Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திரையுலகின் நெய்வேலி போராட்டத்துக்கு தோள்கொடுத்த ஜெயலலிதா.. வியூகம் பலித்ததா?! #Flashback

ரஜினி

'காவிரி நீரை தரக் கூடாது' என கர்நாடகாவில் போராட்டம் தீவிரமாகி கொண்டிருந்தது. நடிகர் ராஜ்குமார் தலைமையில் கன்னட நடிகர்கள் கர்நாடகாவில் போராட்டம் நடத்தியபோது ரஜினியிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வெளியாகவில்லை. மாறாக தமிழகத்தில் நடிகர்கள் நடத்த திட்டமிட்டிருந்த நெய்வேலி போராட்டத்தை மறுபரிசீலைனை செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார் ரஜினி. அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ''கன்னட இன உணர்வு காரணமாகவே நெய்வேலி போராட்டத்தை ரஜினி எதிர்க்கிறார்'' என பாரதிராஜா உள்ளிட்டவர்கள் விமர்சனம் வைத்தார்கள். 

நெய்வேலி போராட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்காக நடிகர் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வேறு வழியில்லாமல் ரஜினி கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திலும் 'நெய்வேலி போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்தார் ரஜினி. ''கர்நாடகாவுக்கு மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என போராடத் தேவையில்லை. நெய்வேலியில் போராட்டம் வேண்டாம்.. சென்னையில் நடத்தலாம்.'' என ரஜினி சொன்னபோது, தமிழ் உணர்வு நடிகர்கள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இடையிலேயே ரஜினி கிளம்பிப் போனார். ''கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்'' எனச் சொல்லிவிட்டுச் சென்றார். வெளியே வந்த ரஜினி மீடியாவிடம், நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பதாக சொன்னார். ஆனால், ரஜினி சொன்னபடி நடக்கவில்லை.

நடிகர் சங்கச் செயலாளராக இருந்த சரத்குமாரும் துணைத் தலைவராக இருந்த நெப்போலியனும் அப்போது தி.மு.க-வில் இருந்தார்கள். நெய்வேலி போராட்டத்தை அறிவித்த பாரதிராஜாவுக்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க-வின் ஆசி இருந்தது. இப்படியான சூழலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை சரத்குமாரும், நெப்போலியனும் சந்தித்தார்கள். போராட்டம் நடத்தும் அமைப்புக்கு 'தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என பாரதிராஜாவால் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில், ''கலையுலகின் காவிரிப் போராட்டம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது'' என சரத்குமார் அறிவித்தார்.

பாரதிராஜாநெய்வேலி போராட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு தெரிவித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும் ஆதரவு அளித்தார். நெய்வேலி போராட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை பாரதிராஜா தலைமையில் திரைக் கலைஞர்கள் குழு கோட்டையில் சந்தித்தது.  இயக்குநர் பாலசந்தர், கமல், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சத்யராஜ், பிரபு, குஷ்பூ, மனோரமா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.''நெய்வேலி போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார்'' என்கிற தகவலை பாரதிராஜாதான் பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ''இமயமலைக்கு ரஜினி சென்றிருக்கும் நிலையில், அவர் போராட்டத்தில் கலந்துகொள்வாரா?'' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''அதை ரஜினிடம்தான் கேட்க வேண்டும். ஆனாலும், அவர் கலந்துகொள்வார் என நம்புகிறோம். முதல்வர் என்ற முறையில்தான் ஜெயலலிதாவைச் சந்தித்தோம். மற்ற கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் எண்ணம் இல்லை'' எனவும் சொன்னார் பாரதிராஜா. நெய்வேலி போராட்டத்தில் அரசியல் கலக்க ஆரம்பித்திருந்தது. 

காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் மத்திய அரசிடம் இப்போது மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். ஆனால், காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா காட்டிய வீரியம் அதிகம். நெய்வேலி போராட்டம் நடைபெற்ற 2002-ம் ஆண்டிலும் காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவின் ஆக்ரோஷம் இருந்தது. காவிரிக்காக போராட்டம் நடத்தியவர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுத்தார். கர்நாடகாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். பாரதிராஜா தலைமையிலான குழு முதல்வரை சந்திப்பதற்கு சில நாள்கள் முன்புதான், ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்'' என காட்டமாக அறிக்கை விட்டார் முதல்வர் ஜெயலலிதா. 

ரஜினி

முதல்வர் ஜெயலலிதா - பாரதிராஜா குழு சந்திப்பு நடந்த அன்றுதான், காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த, 'வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசைக் கண்டித்து தமிழகத்தில் பந்த் நடத்தப்படும்' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதை ஜெயலலிதா அறிவித்தார். ''அம்மா வழியில் நடக்கும் ஆட்சி'' என இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடிக்கு அந்தத் துணிச்சல் இல்லை. காவிரிக்காக மற்றவர்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கி வருகிறார்.  

கர்நாடகத்தை எதிர்த்தும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் 2002 அக்டோபர் 9-ம் தேதி தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் பந்த்துக்கு ஆதரவு அளித்தது தி.மு.க. 

ஜெயலலிதாவின் ஆதரவால், நெய்வேலி போராட்டத்துக்கு அரசு இயந்திரங்கள் அனைத்தும் உதவ ஆரம்பித்தன. போராட்டம் தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்காக பாரதிராஜா தலைமையில் ஒரு குழு நெய்வேலி சென்றது. அந்தக் குழுவுக்கு கடலூர் கலெக்டர், எஸ்.பி. மாவட்ட நிர்வாகம் என அனைத்துத் தரப்பும் ஒத்துழைப்பு வழங்கியது. 

நெய்வேலி போராட்டக்களம் சூடுபிடித்த நிலையில், ''என் வழி தனி வழி'' என ஜகா வாங்கினார் ரஜினி.  

தொடரின் பிற பாகங்களைப் பார்க்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement