Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 1 #Neutrino

1930 ம் ஆண்டு. சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜூரிச் நகரத்தைவிட்டு சற்று தூரத்தில் அமைந்திருந்தது அந்த ஆய்வுக் கூடம். வெளியில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். ஆனால், ஆய்வுக் கூடத்தின் உள்ளே சற்று கதகதப்பாகத் தான் இருந்தது. ஆய்வுக் கூடம் பெரிதாக இருந்தாலும், அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவருக்கு வயது முப்பதிருக்கலாம். முன் தலையில் சின்ன வழுக்கை இருந்தது. முடியை அழுத்தி பின்புறமாக படியும் வகையில் வாரியிருந்தார். கம்பளித் துணியால் ஆன, கால்வரை நீண்டிருந்த கருப்பு நிற கோட்டை அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு டேபிளில், மஞ்சள் நிறத்திலான ஒரு அட்டையைப் படித்துக் கொண்டிருந்தார். அது அந்தக் காலத்திய கடிதமாக இருக்கக் கூடும்.

நியூட்ரினோ - உல்ஃப் கேங்க் பாலி

உல்ஃப் கேங்க் பாலி (Wolfgang Pauli)

" டியர் உல்ஃப்,

கடந்த இருபதாண்டுகளாகவே, 'அணு'வில் நிகழும்  'பீட்டா சிதைவு' (BETA Decay) குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். பீட்டா சிதைவின் போது, அது எலெக்ட்ரானை (Electron) வெளியிடுகிறது. ஆனால், அதன் முடிவுகளைப் பார்க்கும்போது,  ஏற்கனவே நமக்கு இருக்கும் 'ஆற்றல் அழிவின்மை விதி' (Law of Conservation of Energy) மற்றும் "உந்தம் அழிவின்மை விதி" (Law of Conservation of Momentum) ஆகிய இரண்டையும் அது மீறுகிறது. இது எப்படநிகழ்கிறது என்றே தெரியவில்லை. நாளுக்கு நாள் இந்த 'விதி மீறல்' உறுதியாகிக் கொண்டே போகிறது. ஒருவேளை, நம் அறிவியல் கோட்பாடே தப்பா? அப்படியென்றால் இதுவரை நடந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அனைத்துமே தப்பா? உல்ஃப் இதற்கான விடையை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும். நன்றி"

அந்தக் கடிதத்தை மூடிவைத்துவிட்டு உல்ஃப் சில நொடிகள் யோசித்தார். ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். சில நாட்கள் கழிந்தன.
அந்த நாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உல்ஃப் ஒரு நொடி ஆச்சர்யப்பட்டார். இது உண்மையா? மீண்டும் அதை உறுதிபடுத்த சில விஷயங்களை செய்தார். உற்சாகத்தில் துள்ளி குதித்தார் உல்ஃப்.   

உல்ஃபிற்கு ஒரு விநோத பழக்கம் உண்டு. தான் எந்த புது விஷயங்களைக் கண்டுபிடித்தாலும், அதை முதலில் தன் நண்பர்களுக்கு கடிதத்தில் பகிர்வார். உடனடியாக, தன் நண்பர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்...

" அன்பிற்குரிய கதிரியக்க மற்றும் அணு ஆராய்ச்சியாளர்களே,

நான் மிக முக்கியமான ஒரு விஷயத்தை இன்று கண்டறிந்துள்ளேன். 'பீட்டா சிதைவின்' போது, அணு எலெக்ட்ரானை மட்டுமே வெளியிடுவதாக தான் இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிப்படையில் பார்த்த போது தான், அது நம் அறிவியலின் இரண்டு முக்கிய விதிகளை மீறுவதாக உணர்ந்தோம். அது தவறு என் தோழர்களே...நம் அறிவியல் விதிகள் மிகவும் சரியானவையே. பீட்டா சிதைவின் போது, அணு எலெக்ட்ரானை மட்டுமல்ல... இன்னொன்றையும் வெளியிடுகிறது. ஆனால், அது 'அணுத் துகள்' (Atomic Particle) கிடையாது. நாம் இதுவரை அணுவிற்குள், அணுத்துகள் மட்டும் தான் இருப்பதாக நினைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் ஒரு 'அணு உள்துகள்' (Sub - Atomic Particle) இருக்கிறது. அந்த அணு உள்துகள் தான் பீட்டா சிதைவின் போது வெளியாகிறது. இதை நான் பலமுறை ஆராய்ச்சி செய்து உறுதி செய்துள்ளேன். இன்னும் அது குறித்த ஆராய்ச்சிகளை செய்தால், நம்மால் பல அறிவியல் ஆச்சர்யங்களை கட்டவிழ்க்க முடியும்..." 

என்று பெரும் மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை தன் நண்பர்களான பல ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பினார். ஆனால், அந்த 'அணு உள்துகள்' குறித்து ஆராய்ச்சியை உல்ஃப்கேங் பாலியால் (Wolfgang Pauli) தொடர முடியவில்லை. அதை அவர் கண்டுபிடித்த சில நாட்களிலேயே, அவரின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். உல்ஃபின் தாயும் அதே சமயத்தில் தற்கொலை செய்து இறந்துவிட்டார். மிகக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் உல்ஃப். 

நியூட்ரினோ கடிதம்

நியூட்ரினோ கண்டுபித்தது குறித்து  கோவனும், ரெய்ன்ஸும் உல்ஃபிற்கு அனுப்பிய கடிதம்

உல்ஃப் கண்டுபிடித்திருந்த அந்த அணு உள்துகளுக்கு "நியூட்ரான்" (Neutron) என தற்காலிக பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே நியூட்ரான் என்ற பெயரில் ஒரு அணுத்துகள் இருந்ததால், இதற்கு வேறு பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருந்தது. 
1932ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் ஆராய்ச்சியளர்கள், எடோரடோ அமல்டி (Edorado Amaldi) மற்றும் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) ஆகியோர், அடுத்து சில நாட்களில் நடக்கவிருக்கும் சால்வே (Solvay) அறிவியல் மாநாடு குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அணு உள்துகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அமல்டி விளையாட்டாக, இந்தப் பெயரை வைக்கலாம் என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டார். அந்தப் பெயருக்கு இத்தாலி மொழியில் "A Little Neutral One" என்று அர்த்தம். 

அந்தப் பெயர் "நியூட்ரினோ". அன்று தான் உலகம் முதன் முதலாக "நியூட்ரினோ" என்ற வார்த்தையை உச்சரித்தது. 
நியூட்ரினோ துகள் இருப்பது அனுமானிக்கப்பட்டு 26 வருடங்கள் கழித்து, 1956யில், க்ளைட் கோவன் (Clyde Cowan) மற்றும் ஃப்ரெட்ரிக் ரெய்ன்ஸ் (Frederick Reines) எனும் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவின் தென் கரோலினாவில்  (South Carolina) இருக்கும் "சவன்னா ரிவர் சைட்" (Savannah River Site) ஆராய்ச்சிக் கூடத்தில், ஒரு உணர் கருவியை (Detector) நிறுவி, உலகிலேயே முதன்முதலாக நியூட்ரினோவைப் பிடித்தனர். 

1974யில் க்ளைட் கோவன் இறந்துவிட்டாலும் கூட, இந்த ஆராய்ச்சிக்காக ஃப்ரெட்ரிக் ரெய்ன்ஸிற்கு 1995யில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இப்படித் தான் தொடங்கியது "நியூட்ரினோ" எனும் மிகச் சிறிய துகளின் வரலாறு. அது முதல் இன்று... "தமிழக மக்களை மோடி ஏமாற்றிவிட்டார். நியூட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை..." என்று சொல்லி சிவகாசியைச் சேர்ந்த ரவி தீக்குளித்து எரிந்து, இறந்து போனது வரை நியூட்ரினோவின் வரலாறு உலகில் பதிந்துக் கொண்டேயிருக்கிறது. 

அடங்காதவன், அசராதவன் இந்த நியூட்ரினோ:

இதை உங்கள் வாழ்வின் ஏதோ ஓர் தருணத்தில் பார்த்திருப்பீர்கள்.  காலை சூரியன் வந்திருக்கும் நேரம். உங்கள் அறையின்  ஜன்னலை திறக்கிறீர்கள். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்த   சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை சின்ன அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம்.

இந்த உலகில் இருக்கும் எதுவும், எல்லாமும் அணுக்களால் (Atom) ஆனவை என்பது அடிப்படை அறிவியல். முதலில் "அணு" தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. லத்தின் மொழியில் "அணு" (Atom) என்றால் "பிளக்க முடியாதது" என்று பொருள். பின்னர், அறிவியல் வளர்ச்சி அணுவைப் பிளந்தது. அணுவினுள் ப்ரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் (Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர், உல்ஃப்கேங்க் பாலி அணுவில் துகள்கள் மட்டுமல்ல "அணு உள்துகள்கள்" (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். இந்த அணு உள்துகள் தான் நியூட்ரினோ. 

சட்பரி நியூட்ரினோ ஆய்வகம் இ கனடா

சட்பரி நியூட்ரினோ ஆய்வகம் - கனடா

அந்த காலை நேர சூரிய ஒளியில் நம் கண்ணுக்கு புலப்பட்ட அந்த துகள்கள் மாதிரியே, கண்ணுக்குத் தெரியாத பல நூறு லட்சம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியுமே வானிலிருந்து பொழிந்துக் கொண்டிருக்கின்றன. நம் பூமியின் ஒவ்வொரு சது சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. 

நியூட்ரினோ யாருக்கும், எதற்கும் அடங்காதவன். நியூட்ரினோ எவற்றோடும் வினை புரியாத இயல்பைக் கொண்டவன். இன்றைய நிலையில், உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோ தான் என்பதால் அது ஒளியின் வேகத்தில்...சமயத்தில் ஒளியை விடவும் வேகமாக எதையும் ஊடுருவிச் செல்லும் அசராதவன். ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிமீ தூரம் பயணித்து,  யாருக்கும் அடங்காமல் சுற்றுகிறானே...இவனைப் பிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே? ஒருவேளை இவனைப் பிடித்து, அடைத்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தியாவும், நியூட்ரினோ ஆய்வும்:

நியூட்ரினோ ஆராய்ச்சியில், உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. கர்நாடகத்தின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1962 ஆண்டிலேயே நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டது இந்தியா. ஆனால், அதன் பின்னர் அந்த ஆராய்ச்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், மீண்டும் 1990களில் நியூட்ரினோ முக்கிய பேசு பொருளானது. 

தேனி - நியூட்ரினோ ஆய்வகம்

இந்தியாவில் நிச்சயம் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்க சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா என பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின்னர் இறுதியாக, தங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான கார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) இருக்கும் தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கு தான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான  ஐ.என்.ஓ (Indian based Neutrino Observatory) அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. 

திட்டம் என்ன?

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் அதை 2.5 கிமீ தூரத்திற்கு குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும்.  மலையின் நடுப்பகுதியில் ஆய்வுகூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடை கொண்ட  உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன "அயர்ன் கலோரிமீட்டர்" (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி ( Nutrino Detector) அமைக்கப்படும். யாருக்கும், எதற்கும் கட்டுப்படாமல் சுற்றித் திரியும் நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். எளிமையாக, இது தான் திட்டத்தின் அடிப்படை. 

இந்த நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் என்ன செய்ய முடியும் என்பது யாருக்கும் தெரியாத விஷயம். ஒருவேளை இந்த பூமி எப்படித் தோன்றியது என்பதைக் கூட அந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியலாம்.  இது ஒரு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி அவ்வளவே என்று தான் ஆரம்பத்திலிருந்தே இதில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. 

ஒரு ஆராய்ச்சி மையம் கட்டப்போகிறார்கள். உலகளவில் இதுவரை விடை காண முடியாத பல விஷயங்களை தன்னுள் கொண்டிருக்கும் நியூட்ரினோவை அங்கு ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள். ஒருவேளை இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உலகின் பல அறிவியல் ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்த்தால், அது மொத்த தேசத்திற்குமான பெருமையாக இருக்கலாம். 

நியூட்ரினோ திட்டம்

எனில், இந்தத் திட்டத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இதை தமிழ்நாட்டில் தான் செயல்படுத்துவோம் என மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? திட்டத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை... இதனால் எந்த அச்சுறுத்தல்களும், ஆபத்துகளும் இல்லை என்று அரசு தரப்பில் சொல்வது உண்மை தானா? கடும் வெயிலிலும், மழையிலும் பல ஆண்டுகளாக களம் கண்டு திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் குரல் அறிவீனத்தின் வெளிப்பாடா? இந்தத் திட்டத்தை எதிர்த்து ஒரு உயிரே போன பிறகும் கூட, இந்தத் திட்டத்தை இங்குதான் கொண்டு வந்தே தீருவோம் என்று அரசு சொல்வதன் பின்னணியில் என்ன இருக்கிறது? அல்லது யார் இருக்கிறார்கள்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? நியூட்ரினோ திட்டம் அறிவியலா? அழிவியலா? அரசியலா? 

இப்படி பல கேள்விகள் இதில் எழுகின்றன. கண்ணை மூடிக் கொண்டு அதை ஆதரிக்கவும் வேண்டாம்... கண்ணை மூடிக் கொண்டு அதை எதிர்க்கவும் வேண்டாம். திட்டத்தின் சாராம்சங்களை ஆராயலாம். திட்டத்தின் நோக்கங்களை அலசலாம். அறிவியலை படிக்கலாம். அரசியலை கற்கலாம். எந்தவித முன் முடிவுகளுமின்றி பயணத்தை தொடங்கலாம். 

உங்கள் அழகான விரல்களில் இருக்கும் நகங்களை உற்று பாருங்கள். உங்கள் சுண்டு விரலின் நகத்தில் மட்டும், ஒவ்வொரு நொடியும்  6,500 கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன...அவற்றுக்கு ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு நம் "நியூட்ரினோ" பயணத்தைத் தொடங்கலாம்... 

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 2 

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 3 

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 4 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement