பொது வேலைநிறுத்தம், அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை... பஸ்கள் ஓடுமா? | Will government buses be operated tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (04/04/2018)

கடைசி தொடர்பு:10:48 (05/04/2018)

பொது வேலைநிறுத்தம், அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை... பஸ்கள் ஓடுமா?

பொது வேலைநிறுத்தம், அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை... பஸ்கள்  ஓடுமா?

அரசுப் பேருந்து

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாளை நடக்கவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பத்து மையத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன. இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மத்திய, மாநில ஆளும் கட்சிகள்  தவிர்த்த கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த முதல் தேதியன்று  நடந்தது. அதில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

அந்த அழைப்பை ஏற்று, அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்.எம்.எஸ்., டிடிஎஸ்.எஃப்., பிடிஎஸ், எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டிடபிள்யூ ஆகிய மையத் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வது என முடிவுசெய்தன. சென்னையில் நடந்த கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து மாநில அரசை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தில் மாநில அரசை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசைக் கண்டித்தே  பொது வேலைநிறுத்தம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தொழிற்சங்கக் கூட்டுக் குழுக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு காவிரித் தண்ணீரைப் பெற்றுத்தராமல் டெல்டா பகுதியை பாலைவனமாக்கியதோடு, டெல்டா பகுதியில் எண்ணெய்வள ஆய்வுப் பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்தும், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக மாற்ற முயற்சிசெய்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம்செய்வதன் மூலம் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஆலையைத் தட்டிக்கேட்க மறுக்கும் மத்திய அரசையும் துணைபோகும் மாநில அரசையும் கண்டிப்பதுடன் இதற்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் ஆதரிப்பது...” என ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் 22,509 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.45 பேர் பணியாற்றிவருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், அரசுப் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இதனால் எட்டு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் தரப்பிலிருந்து, நாளைக்கு வேலைக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

சென்னையைத் தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் - மா.போ.க. சார்பில் தினமும் 3,688 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற இடங்களைவிட தலைநகரில் வேலைநிறுத்தம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யதார்த்தமான நிலை. இதைத் தடுக்கும் முயற்சிகளில் மா.போ.க. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

ஆறுமுக நயினார்மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், நேற்று வெளியிட்ட உத்தரவில், “ தொழிலாளர்கள் அனைவரும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குபெறாமல் வழக்கம்போல தவறாமல் பணிக்கு வரவேண்டும். ஏப்.5 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். வேலைநிறுத்தம் காரணமாக பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன், ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மூலமாகவும் பேருந்துகளை இயக்கிவிடலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

 

 

பொது வேலைநிறுத்தத்தில் அரசுப் பேருந்து ஊழியர்கள் பங்கேற்போம் என்று தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் உறுதியாகக் கூறுகின்றனர். 

“ தமிழ்நாட்டின் உணர்வை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்துவதில் எங்களின் எதிர்ப்பையும் பதிவுசெய்கிறோம். இதை உறுதியாகவும் துணிவாகவும் செய்வோம். இதையும் மீறி அரசுத் தரப்பில் பேருந்துகளை இயக்கினால் அது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதனால் இரண்டுமூன்று நாட்களுக்கு வார ஓய்வு, விடுமுறை என பாதிப்பு, குழப்பம் ஏற்படும். வெளியில் தெரியாது” என்றார் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார். 


டிரெண்டிங் @ விகடன்