"நீங்க கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிடமுடியாது!" புறக்கணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்

"எல்லா மனிதர்களின் தேவைக்கேற்ப இயற்கையானது சமமான வளங்களை வழங்குகிறது. ஆனால், அவை அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை" எனத் இந்த தேசத்தில் நடக்கும் முறைகேடுகளையும், புறக்கணிப்புகளையும் எண்ணி கவலைத் தெரிவித்தார் மகாத்மா காந்தி. தமிழகத்தில் தற்போது அதுபோன்றதொரு புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர், கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட முயலும் இரு மாற்றுத்திறனாளிகள். அவர்களின் உடல்ரீதியான குறைகளைச் சுட்டிக்காட்டி, அரசு அதிகாரிகள் அவர்களை அவமதித்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் தர்மபுரியில் கூட்டுறவுச்சங்கத் தேர்தல் வரும் 16-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச்  26-ம் தேதி தொடங்கியது.

சரவணன்    தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர் இந்நிலையில், தர்மபுரி பொது நூலகத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர், கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், இந்தத் தேர்தலில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள், மனுக்கள் பரிசீலனையின்போது நிராகரித்து விட்டனர். இதுகுறித்து கூட்டுறவுச்சங்க தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரனைச்  சந்தித்து சரவணன் முறையிட்டுள்ளார். அப்போது, சரவணனின் குறைபாட்டை ஆணையாளர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டி, அவரை அவமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்துப்பேசிய சரவணன், "புதிய உரிமைகள் சட்டம் 2016-ன் அடிப்படையில்தான் நான் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தேன். அதற்கான வேட்புமனுவையும் நான் தாக்கல் செய்தேன். ஆனால், என்னுடைய பார்வைக் குறைப்பாட்டைக் காரணம்காட்டி  மனுவை நிராகரித்துள்ளனர். தேர்தல் ஆணையர் ராஜேந்திரனைச் சந்தித்துப் பேசியபோது அவர், 'எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிட முடியும். பார்வை குறைபாடுள்ள உங்களால் போட்டியிட முடியாது. அப்படியே இருந்தாலும் எத்தனை பேர் போட்டியிடப்போறீங்க' என கேலி செய்தார். 12-ம் வகுப்புவரை பிரெய்லி முறையில் படித்துள்ளேன். அதற்கான சான்றுகளை நான் இணைத்துள்ளேன். எனவே, 'எழுதப்படிக்கத் தெரியாது' என்று சொல்வது சரியா? என கேள்வி எழுப்பினேன். என்னுடைய கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவர், 'அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நீங்கள் போகலாம்' என்றார். மாற்றுத்திறனாளிகளுக்காக சட்டங்கள் எத்தனை சலுகைகளை அளித்தாலும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்களுக்கான சலுகைகளைப் பாதியிலேயே அபகரித்து விடுகிறார்கள். எனவே எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார். சரவணனைப் போலவே சென்னையில் மோகன் என்ற மாற்றுத்திறனாளியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் நம்பிராஜன் பேசுகையில், "தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டப் பிரிவு நம்பி ராஜன்   மாற்றுத் திறனாளிகள் சங்கம் 34(1)-ன் படி, தேர்தலில் போட்டியிடுபவர்கள், ஆங்கிலம், தமிழ் அல்லது அந்தந்தப் பிராந்திய மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுவான விதி உள்ளது. இந்த விதியை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உட்படுத்தி, 'அவர்களால் எழுதமுடியாது; பார்க்க முடியாது' என்று குறிப்பிட்டு அவர்களின் வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர். ஏற்கனவே வகுக்கப்பட்ட சட்டத்திற்கு உள்நோக்கம் கற்பித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கிடைக்காமல் செய்யும் இதுபோன்ற அதிகாரிகளின் செயல், அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. தர்மபுரியில் சரவணன் என்ற மாற்றுத்திறனாளியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சென்னை தங்கசாலையில் கூட்டுறவுச் சங்க தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்த மோகன் என்பவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டு, அவர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பழைய விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, 'கண் இல்லாத உங்களால் தேர்தலில் எப்படிப் போட்டியிட முடியும்' என மாற்றுத்திறனாளிகளைக் கிண்டல் செய்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தும் அரசு  அதிகாரிகளின் இத்தகைய போக்கு, மாற்றுத் திறனாளிகள் சட்டத்திற்கு எதிரானது. இதனை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுபோன்ற புறக்கணிப்புகளுக்கு நியாயம் கிடைக்குவரை போராடுவோம்" என்றார்.

இதனிடையே அரசு அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையம் எச்சரித்துள்ளதையும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சரவணன், மோகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தும், தருமபுரி மாவட்ட பொது நூலகத் துறை பணியாளர் சங்கத்தின் இயக்குநர் பொறுப்புக்கான தேர்தலை நிறுத்தியும் ஆணை வெளியிட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டி, அரசு அதிகாரிகள் புண்படுத்தாமல் இருந்தால், அதுவே போதுமானது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!