''காவிரிப் போராட்டம்... அடுத்து என்ன?'' -ஆலோசனையில் தமிழக அரசு | Cauvery dispute: SC agrees to hear Centre's plea on April 9

வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (04/04/2018)

கடைசி தொடர்பு:20:26 (04/04/2018)

''காவிரிப் போராட்டம்... அடுத்து என்ன?'' -ஆலோசனையில் தமிழக அரசு

''காவிரிப் போராட்டம்... அடுத்து என்ன?'' -ஆலோசனையில் தமிழக அரசு

காவிரி விவகாரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்  தாக்கல் செய்துள்ள தமிழக அரசு மனுவும், 'ஸ்கீம்' (செயல் திட்டம்) என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல்செய்த மனுவும் வரும் 9-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தப் பிரச்னையில், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைசெய்துள்ளனர். 

காவிரி நடுவர் மன்றம், 5.2.2007 அன்று அதன் இறுதி ஆணையைப் பிறப்பித்தது. அதில், ''காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். அதைச் செயல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை  அமைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது. இந்த நதிநீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது. அ.தி.மு.க., 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, 19.2.2013 தேதியிட்ட மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காவிரி சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டுக்கு 177.75 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி ஆணையில் வேறு எந்த மாற்றத்தையும் உச்ச நீதிமன்றம் செய்யவில்லை. அதாவது, ஏற்கெனவே அறிவித்த நதிநீர்ப் பங்கீட்டில் 14.75 டி.எம்.சி அளவு நீரை மட்டும் குறைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்மீது, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகுறித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் 22.2.2018 அன்று  கோட்டையில் நடந்தது. அதில், ''அனைத்து அதிகாரங்களும்கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்ற ஆணையின்படி மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டுக்கு காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டி.எம்.சி அடி நீரைக் குறைத்தும், கர்நாடகத்துக்குக் கூடுதலாக வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின்

இந்நிலையில், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழக்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுத் தொடக்கிவைக்க, 24.2.2018 அன்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, ''காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழா மேடையிலேயே கேட்டுக்கொண்டார்.  25.2.2018 அன்று மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்தபோது, நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார், எடப்பாடி பழனிசாமி. இதுதவிர, தமிழக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பிரதமருக்கு அக்கோரிக்கையை வலியுறுத்த நேரம் கேட்டு கடிதமும் அனுப்பினார். அதற்கு, இதுவரை பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுமதி தரப்படவில்லை.

மேலும், மத்திய நீர்வள அமைச்சகம் 9.3.2018 அன்று டெல்லியில் நடத்தியக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொண்ட தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி நடுவர் மன்ற ஆணைகளைத் திறம்படச் செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரங்களையும்கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்'' என வலியுறுத்தினர்.

மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்து, 15.3.2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை, அன்றைய தினமே  பிரதமரின் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஆறு வார காலக் கெடு முடிந்தவுடன், 31.3.2018 அன்று மூன்று மாத காலம் அவகாசம் கேட்டும், ‘திட்டம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியமா அல்லது மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் அமைக்கலாமா என்பனகுறித்த விளக்கங்கள் கோரி, மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. தமிழக அரசும் 31.3.2018 அன்று மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்  தாக்கல்செய்தது. 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.உமாபதி, ''உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, 6 வார கெடு முடிந்ததும் மீண்டும் காலம் கடத்துவதற்காக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தலையும் அதுதொடர்பான சட்டம்  - ஒழுங்குப் பிரச்னையையும் காரணம் காட்டி, தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது மத்திய அரசு. எனவே, மத்திய அரசின் மனு ஏற்கத்தக்கது அல்ல'' என்று வாதிட்டார்.

தீபக் மிஸ்ரா

மத்திய அரசின் வாதத்தையும் தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ''இரு தரப்பிலும் தாக்கல்செய்த மனுக்களை இன்னும் ஆய்வுசெய்யவில்லை. தமிழக அரசு தாக்கல்செய்த மனு, வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே நாளில் மத்திய அரசின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இருதரப்பினரும்  விவாதங்களை அன்று முன்வைக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும்'' என்று கூறினார்.  

ஏப்ரல் 9- ம் தேதி விசாரணையின்போது, ''மத்திய அரசின்  மனுவை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உடனடியாக அமைக்க, தெளிவான உத்தரவை மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய வகையிலும் உறுதிபட வாதங்களை எடுத்துரைக்குமாறு வழக்குரைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அன்றைய விசாரணையில், உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பார்த்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து முதல்வரும் துணை முதல்வரும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் காவிரிப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசு காவிரி வழக்கின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து, அடுத்தடுத்து உரிய  நடவடிக்கை எடுக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்