வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (18/04/2018)

கடைசி தொடர்பு:10:56 (18/04/2018)

நிர்மலா விவகாரத்தில் கவர்னர் அவசரம் காட்டுவது ஏன்? - சி.பி.எம் கேள்வி!

நிர்மலா விவகாரத்தில் கவர்னர் அவசரம் காட்டுவது ஏன்? - சி.பி.எம் கேள்வி!

தவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தின் பின்னணியில், பல மர்மங்கள் நீடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் தவறாக பேசியிருந்த ஆடியோ பெரும் பரபரப்புகளை கிளப்பியிருந்தது. ஆடியோ விவகாரத்தின் மீதான குற்றச்சாட்டில், அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ சமுதாயத்தினர், பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான சம்பவத்தைத் தொடர்ந்து, உயர் கல்வித் துறையில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துவரும் இத்தகைய சூழலில், நிர்மலா தேவியின் செல்பேசி உரையாடல் பதிவு வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா தேவி

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஐவர் குழுவை அமைத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோஹித்தும் இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாரணை நடத்துவார் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கவர்னர் மீது புகார் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது ஏன் என்றும், கவர்னருக்கு ஏதோ ஒரு வகையில் இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்றும் பரவலாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கவர்னர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

கே. பாலகிருஷ்ணன்நிர்மலா கைது விவகாரத்தைத் தொடர்ந்து, கவர்னர் ஒருபுறம், பல்கலைக்கழக துணை வேந்தர் மறுபுறம் என, அதுபற்றி விசாரணை நடத்த அடுத்தடுத்துக் குழுவை அமைத்து அவசரம் காட்டுவதைப் பார்க்கும்போது, "இப்பிரச்னையின் பின்னணியில் இன்னும் பல மர்மங்கள் இருப்பதாகவே தெரிகிறது" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்... 

மேலும் அவரிடம் பேசியதிலிருந்து, `கவர்னர் தாத்தா இல்ல. கவர்னரை நான் எவ்வளவு நெருக்கத்தில் வீடியோ எடுத்திருக்கிறேன் என்று பார்த்தீர்களா' என்று மாணவிகளிடம் நிர்மலா தெரிவிக்கிறார். இதிலிருந்தே அவர் தனக்கு எவ்வளவு ஹைலெவல் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் ஆடியோ உரை அப்படித்தான் உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ ஒருவகையில் கவர்னர் அலுவலகத்துக்குச் சம்பந்தம் இருப்பதாகத்தான் தெரிகிறது. எனவே, கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்கம், இந்திய மாணவர் பேரவை சார்பில் நாங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இந்தச் சம்பவத்தில் கவர்னரைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முறையான புகார் மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசிடம் கொடுக்க இருக்கிறது. இந்த விவகாரத்தில் கவர்னர் பெயர் அடிபடவில்லை என்றால், நாங்கள் கவர்னரை குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. நிர்மலா தேவியின் செல்போன் உரையில், யாரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்பது தெரிய வேண்டும்.தவிர, உதவிப் பேராசிரியை மீது புகார் வருகிறது. காவல்துறையினர் கைது செய்கிறார்கள். உடனடியாக கவர்னர் ஏன் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்? இதுபோன்ற குழுவை அமைப்பதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற ரீதியில் கவர்னரே முன்வந்து ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். இந்த நடவடிக்கையானது, கவர்னர் அலுவலகத்துக்கு ஏதோ சம்பந்தம் இருப்பதை ஊர்ஜிதப்படுத்துவது போன்றுதான் உள்ளது. 

பல்கலைக்கழகத்தில் எத்தனையோ புகார்கள் வருகின்றன. பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக துணைவேந்தர், பதிவாளர் போன்றோர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, புகார் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, போலீஸார் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில் கவர்னர் ஏன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்? பல்கலைக்கழக வேந்தர் என்றாலும் நிர்வாகரீதியான பதில் சொல்ல வேண்டியவர் அல்ல கவர்னர். அப்படியானால் பல்கலைக்கழகத்தில் எது நடந்தாலும் வேந்தர் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா? இன்னும் சொல்லப்போனால், குற்றவியல் நடைமுறைகளின் படி, பாலியல் வற்புறுத்தல் நிர்மலா தேவியின் பேச்சில் இருக்கிறது. புகாரின்பேரில் விசாரணையை போலீஸார்தான் நடத்த முடியும்.

ஏற்கெனவே பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தென்மாநில கவர்னர் ஒருவருக்கு எதிராக பாலியல் புகார் வந்துள்ளதாகவும், அதுபற்றி உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. அதற்கு ஏதுவாக தமிழக கவர்னர், டெல்லி சென்று வந்தார். ஆனால், காவிரிப் பிரச்னைக்காக சென்று வந்ததாகக் கூறினார். எனவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த விசாரணை முறையாக நடைபெறுவதற்கு ஏதுவாக கவர்னர் விலகியிருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். கவர்னர் பெயரில் அபாண்டமாக நாங்கள் பழி சுமத்திவிடவில்லை. விசாரணை ஒழுங்காக நடைபெற வேண்டுமானால், கவர்னர் சற்றே ஒதுங்கியிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். 

வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புவதே இப்படி இருக்கும்பட்சத்தில் என்ன செய்வது? இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. அதை நிர்மலாவே தன் உரையாடலில் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, உயர் கல்வித்துறையில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த சதித்திட்டத்தில் சம்பந்தம் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி சுனில் பாலிவால், விசாரிக்கப்போவதாக சொல்கிறார். இந்த விவகாரத்தில் இந்தளவுக்கு அவசரம் காட்டுவதன் பின்னணியில் ஏதோ பதற்றம் இருப்பதாகவே தெரிகிறது. ஏற்கெனவே உயர் கல்வித்துறையில் பல புகார்கள் வந்துள்ளன. உயர் கல்வித்துறை சம்பந்தப்படவில்லை என்றால் எப்படி அவர் சொல்வார். 'நீங்க எந்தக் கல்லூரிக்கு வேண்டுமானாலும் போகலாம். உயர் கல்வி எங்க வேண்டுமானாலும் படிக்கலாம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கிடைக்கும்' என்று நிர்மலா சொல்வதில் இருந்தே தெரியவில்லையா?

இந்தப் பிரச்னையில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டால், உயர் கல்வித்துறையில் நிலவும் மிகப்பெரிய மர்மங்கள் வெளியாகும் என்றே தெரிகிறது. தவிர, நிர்மலா விவகாரம், தமிழகம் முழுவதும் உள்ள மாணவ- மாணவிகள் மத்தியில் நிச்சயமாக மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும்" என்றவரிடம், ``தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்தப் பிரச்னை அமைந்துள்ளதா" என்று கேட்டதற்கு, ``நான் அப்படிக் கருதவில்லை. கல்லூரி நிர்வாகம் மூன்று மாதங்களுக்கு முன்னரே, உதவிப் பேராசிரியை நிர்மலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. எனவே, காவிரிப் பிரச்னைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை" என்றார் தீர்க்கமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்