Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்..!" அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

அம்பேத்கர்

இந்தியாவின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தோர் ஏராளமானோர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்து நாட்டின் சட்டத்தை வகுத்து விடுதலை இந்தியாவின் கட்டமைப்புக்குப் பாடுபட்டார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்  வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். இத்தகைய காரணங்கள்தான் காலம்கடந்தும் அவர் மாபெரும் தலைவராக மக்களின் மனதில் நிற்க வைக்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம். 

அம்பேத்கர் வெறும் சட்டத்தை வரையறுத்தவர், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடியவர் எனக் குறிப்பிட்ட சட்டகத்துக்குள்ளே அவரை அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி அம்பேத்கர் சமூகம் சார்ந்த செயல்கள், விழிப்பு உணர்வு எழுத்துகள், எழுச்சிமிக்க பிரசாரங்கள் என ஓய்வறியாமல் தன்னையே ஒரு பிரசார முகமாக மாற்றிக்கொண்டு சுற்றிச் சுழன்றார். இதன் மூலம் எளிய மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்பதே அவரின் இயற்பெயராகும்.  1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ராம்ஜி மலோஜி சக்பால் - பீம்பாய் ராம்ஜி சக்பால் தம்பதியினருக்கு  மகனாக 'மாவ்' எனும் இடத்தில் பிறந்தார். தற்போது இது மத்தியப் பிரதேசத்தில் அம்பாவாதே என அழைக்கப்படுகிறது. சிறு வயது பாலகனாகப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோதே அங்கு நிலவிவரும் சாதியக் கொடுமைகளைக் கண்டு அம்பேத்கரின் பிஞ்சு மனம் வெம்புகிறது. அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களோடு அமர இயலாது. அவர்கள் தங்களுக்காக ஒரு கோணிப் பை கொண்டுவந்து அதில் தான் அமர்ந்து பாடம் கற்க வேண்டும். தண்ணீர் தாகமெடுத்தால் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் குவளையில்தான் நீர் அருந்த வேண்டும்.... இப்படிப் பல்வேறு இன்னல்களைத் தாங்கிக் கல்வி கற்றார். எத்தகையத் துயர் வந்தபோதிலும் கல்வி கற்பதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை. 

அம்பேத்கர்

'கல்விதான் ஒருவனது நிலையை மேன்மையாக்கும்' என ஆத்மார்த்தமாக நம்பினார். இத்தகைய நம்பிக்கையினாலேயே பின்னாளில் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி முழுவதும் கற்றறியவே செலவிட முடிந்தது. பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் பரோடா மன்னர் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்ற பிறகு குடும்பத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு வேலையில் சேர்ந்தார். ஆனால், அங்கு நிலவிய சாதிய வேற்றுமையைக் கண்டு மனம் வெறுத்து வேலையை உதறினார். பின்னர் தன் நிலையைப் பரோடா மன்னரிடம் எடுத்துரைத்தார். அவர் அம்பேத்கரின் அறிவினைக் கருத்தில்கொண்டு  அம்பேத்கர், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்க உதவிபுரிந்தார். அங்கு சென்ற அம்பேத்கர், பொருளாதாரம், சமூகவியல், அரசியல், தத்துவம் எனப் பல்வேறு தரப்பட்ட பிரிவுகளில் படித்து நிபுணத்துவம் பெற்றார். அக்காலத்தில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை மனதில் கொண்டு எழுதிய கட்டுரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னர் இந்தியா திரும்பிய அம்பேத்கர் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். புனே உடன்படிக்கை, இந்திய அரசியலமைப்பு வரையறுக் குழுவின் தலைவர், ரிசர்வ் வங்கி உருவாக்குவதற்கு காரணமான ஆய்வை மேற்கொண்டவர்.  நாட்டின் மையபெரும் திட்டங்களின் அடித்தளமாக இருந்துள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காகப் போராடி அவர்களின் முன்னோடியாக உள்ள அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இயற்கை எய்தினார்.

அம்பேத்கர் வகுத்த சட்டதிட்டங்களைப் பின்பற்றி வருகிறோம். ஆனால், அவர் எதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாரோ அது இன்னும் நிறைவேறாமலே உள்ளது. தற்போதும்கூட நமது நாட்டில் தாழ்த்தப்பட்டோரின் மீது நடத்தப்படும் வன்முறை குறையாமல் உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத்தான் இவ்வுலகைக் கடவுள் படைத்தார். ஆனால், இங்கு சாதி அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்ந்து அவரின் கனவுகள் நிறைவேற பாடுபடுவோம்!

இளைஞர்களுக்காக அம்பேத்கர் உதிர்த்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது... ``ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement