையை உயர்த்திக் காட்டினார். இந்த விபரங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்காவைப் பார்த்த பிறகு, ஆளுநர் என்னைச் சந்தித்தார். தொழில் துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் சில அமைச்சர்கள் நவம்பர் 19-ஆம் தேதி, ஜெயலலிதாவைப் பார்த்தனர். செப்டம்பர் 22 மற்றும் 27-ஆம் தேதிகளுக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்தனர். 

செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு முந்தைய நாள், ஸ்கேன் எடுக்க  அக்காவைக் கொண்டு செல்லும்போது, அக்கா தனது பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரைப் பார்த்தார். அப்போது அக்கா,  `நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். டாக்டர்கள், இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். நான் விரைவில் வீட்டுக்குத் திரும்பி விடுவேன்' என்றார்.  இந்த உரையாடலை ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தூரத்தில் இருந்து பார்த்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையை ஆவணப்படுத்தும் வகையில் அப்போலோவில்  4 வீடியோ எடுக்கப்பட்டது. இதெல்லாம் ஜெயலலிதா உடல்நலத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதி'' என்று பிரமாணப்பத்திரத்தில் சசிகலா கூறியுள்ளார். 

ஜெயலலிதா உடல்நிலை குறித்து 2015-ஆம் ஆண்டு எடுத்த வீடியோ ஒன்றையும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்தார். 

ஒருவழியாக விசாரணை ஆணையத்துக்கு விளக்கமளித்துவிட்டார் சசிகலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்