``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்!''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி | Sexual violence against rohingya women and girls

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (22/03/2018)

கடைசி தொடர்பு:10:35 (22/03/2018)

``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்!''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி

ரோஹிங்கியா அகிதிகள்

லங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலையில் போர் முடிந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்த தமிழ்ப் பெண்களை சிலர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. அப்படியான கொடுமைக்கு தற்போது ரோஹிங்கியா இஸ்லாமியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். 

ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும், மியான்மரில் உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 

இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் மியான்மர் அரசு பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தனது கண்டனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறைந்தது. இந்தக் கலவரத்தால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இதையடுத்து, இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக  உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 

ரோஹிங்கியா அகதிகள்

இது தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று, அண்டர்கவர் இன்வெஸ்டிகேஷன் செய்து அதன் காட்சிகளையும் பாதிப்புக்குள்ளான  பெண்களின் வாக்குமூலத்தையும் நேரடியாகக் களத்துக்குச் சென்று பதிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் அகதிகளாகத் தங்கியுள்ள  ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு மியான்மரின் நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தற்போது புதிய தாக்குதலுக்கு  அங்குள்ள பெண்கள் தள்ளப்பட்டுள்ள அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.  அதில், அன்வாரா என்ற 14 வயது சிறுமியின் பெற்றோர்கள் கலவரத்தில் இறந்துவிட, அந்தச் சிறுமி தனித்துவிடப்பட்டிருக்கிறாள்.

ஒருநாள், அவள் வங்கதேச சாலையில் உதவி கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது... அவளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் பெண் ஒருவர், `உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருகிறேன்' என்று கூறி காக்ஸ் பாஜார் நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அந்தச் சிறுமியை இரண்டு இளைஞர்களிடம் விற்றுள்ளார். சிறுமியைப் பணம் கொடுத்து வாங்கிய அந்த இரண்டு இளைஞர்களும் கத்தி முனையில் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி பேசுகையில், `பாலியல் வன்புணர்வுக்கு நான் ஒத்துழைக்க மறுத்தபோது  அவர்கள் என்னைச் சரமாரியாக அடித்தனர். கத்தியைக் கழுத்தில் வைத்து  பாலியல் வன்கொடுமை  செய்தனர். இப்படியான மோசமான நிலையில் முகாம் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த பாலியல் தொழில் தற்போது முகாமுக்கு அருகிலேயே பெண்களும், சிறுமிகளும்  பாலியல் தொழிலுக்கு விற்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறுகின்றனர். ஹோட்டல் வேலை, வீட்டு வேலை என்று சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்றுவிடுவதாக அவர்கள்  கவலை தெரிவிக்கின்றனர். 

ரோஹிங்கியா

பாதிக்கப்பட்ட  மற்றொரு பெண் இதுதொடர்பாகப் பேசுகையில், ``இங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் கடத்தல்காரர்கள் வசம்  சிக்கிக்கொண்டவள்தான். என் சகோதரனோடு பட்டாம்பூச்சி போன்று விளையாடிக்கொண்டிருந்தேன். வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்றவர்கள் என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொழிலையே செய்துவருகிறேன். இங்கு பிழைக்க வழியில்லை. இதைச் செய்ய எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், என் குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகப் படும்துயரங்களைக் காண முடியாமல் மீண்டும் இந்த அசிங்கத்தையே  செய்துகொண்டிருக்கிறேன். இங்குள்ள பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். யாருமே அவர்களாக விரும்பிச் செய்யவில்லை. இப்போது எல்லாம் எப்படி விளையாடினேன் என்பதுகூட மறந்துபோய்விட்டது'' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இந்த அவலத்தை ஆங்கில ஊடகம் ஒன்று களத்துக்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்துள்ளது. அந்த ஊடகம் நேரடியாகக் கடத்தல்காரர்களிடம் சென்று பெண்கள் மற்றும் சிறுமிகளை விலைக்குக் கேட்டு வாங்கியது போன்ற ஸ்டிங் ஆபரேஷனை (sting operation) நடத்தியது. இந்த ஆபரேஷனின்போது போலீஸாரையும்  அழைத்துச் சென்ற அந்த ஊடகம், அவ்வாறு நடந்துகொண்ட கடத்தல்காரர்களையும் கையுடன் பிடித்துக்கொடுத்துள்ளது. இது தொடர்பான sting vedio-வையும் அந்த  ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.  

அந்தப் பகுதியில் போலீஸாரின் கண்காணிப்புத் தீவிரமடைந்திருந்தாலும், அதையெல்லாம் மீறி வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பாஜார்,  பாலியல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. மேலும், இந்தியா, அரபு  நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து பெண்கள்  மற்றும் சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சியூட்டுகிறது அந்த ஊடகம்!


டிரெண்டிங் @ விகடன்