சூரப்பா நியமனம்... புதைந்துகிடக்கும் மர்மங்கள்..! கவர்னர் விளக்கம் சொல்வாரா..? | TN Leaders Condemns to Anna University VC Appointment

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (10/04/2018)

கடைசி தொடர்பு:12:24 (10/04/2018)

சூரப்பா நியமனம்... புதைந்துகிடக்கும் மர்மங்கள்..! கவர்னர் விளக்கம் சொல்வாரா..?

சூரப்பா நியமனம்... புதைந்துகிடக்கும் மர்மங்கள்..!  கவர்னர் விளக்கம் சொல்வாரா..?

 

பன்வாரிலால் புரோகித் சூரப்பா

காவிரிப் பிரச்னை குறித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்க... மறுபுறம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமனம் குறித்தும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த நிலையில், சூரப்பா நியமனத்தில் புதைந்துகிடக்கும் மர்மங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் `வேந்தர்' என்ற முறையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்யும் அதிரடிகள் தமிழக அரசியலைக் கலக்கிக்கொண்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூர்ய நாராயண சாஸ்திரி நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமனத்தில் அடுத்த புயல் உருவாகிவிட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமனத்தில் தமிழகத்தின் தன்மானம் காற்றில் பறக்கிறது என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டி உள்ளன. அதற்கு கவர்னர் மாளிகை விளக்கம் சொன்ன நிலையில், தமிழக பி.ஜே.பி-யும் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரும் கூடுதல் விளக்கம் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், சூரப்பா  புயல் அடங்குவதாக இல்லை. சூரப்பா நியமனம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் சொன்னாலும் அவருடைய நியமனத்தில் உள்ள உண்மைகளைக் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மறைக்கிறார் என்று கண்டனங்கள் குவிகின்றன.

அதாவது, சூரப்பா நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்கு ஆதரவாகக் கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தையே கேள்வியாகக் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். அதாவது, ``அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேராசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் மூன்றுகட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 30 பேரும், அடுத்தகட்டமாக 9 பேரும், மூன்றாம் கட்டமாக 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்று கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. அப்படியானால், 170 பேரின் எண்ணிக்கை, எந்தத் தரவரிசை அடிப்படையில் 3 ஆகக் குறைக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் தேர்வு குறித்த முறை பற்றி மெளனம் காப்பது ஏன்'' என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.

ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கவர்னர் என்பவர் மாநில அரசு நிர்வாகத்தின் தலைவர். அவரது செயல்பாடுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில் பல இடங்களில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சிலரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களைப் பற்றிய பிம்பங்களைக் கட்டமைக்கும் பணியில் கவர்னர் மாளிகை ஈடுபடுகிறது. தமிழகத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கவேண்டிய கவர்னர் மாளிகை, சிலரின் மக்கள்தொடர்பு மையமாக மாற்றப்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது கவர்னர் மாளிகை மீதான மரியாதையைக் குறைத்துவிடும். இதைச் சுட்டிக்காட்டினால், அரசியல் செய்வதாகவும், சேற்றை வாரி இறைப்பதாகவும் கூறுவது ஆளுநர் மாளிகை செய்யக்கூடியச் செயலல்ல. ஆளுநர் மாளிகை, ஆட்சி செய்யலாம்... அரசியல் செய்யக்கூடாது'' என்று எச்சரித்துள்ளார்.

எஸ் எஸ் பாலாஜி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, ``துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்குப் பங்கு இல்லை என்று சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை. துணைவேந்தர் தேடும் குழுவுக்கு மாநில அரசு சார்பில் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இப்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தரோடு சேர்ந்துதான் மாநில உயர்கல்வித் துறை அமைச்சகம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இந்நிலையில், `மாநில அரசுக்கு இந்த நியமனத்தில் பங்கு இல்லை; பொறுப்பு இல்லை' என்று தட்டிக்கழிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத் தேர்வுப் பட்டியலில் கடைசியாக 3 பேர் இருந்துள்ளனர். அந்தத் தேர்வு, தகுதியின் அடிப்படையில் நடந்ததா அல்லது வேண்டப்பட்டவரைக் கொண்டு வரும் வகையில் நடந்ததா என்று ஆராய வேண்டி இருக்கிறது. மிகவும் ரகசியமாகத் தேர்வுசெய்து அறிவிக்க வேண்டிய துணைவேந்தர் தேர்வு குறித்த விவரம் முன்கூட்டியே வெளியானது எப்படி? இதில் புதைந்துகிடக்கும் உண்மைகளைக் கவர்னர் வெளியே சொல்லாதது ஏன்?

`வேறு மாநிலத்தவர் தமிழகத்திலும், வேறு மாநிலத்தில் தமிழர்களும் துணைவேந்தர்களாக இருந்தது இல்லையா? தமிழர்களின் மானத்தைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியும். தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்' என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அப்படியானால், சூரப்பாவைக் கொண்டுவந்தது அவர்கள்தான் என்று எடுத்துக்கொள்ளலாமா? தமிழர்கள் மோசம் என்கிற அர்த்தத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசி இருக்கிறார். வட மாநிலங்களில் பி.ஜே.பி-யினர் மீது பல்வேறு சிக்கலான விஷயங்களில் சிக்கி அசிங்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட வரலாறுகள் எல்லாம் உள்ளதே? அதைவைத்து பி.ஜே.பி ஆட்களே அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வரலாமா? எனவே, தமிழர்களை அவமதிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பி.ஜே.பி-யினர் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

வீரமணி   

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு வெளிமாநிலத்தவரை - கர்நாடகத்தவரை துணைவேந்தராக நியமித்துவிட்டு, மலைபோல் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், கவர்னர் மாளிகை எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றுள்ளது என்று ஒரு டெக்னிக்கலான விளக்கம் தருவதை அரசியல் சட்டரீதியாகவோ, முந்தைய நடைமுறை மரபுப்படியோ நியாயப்பபடுத்த முடியுமா? துணைவேந்தர்களை நேரிடையாக நேர்காணல் நடத்தி, நியமன ஆணை வழங்கும் அரசியல் கூத்து, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியவர்கள் முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் எங்காவது ஒருமுறையாவது நடந்ததாகக் காட்ட முடியுமா?

மூச்சுக்கு முந்நூறு தடவை, `அம்மா ஆட்சி' என்று கூறுகின்றனரே, அந்த ஜெயலலிதா உயிருடன் இருந்து ஆட்சி செய்தபோது, கவர்னர்கள் இப்படி நடந்துகொண்டதாகக் காட்ட முடியுமா? கவர்னர் நியமனம் செய்து அதற்கு விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டதுண்டா? கவர்னர், வேந்தர் என்பதெல்லாம் பதவி வழி (ex-officio) தகுதியினால் மட்டுமே கிடைக்கும் பொறுப்பு. அது, தனிப் பதவி அல்ல. இந்த நேர்காணல் என்ற கோணல், நியமனம் எல்லாம் ஜெயலலிதா மறைந்த பின்புதானே நடக்கிறது. அதை மறுக்க முடியுமா? கவர்னர் உரை என்று கூறி, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துகிறாரே, அதை அவரே எழுதித் தயாரித்துத்தான் படிக்கிறாரா? நடைமுறையில் அந்த உரை, அமைச்சரவையால் தயாரிக்கப்படும் ஒன்று என்பது யாருக்குத்தான் தெரியாது? இதுதான் அம்மா ஆட்சியா? ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லுமா கவர்னர் மாளிகையும் அ.தி.மு.க அரசும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்