``ஜெயலலிதா மரணம்... அமைச்சர்களிடம் விசாரணை எப்போது?'' | When the ministers of ADMK attending enquiry commission of Jayalalithaa's death

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:15:30 (17/04/2018)

``ஜெயலலிதா மரணம்... அமைச்சர்களிடம் விசாரணை எப்போது?''

``ஜெயலலிதா மரணம்... அமைச்சர்களிடம் விசாரணை எப்போது?''

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சாட்சியம் அளித்தவர்கள் 22 பேரிடம் இதுவரை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்துள்ளது. அடுத்தகட்டமாக, தமிழக அமைச்சர்கள் எப்போது சாட்சியம் அளிப்பார்கள் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலா தனது வாக்குமூலத்தைப் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளார். மேலும், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ், ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கவனித்துவந்த காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் வீட்டில் வேலை செய்தவர்கள் என்று இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்கள். நேரில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்புக்கு விசாரணை ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சசிகலா உறவினர் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுதா சேஷய்யன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடரமணன், ஜெயலலிதாவின் சமையலாளர் ராஜம்மாள் ஆகிய 6 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

ஆறுமுகசாமி

இந்தக் குறுக்கு விசாரணை முடிந்த பிறகு, ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ``அரசு மருத்துவர் சுதா சேஷய்யனிடம் (ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்தவர்) நடத்தப்பட்ட விசாரணையில், `2016-ம் ஆண்டு டிசம்பர் 5- ம் தேதி இரவு 11.30 மணிக்குத்தான் ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, ஜெயலலிதா உடல் திசுக்களைப் பார்த்தபோது... அவர் 15 மணி நேரத்துக்குள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது' என்று பதிலளித்தார். எனவே, இறந்துபோன ஜெயலலிதா உடலை நீண்டகாலம் வைத்திருந்ததாகச் சொன்ன குற்றச்சாட்டு இப்போது தவிடுபொடியாகி இருக்கிறது. 5.12.2016 அன்றுதான் ஜெயலலிதா இறந்தார் என்பதும் உறுதியாகியிருக்கிறது. ஜெயலலிதாவை யாரும் தாக்கவில்லை. 

அப்போலோவுக்கு 3.12.16 அன்றுவந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், `ஜெயலலிதா இதயம் நன்றாக உள்ளது' என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ள ஆவணத்தை, நாங்கள் இந்த விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதன்மூலம் 2016-ம் ஆண்டு 3- ம் தேதி அன்று ஜெயலலிதா இதயம் நன்றாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், 5.12.16 அன்று `ஜெயலலிதா ஈ.சி.ஜி ஒரே நேர்கோட்டில் உள்ளது' என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதால், அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராம மோகன ராவ், தம்பிதுரை மற்றும் முக்கியத் தமிழக அமைச்சர்கள் முன்னிலையிலும் அன்று இரவு எக்மோ கருவி அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது என்று விசாரணை ஆணையத்தில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில் எம்பாமிங் செய்த டாக்டரிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணை உறுதியாகியிருக்கிறது.

ஜெயலலிதாவின் செயலாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கட்ரமணன், `ஜெயலலிதா எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் நான் இறந்துவிட்டதாகவும் என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் தவறான தகவல்கள் பரவுகின்றன. மக்களுக்கு உண்மை நிலை தெரிய செய்தி வெளியிடுங்கள்' என்று கூறினார்'' என்று தெரிவித்தார் ராஜா செந்தூர் பாண்டியன்.

வெங்கடரமணன், ஜெயலலிதா

ஆனால், விசாரணை ஆணையத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய வெங்கட்ரமணன், `` `குறுக்கு விசாரணையில் சாட்சியம் அளித்தேன். மீண்டும் அழைப்போம்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் கூப்பிட்டால் வந்து சாட்சியம் அளிப்பேன்'' என்றார். இதயநோய் நிபுணர் சுவாமிநாதன், ``நான்  ஜெயலலிதாவுக்கு நேரடியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதையே இப்போதும் சொன்னேன்'' என்றார். கிருஷ்ணபிரியா  கூறுகையில், ``விசாரணை ஆணையத்தில் நான் ஏற்கெனவே சாட்சியம் அளித்து இருந்தேன். அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் சொன்னேன். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் குறித்த கேள்விக்கும் பதிலளித்தேன்'' என்றார்.

 டாக்டர் சத்தியபாமா, சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் வரும் 30-ம் தேதி குறுக்கு விசாரணை  நடைபெறுகிறது. விசாரணை ஆணையத்தில் சாட்சியத்தின்போதும், குறுக்கு விசாரணையின்போதும் தமிழக அமைச்சர்கள் சிலரின் பெயரைப் பலர் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என்ற பரபரப்பு இப்போது தொற்றிக்கொண்டுள்ளது. அதுபோலவே, ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோரிடமும் விசாரணை எப்போது  நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. எனவே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை மிகுந்த பரபரப்புடன்  எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்