"ரஜினியின் கருத்தை குருமூர்த்தியின் கருத்தாகவே பார்க்கிறேன்!" அமீர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் நாள்தோறும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது'' என்று பல்வேறு அமைப்பினர், நேற்று முன் தினம் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தையும் முற்றுகையிட்டனர். அந்தப் போராட்டத்தில் காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கப் போலீஸார் தடியடி நடத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் வெளியாயின. இந்த நிலையில், போலீஸாரை போராட்டக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோக் காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார். ரஜினியுடைய பதிவுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது. 

பாரதிராஜா

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்வீட்டில், `வன்முறையின்  உச்சக்கட்டமே, சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க  இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார்.  அவருடைய  இந்தப் பதிவுதான் தமிழகத்தில் தற்போது அரசியல் அனல் வீசக் காரணமாகியுள்ளது. 

காவலர் தாக்கப்படும் வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில் சீமான் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சீமான் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு குறித்து இயக்குநர் அமீரின் கருத்துகளைக் கேட்டோம்....

``நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' 

``முதலில் அது ரஜினிகாந்தின் கருத்துதானா அல்லது அவரை இயக்குகிற குருமூர்த்தியின் கருத்தா என்று பார்க்க வேண்டியுள்ளது. ரஜினியின் கருத்து இவ்வளவு ஆழமாக இருந்ததில்லை. குறிப்பாக,  அவருடைய ட்விட்டரைத் தொடர்ச்சியாகப் படித்து வருபவர்கள் நிச்சயமாக அறிவார்கள். கடுமையான சட்டம் தேவை என்றெல்லாம் பேசியுள்ளார். சட்டத்தைப்பற்றி எல்லாம் பேசியிருப்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. அடக்குமுறைகளை ஏவி விடுபவர்களே, இப்படியான சொற்களைக் கையாள்வார்கள். ரஜினி எப்போதுமே மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவர். அவர், ஓர் ஆன்மிகவாதி. அதனால், இது அவருடைய குரல் இல்லை என்பதுதான் உண்மை. யாருடைய குரலையோ இங்கு பதிவு செய்துள்ளார். மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர் போட்ட அந்தப் பதிவை ஊடகம் தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நேற்றைய போராட்டத்தின்போது அவர் பதிவிட்டிருக்கலாமே? அதை ஏன் அவர் செய்யவில்லை? அவ்வாறு பதிவிட்டிருந்தால், தேசிய ஊடகம்வரை இந்த விவகாரம் பேசப்பட்டிருக்குமே? இதைத்தான் நாங்கள்  கேட்கிறோம்.நேற்று நடந்த அசம்பாவிதங்கள், ஐ.பி.எல். எதிர்ப்புக்கானது என்பதால்தானே அந்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து இதுவரை தேசிய ஊடகம்  விவாதிக்கவில்லை. ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எங்களது போராட்டம் சென்றபிறகுதான் ஊடக விவாதத்தோடு வெற்றி அடைந்துள்ளோம். அந்த வெற்றியைத்  திசை  திருப்பும் நோக்கில்தான் தற்போதைய ட்விட்டர்  பதிவு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது கலவரம் நிகழ்த்தப்பட்டுப் போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தப்பட்டதைப் போன்றுதான் எங்களுடையப் போராட்டத்திலும் பழி சுமத்தப்படுகிறது. தமிழர்களின் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியை, ரஜினிகாந்த் திசை திருப்புகிறாரே என்று வருத்தமாக உள்ளது.''

அமீர்

``ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பதிவின்போது ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்தக் காட்சியைப் பார்த்தீர்களா?" 

``சிம்பிளான விளக்கம். சும்மா நின்றுகொண்டிருக்கும் போலீஸாரை அடிக்க முடியுமா? அடித்தால்  என்ன நடக்கும் என்பது தெரியும். அங்கு ஒருவினை நடந்துள்ளது. அதற்கு எதிர்வினைதான் அது. 

எங்கே போராட்டம் வெற்றி பெற்றுவிடுமோ என்று எண்ணி சும்மா நின்றுகொண்டிருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினார்கள். அந்தத் தாக்குதலில்தான் இயக்குநர்கள் வெற்றிமாறன், மு.களஞ்சியம் உள்ளிட்டோரும் மாணவர்கள் பலரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இன்றைய பத்திரிகைகளே அதற்குச் சாட்சி. போலீஸாரால் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த இளைஞர்களை தூக்கிச் செல்லும் போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்படியான வேதனையில்தான், நாங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதை நான் வரவேற்கவில்லை. அது தவறுதான். இருந்தும் போராட்டத்தைச் சமரசம் செய்து அமைதியான முறையில் கைதானோம். நடக்காத வன்முறையை ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டு நடந்ததாகக் கூறுகிறார் என்றால், அது ஏற்புடையது அல்ல... அதை அவரைப் போன்றவர்கள் செய்யக்கூடாது"

``இந்த வீடியோ குறித்து ரஜினி பேசியது மூலம் பெரும் விவாதமாக இவ்விஷயம் மாறியுள்ளது. இது போராட்டத்துக்கு எதிரானது என்கிறீர்களா?"

``யாருமே தொடாத விஷயங்களை ரஜினி தொட்டால் அது தேசியச் செய்தியாகிறது... பலம் பெறுகிறது என்பதால்தானே மக்கள் பிரச்னைகளை ரஜினி பேச வேண்டும் எனக் கேட்கிறோம். அதை அவர் செய்கிறாரா? ஒரு விஷயத்தில் ரஜினியின் பார்வை திரும்பினால் அது ஊடகத்தின் பார்வையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளின் பார்வையாக இருக்கிற பட்சத்தில் மக்கள் பிரச்னையைத் தொட வேண்டும். அதை ஏன் அவர் செய்யவில்லை? மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் பேச வேண்டிய சப்ஜெக்ட்டை பேச மறுத்துவிட்டு, பேசக்கூடாத விஷயத்தை வலிய வந்து பேசுவதன் நோக்கம் என்ன?"

காவிரிப் போராட்டம்

``ரஜினியின் பதிவு  உள்நோக்கம் நிறைந்ததாக கருதுகிறீர்களா?"

``அவருடைய அந்தப் பதிவு உள்நோக்கம் நிறைந்த பதிவு என்று முதல் கேள்வியிலேயே கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்த முடியாத பி.ஜே.பி-யின் பேச்சாளராக தன்னைக் வெளிகாட்டிக் கொள்கிறார். ஓர் இடத்தில் தனக்குப் பின்னால் பி.ஜே.பி இல்லை என்று சொல்கிறார். பின்னர் அந்தக் கட்சியின் குரலாகப் பேசுகிறார். அதுதான் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் 'ஆமாம் நான் பி.ஜே.பி-தான். அந்தக் கட்சியின் சித்தாந்தம் பிடித்துள்ளது அதில் இருக்கிறேன்' என்று கூறிவிட்டுப் போகலாம்.நேரடியாக இல்லாமல் அவ்வப்போது மறைமுகமாகப் பேசுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

ஒரு போராட்டம் நடந்துள்ளது அந்தப் போராட்டம் எங்கே தொடங்கியது? என்ன நடந்தது என ஆராய்ந்து கருத்துச் சொல்வதுதான் அரசியல் தலைவருக்கு அழகு. நான் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். அந்தப்  போராட்டம் குறித்து முழுமையாகச் சொல்ல முடியும். மாறாக வெறும் பார்வையாளனாக  இருந்துகொண்டு  ஒரு வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு எவ்வாறு பேச முடியும்? அது ஏற்புடையது அல்ல!" என்றார். 

"நீங்கள் ரஜினிக்கு வைக்கும் வேண்டுகோள் என்ன?"

``மக்களின் குரலாக இருங்கள். அதிகாரத்துக்கு ஆதரவாக எப்போதும் பேசாதீர்கள். அதிகாரம் என்பது எவ்வளவு ஆழமானது என்பது பற்றியும்  காவல்துறை பற்றியும் உங்களுக்குத் தெரியவில்லை.போலீஸ் வேடங்களில்  நடித்த விஜயகாந்த், 'தெரியாமல் காவலர் வேடத்தில்  நடித்துவிட்டேன்' என்று கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது!" 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!