Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..!" சீறிய பன்வாரிலால் புரோஹித்

நிர்மலா தேவி உதவிப் பேராசிரியர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நடந்துவரும் போராட்டம் ஒருபுறம் என்றால், மறுபுறம் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசியிருக்கும் ஆடியோ விவகாரம் எனத் தமிழகத்தில் அடுத்தடுத்துப் பிரச்னைகள் தலைதூக்கி வருகின்றன.


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நிர்மலா தேவி. இவர், பேசிய ஆடியோ விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் பெரிதான நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தை உலுக்கி வரும் இந்த விவகாரத்தில் இன்று விளக்கமளித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். ராஜ்பவனில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார்.

கவர்னர் விசாரணைக் குழு:

நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக் கடிதத்தில்,  ``ஒழுக்கக்கேடான இந்தச் செயல் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை நடத்துவார் என்றும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலாதேவிக்கு எதிராகப் போராட்டம்

அதேபோன்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்கக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகக் கணிதத் துறைத் தலைவர் லெல்லீஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டு குழு அமைக்கப்பட்டிருப்பதுதான் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அவசர அவசரமாக ஆளுநர் குழு அமைத்திருப்பதை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றன. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். 

விசாரணை ஆணையம் கண்துடைப்பா?


சிவக்குமார்  சென்னைப் பல்கலைகழக ஆட்சிக்குழுவின் முன்னாள் உறுப்பினர்இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி முதல்வரும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான  சிவக்குமார், ``நிர்மலா தேவி பேசும் ஆடியோவில் ஆளுநரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் இருந்ததையும் அங்குச் செல்ல அவருக்குள்ள சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தை விசாரிக்க, ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டிருக்கக் கூடாது. தார்மிக அடிப்படையில் இது சரியான விஷயம் அல்ல... மிகவும் தவறானது. அவர், தமிழகத்துக்குப் புதிய ஆளுநராகப் பொறுபேற்றதிலிருந்து வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்கலைக்கழக நியமனங்களைச் செய்துவருகிறார். குறிப்பாக, தமிழக அரசு அதிகாரத்துக்குட்பட்ட அதிகாரத்திலும் அவருடைய தலையீடு அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக அரசின் உயர்கல்வித் துறை இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் மற்றும் மதுரைப் பல்கலைக்கழக வி.ஐ.பி-க்கள் குறித்தும் நிர்மலா தேவி பேசியுள்ளார். இப்படியான சூழலில் ஆளுநர் மற்றும் துணைவேந்தர் இருவருமே குழு அமைத்திருப்பது மிகவும் வேடிக்கையானது. இந்தக் குழு என்பது கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட குழு. ஆளுநருக்கு இதில் தொடர்பில்லை என்றாலும், அவருடைய பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், அவர் விசாரணைக் குழுவை அமைத்திருக்க கூடாது. அதேபோன்றுதான் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை அமைத்துள்ள குழுவும் போலியானது. 

இந்த விவகாரத்துக்குப் பின்னால் முக்கியப் புள்ளிகள் இருப்பதால், தனிக்குழு அமைத்து நேர்மையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். குறிப்பாக வசந்திதேவி போன்ற ஓய்வுபெற்ற நேர்மையான கல்வியாளர்கள் தலைமையில் அந்தக் குழு அமைக்கப்பட வேண்டும். இப்படியான பிரச்னைகளைக் கண்காணிக்க, விசாரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் `விமன் செல்' (women cell) இருக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு விதியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இந்த விதிமுறைகளைப் பல்கலைக்கழகங்களோ அல்லது கல்லூரிகளோ செயல்படுத்துவதில்லை என்பதால்தான் இப்படியான சீர்கேடுகள் அதிகரிக்கக் காரணமாகின்றன" என்றார், மிகத் தெளிவாக.

பன்வாரிலால் புரோஹித்

இதைத் தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ராஜ்பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், ``பேராசிரியை நிர்மலாதேவி யாரென்றே எனக்குத் தெரியாது, அவரின் முகத்தைக்கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனக்கு 78 வயது ஆகிறது, எனக்குப் பேரன் இருக்கிறான். என்னைக் கேட்காமலேயே பல்கலைக்கழகம் நிர்வாகம் விசாரணைக் குழுவை அமைத்துவிட்டது. சட்டவிதிகளின்படியே ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நான் அமைத்துள்ளேன். விசாரணைக் குழுவுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. பேராசிரியை மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதுதான், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.", எனப் பேட்டியளித்துள்ளார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், ``முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்", எனச் சீறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement