Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 746% அதிகரிப்பு!

பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வடமாநிலங்களில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கேரளம், தமிழ்நாடு எனத் தென்மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அளித்த தீர்ப்பே, இந்த விவகாரத்துக்கு முதல் புள்ளியாக அமைந்தது. அதிலிருந்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு குறித்து பல மட்டங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. கருத்துகள் பலவாக இருந்தாலும், ஆவணங்களில் பதிந்துவிட்ட குற்றங்களை யாரும் மறைக்கமுடியாது அல்லவா?

அரசாங்கத்தின் அங்கமான தேசியக் குற்ற ஆவணப் பதிவகத்தின் புள்ளிவிவரப்படியே இந்தப் பிரச்னை குறித்த அலசலும் ஆய்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட பட்டியல்சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள், கடந்த 2016 வரையிலான பத்தாண்டுகளில் 746 சதவிகிதம் அதிகரித்துள்ளன; இதே காலகட்டத்தில், பழங்குடியினருக்கு எதிரான குற்றம் 12 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இண்டியா ஸ்பெண்ட் நிறுவனத்தின் பகுப்பாய்வு! பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2006-ல் ஒரு இலட்சம் பேருக்கு 2.4 எனும் அளவில் இருந்தது, 2016-ல் 24.3 ஆக அதாவது எட்டு மடங்கு அதிகரித்தது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்

பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்குவதும் அதிகரிக்க வேண்டும் அல்லவா? அப்படிச் சொல்லும்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை. பட்டியல் சாதியினர் மீதான வழக்குகளில் விசாரித்துமுடிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவற்றின் அளவு 99 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பழங்குடியினர் வழக்குகளில் நிலுவையின் அளவு 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

2006 ம் ஆண்டில் 8,380 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையானது, 2016-ல் 16,654 ஆக அதிகரித்தது. நாடளவில் பீகார் மாநிலத்தில்தான் அதிகமாக 4,311 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பழங்குடியினர் வழக்குகளின் நிலுவையானது, 2006-ல் 1,679 ஆக இருந்தது; 2016-ல் 2,602 ஆக அதிகரித்தது. இதில் ஆந்திர மாநிலத்தில் அதிக நிலுவையாக - 405 வழக்குகள் !

நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு ஆனால் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் பட்டியல்சாதியினர் வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 85, 264 ஆக இருந்தது பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2016-ல் 1,29,831 ஆக அதிகரித்தது. 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி 2016 ம் ஆண்டில் மட்டும் பட்டியல் சாதியினருக்கு எதிரான 40, 801 குற்றங்கள் பதிவாகின. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் குறைவான வழக்குகளே விசாரித்து முடிக்கப்பட்டன. இதேவேளை, நீதிமன்ற விசாரணை முடிந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2006-ல் 20,495 ஆக இருந்தது, 14,615ஆகக் குறைந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

பழங்குடியினர் வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டவற்றின் எண்ணிக்கை, பாதியளவு அதிகரித்தது. அதாவது, 2006-ல் 2,895 வழக்குகள்; 2016-ல் 4,317 வழக்குகள். மத்தியப்பிரதேசத்தில்தான் பழங்குடியினர் வழக்குகளில் விசாரணை நிலுவை அதிக அளவில் பதிவாகியுள்ளது. 

விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகளைப் பொறுத்தவரை, பட்டியல் சாதியினர் வழக்குகளில் 2016-ல் தண்டனை அளிக்கப்பட்டவை 26 சதவிகிதம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இது 28 சதவிகிதமாக இருந்தது. 

வடமாநிலங்களில்

குற்றம்சாட்டப்படும் நபர்களில் விசாரணையின் முடிவில் அதிக அளவில் விடுவிக்கப்படுவதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2006 ம் ஆண்டில் 72 சதவிகிதம் அளவு குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலைமையானது, 2016 ம் ஆண்டிலும் பெரிய மாற்றம் இல்லாமல் 74 சதவிகிதமாக ஏறுமுகமாவே இருந்தது. 

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடத்திலும்(43.4%), கோவா (43.2%) இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும்(42%) வந்தநிலையில், தண்டனை அளவோ முறையே 31%, 8%, 45% ஆக இருந்தது. 

தண்டனை அளவானது, சிக்கிம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, குஜராத், தெலுங்கானா, கோவா, தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. 

நாட்டின் தலைநகர் டெல்லியில்தான், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படுவது பத்தாண்டுகளில் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பழங்குடியினரின் வழக்குகளில் தண்டனையானது பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 2016-ல் ஏழு சதவிகிதம் குறைந்து, 21% ஆகப் பதிவானது. அதிகம் படித்தவர்களைக் கொண்ட கேரள மாநிலத்தில்தான் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்,(37.5%) அதிகம். அந்தமான் நிகோபரில் 21 சதவிகிதம், ஆந்திரப்பிரதேசத்தில் 15.4 சதவிகிதம். இவ்வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்ட விவரம் முறையே 8.2%, 0% (இல்லை), 1.1% ஆகும். 

அந்தமான் நிகோபார் தீவுகளில் மட்டுமல்ல, 2016-ல் குஜராத், கர்நாடகம், திரிபுரா, உத்தராஞ்சல், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகியவற்றிலும் பழங்குடியினர் வழக்குகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில், வழக்குப் பதிவது, விசாரணை நடத்துவது, தண்டனை அளிப்பது ஆகியவை மோசமாக இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. புகார்களைத் தாமதமாகப் பதிவுசெய்வது, நிகழ்விடத்தில் போய் விசாரணை நடத்துவது, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பில் அக்கறையின்றி இருப்பது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப்பதிய தயக்கம் காட்டுவது ஆகியவையே, குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்புகளாக அமைந்துவிடுகின்றன என்கின்றன அரசுசாரா அமைப்புகளின் ஆய்வு முடிவுகள். 

இவ்வளவு விவரங்களையும் விவகாரங்களையும் நிராகரித்துவிட்டு, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை மாற்றியமைப்பது அல்லது திருத்தம்செய்வது, உச்ச நீதிமன்றமாகவே இருந்தாலும் சரியாக இருக்காது என்பதே சமநீதியை விரும்புவோரின் குரலாக இருக்கிறது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement