வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (26/03/2018)

கடைசி தொடர்பு:22:08 (26/03/2018)

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை மிஞ்சும் பார் கவுன்சில் தேர்தல்... கலவரமான ‘களநிலவரம்!’

பார் கவுன்சில் தேர்தல்

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் மொத்தம் 54,000 வழக்கறிஞர்கள் பதிவு செய்த உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பார் கவுன்சிலை நிர்வாகம் செய்ய 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 28 ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 192 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். 32 நாள்கள் நடைபெற்ற பிரசாரம் (26-3-2018) திங்கட்கிழமை மாலை 5 மணியுடன் முடிந்தது.  இப்போது களத்தில் உள்ள வேட்பாளர்களில், கே.வேலுசாமிதான் மூத்த உறுப்பினர். மதுரை ஹார்வி நகர், அரசரடி முதல் தெருவைச் சேர்ந்த இவர் 24.10.1969 என்ற தேதியில் பதிவு செய்தவர். கோவையைச் சேர்ந்த பி.நந்தகுமார் 31.1.1973 ல் பதிவு செய்த அடுத்த சீனியர் உறுப்பினர் ஆவார். ஜூனியர் வழக்கறிஞர் யார் என்று பார்த்தால், சென்னையைச் சேர்ந்த கே.பி.சக்திவேல் வருகிறார். இவர் 27.3.2015 ம் ஆண்டு பதிவு செய்துள்ளார். ஆனால், 28 வயதில் 7 வருட அனுபவத்தோடு சுனில் ராஜா என்ற வழக்கறிஞர் குறைந்த வயதுடையவராக இருக்கிறார். இப்படி, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் என்று மொத்தம் 192 வழக்கறிஞர்கள் இந்தத் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். 

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு பிப்ரவரி 1 ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்னதாக மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் பாஸ்கர் மதுரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், 'தமிழ்நாடு பார் கவுன்சில் சிறப்புக் குழுத் தலைவர், இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், 'பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் கொடுக்க சிலர் திட்டமிட்டுள்ளனர். மேலும், தேர்தலுக்காக 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் திட்டமிட்டும் உள்ளனர். எனவே, தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், வழக்கை விசாரித்தபோது, ``தமிழகம் - புதுவை பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதி ஃபார்முலாவைப் பின்பற்றி நடப்பதுபோலக் கருதத் தோன்றுகிறது'' என்று கருத்து தெரிவித்தனர். மேலும், பார் கவுன்சில் தேர்தலை முறையாக நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு விஷயங்களை பார் கவுன்சிலுக்குச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். பண நடமாட்டத்தைத் தடுக்க, 'வருமான வரித்துறையினர் பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 28 ம் தேதி பார் கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது.  

நீதிபதி கிருபாகரன்

இந்தச் சூழ்நிலையில், நீதிமன்றம் தெரிவித்துள்ள  கவலை இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. நீதிமன்றம் கவலை தெரிவித்து கட்டுப்பாடுகள் விதித்ததால், பட்டவர்த்தனமாக இல்லாமல் ஓட்டுகளைப் பெறுதவற்கான வேட்டையை ஓசைபடாமல் ஒருசாரார் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலு, ``பார் கவுன்சில் தேர்தல் கோடி கோடியாய் பணம் புழங்குகிற பெரும் வியாபாரமாக மாறியுள்ளது. ஓட்டுக்கு பத்தாயிரங்கள் கொடுப்பதில் தொடங்கி, தாய்லாந்து  இன்பச் சுற்றுலா வரை வழக்கறிஞர்களை வளைத்துப் போட வழிமுறைகள் கையாளப்படுகின்றன. வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைத் துடைப்பது வழக்கறிஞர்கள் கையில்தானே இருக்கிறது? தனிப்பட்ட வழக்கறிஞரை விலைக்கு வாங்குவதைத் தாண்டி, ஒரு வழக்கறிஞர் சங்கத்தை அப்படியே விலைபேசி முடிப்பதுவரையிலாகப் போய்விட்டார்களே... பெருமைமிக்க வழக்கறிஞர்கள் இதில் சிக்கி வணிகப் பொருளாக மாறுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்கவுன்சில் சட்டம் 1961 இன் படி, `வழக்கறிஞர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான நலத்திட்டங்களை வழக்கறிஞர் சங்கங்கள் செயல்படுத்த ஊக்குவிக்க வேண்டும். நீதித்துறை வளர்ச்சி குறித்து கருத்தரங்கங்கள், ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். ஏழைகளுக்கு சட்ட உதவி கிடைக்க இலவச சட்ட உதவி முகாம்கள் நடத்தப்படவேண்டும். சட்டக் கல்லூரிகளைப் பார்வையிட்டு அங்கே எதிர்கால வழக்கறிஞர்களுக்குக் கற்பிக்கப்படுபவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வறுமையில் இருக்கிற வழக்கறிஞர்களுக்கு உதவ நிதி ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும்' என்று பல்வேறு நோக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்தப் பணிகளைச் செய்வதற்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காகத்தான் இந்தத் தேர்தல் நடக்கிறது. இத்தகைய உயரிய நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள பார்கவுன்சில் நிர்வாகம், சமூகப் பொறுப்புடைய நல்லவர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். திருமங்கலம், ஆர்.கே.நகர் ஃபார்முலா-க்களோடு இருப்போரைத் தூக்கி எறிய வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்