வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (26/03/2018)

கடைசி தொடர்பு:18:55 (26/03/2018)

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்.. தென்னிந்திய நிதியமைச்சர்களை ஒன்றிணைக்கும் கேரள அமைச்சர் தாமஸ் ஐசக்!

நிதியமைச்சர், finance minister

த்திய பா.ஜ.க அரசின் நிதி பங்கீடு நடவடிக்கைக்கு எதிராக கைகோப்பதற்கு முதல் விதையைத் தூவியிருக்கிறார் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக். `தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா எனத் தென் மாநிலங்களின் வரி வருவாயை, வட இந்தியாவுக்கு வாரிக்கொடுத்து வருகிறது பிரதமர் மோடியின் அரசு' எனக் குற்றம்சாட்டியுள்ளார் தாமஸ். இதுகுறித்து, தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மேலும், இந்த நிதி பங்கீடு தொடர்பாக கலந்தாலோசிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்குமாறு தென்மாநில நிதியமைச்சர்களுக்கு தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார். ``மத்திய அரசுக்கு, தென் மாநிலங்கள்தான் அதிக அளவில் வரி வருவாயைத் தருகின்றன. ஆனால், தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியைக் குறைத்து, வட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது மத்திய அரசு. தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வடமாநிலங்களிலிருந்து பெறப்படும் வருவாய் குறைவுதான்.", எனக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கேரள மார்க்ஸிஸ்ட் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக 15வது நிதி கமிஷனில் கடைபிடிக்கப்பட்டுள்ள சில வரைமுறைகளுக்கு எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. கர்நாடக முதல்வர் சித்தராமையா சமூக வலைதளங்களில் நேரடியாகவே இதை எதிர்த்து பதிவிட்டிருந்தார். ``தென் மாநிலங்களைப் பாதிக்கும் இந்த நிதி பரிந்துரையை நாம் நிச்சயம் எதிர்க்க வேண்டும்." எனப் பதிவிட்டிருந்த அவர், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, புதுச்சேரி முதல்வர் அலுவலக ட்விட்டர் அக்கவுன்ட்களை `டேக்' செய்திருந்தார். மேலும், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சசி தரூர் எம்.பியின் ட்விட்டர் அக்கவுன்ட்களையும் டேக் செய்திருந்தார். மத்திய அரசின் இந்த வருவாய் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தார். ``தென் மாநிலங்களிலிருந்து பெறப்படும் வரி, அதிகமாக வட இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில நிதி, மத்திய நிதி என்பதல்ல. இவையனைத்தும் மக்களிடமிருந்து பெறப்படும் நிதி. இந்த நிதி பொதுமக்களுடையது", என சந்திரபாபு நாயுடு அண்மையில் குரல் எழுப்பினார். இதையடுத்து தென் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வரின் எதிர்ப்பும் கவனம் பெற்றது. 

என்ன சொல்ல வருகிறது 15வது நிதி கமிஷன்?

சிங்மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய என்.கே. சிங் தலைமையில் 15வது நிதி கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மத்திய அரசு வசூலித்து வரும் வரிவருவாயை மாநிலங்களுக்கு இடையே பங்கிட்டு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக என்.கே.சிங் குழு பல ஆய்வுகளை நடத்தி, பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, `2011-ல் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே நிதி ஒதுக்கீடு செய்யலாம்' எனப் பரிந்துரைக்கப்பட்டது. 

கடந்த 14வது நிதி ஆணைய ஒதுக்கீட்டிலேயே தமிழகத்திற்கு 19% வரை மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு இடியாக அமைந்தது. காரணம், இந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவான மாநிலங்களுள் தமிழகமும், கேரளாவும் ஒன்று. மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டால் இந்த மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மற்ற தென் மாநிலங்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தது. கடந்த 30 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புஉணர்வு பிரசாரங்களே மக்கள் தொகை குறைவுக்குக் காரணம் என அறிய முடியும். 

இந்நிலையில்தான், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், அனைத்துத் தென் மாநில நிதி அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், `தென் மாநிலங்களின் வரி வருவாய், வடமாநிலங்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பாக, ஏப்ரல் 10- ம் தேதி ஆலோசனைக் கூட்டத்திற்கு கேரள அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், தென்மாநிலங்களின் நிதியமைச்சர்களைப் பங்கேற்க அழைக்கிறோம்', எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்திற்கு, கருத்தொற்றுமை அளவில் அனைத்துத் தென் மாநில நிதி அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறியிருக்கும் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், `ஆனால், எழுத்துபூர்வமான பதில் இன்னும் வரவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, ஜி.எஸ்.டி மற்றும் இ-வே பில் போன்ற விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தவர் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.


டிரெண்டிங் @ விகடன்