வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (19/04/2018)

கடைசி தொடர்பு:10:01 (20/04/2018)

``காடுவெட்டி குருவுக்கு என்னாச்சு..?” - டாக்டர் ராமதாஸ் 

``காடுவெட்டி குருவுக்கு என்னாச்சு..?” - டாக்டர் ராமதாஸ் 

ராமதாஸ் காடுவெட்டி குரு

ன்னியர் சங்கத்தின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு, சில வருடங்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவ்வப்போது, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ளது `நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோய்' என்பதை சில மாதங்களுக்கு முன்னர், மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவ்வப்போது, சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன. 

இந்நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 16 ம் தேதி, அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று குருவிடம் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ம.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில், 'உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பா.ம.க முன்னணி தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காடுவெட்டி குரு விரைவில் குணமடைய வேண்டும் என்று பா.ம.க நிர்வாகிகள், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குச் சென்று குருவுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைச் சந்தித்து உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும், 'ஜெ.குரு  உடல் நலம் பெற வேண்டும்' என்று வடபழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு தரிசனம் செய்தும் வழிபட்டார். 

வடபழனி முருகன் கோவிலில் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைமை அலுவலகம்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `குரு உடல்நிலையை முன்னேற்றுவதற்கு மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் ராஜ் பி.சிங், தீவிர இருதய நோய் சிகிச்சை வல்லுநர் சாய் சதீஷ், பல்துறை தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், பல்துறை தீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு மருத்துவர் பரத், மூத்த மருத்துவர் வெங்கடாசலம், சிறுநீரக அறுவை சிகிச்சையியல் மருத்துவர் ஜெய கணேஷ், மூத்த மருத்துவர் நல்லி யுவராஜ் உள்ளிட்ட 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் மருத்துவர் அன்புமணி ஆலோசனை மேற்கொண்டார். அதனடிப்படையில் குரு-வுக்கு மூத்த மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த ஆலோசனைகளின்போது குரு-வின் குடும்ப உறுப்பினர்களும் உடனிருந்தனர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரு, உடல் நிலை குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக தனது முகநூலில் எழுதியுள்ளார். அதில், 'குரு, உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் 12.4.18 அன்று அனுமதிக்கப்பட்டார். குருவை எனது மூத்த மகனாகவே நான் கருதுகிறேன். குருவுக்குக் கடந்த 4 ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களாக அவர் `நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோயால்’ பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதைத் தொடர்ந்து, அவரது உடல் நலமும் தேறி வருகிறது. அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட அவை உடனடியாகச் சரி செய்யப்படுகின்றன. சென்னைக்கு வரும்போதெல்லாம் நான் அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கடந்த 08.04.2018 அன்று சென்னை வந்தபோதுகூட குருவை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தேன்.

குரு ராமதாஸ் அன்புமணி ஜி.கே.மணி

அதன்பிறகு, அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்  மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவம் அளிக்க வசதியாக வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. குருவுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிப்பதற்காக நானும், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குருவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்ப் பிரிவின் தலைவரும், பேராசிரியருமான சி.ஜி. கில்னானி, அந்தத் துறையின் முன்னாள் தலைவரும், எய்ம்ஸ் இயக்குநருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா ஆகியோரிடம் அன்புமணி நேரில் அவருக்கு அளிக்க வேண்டிய மருத்துவம் குறித்து ஆலோசனைகளைப் பெற்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தெரிவித்தார்.

நுரையீரல் நோய்க்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற, உலகின் முதல் நிலை மருத்துவரும், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நுரையீரல் நோய் சிகிச்சைப் பிரிவு தலைவருமான மருத்துவர் கணேஷ் ரகுவிடமும் மருத்துவர் அன்புமணி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த நுரையீரல் நோய் மருத்துவர்களில் ஒருவரும் சிகாகோ மருத்துவமனையில் பணியாற்றுபவருமான மருத்துவர் முத்துசாமியை நான் இருமுறை தொடர்புகொண்டு குருவுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். விரிவாக விவாதித்தேன். அவர்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் குருவுக்கு அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவப்பிரிவு மூத்த மருத்துவர் ராஜ்.பி.சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவம் அளித்து வருகின்றனர்.

குருவுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை வழங்கி, இயல்புநிலைக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும். இதற்கு பொருளாதாரம் உள்ளிட்ட எதுவும் தடையாக இருக்காது. எனது அன்புக்கும், பாசத்துக்கும் பாத்திரமான, எனது மூத்த பிள்ளையைப் போன்று நான் கருதும் குரு வெகுவிரைவில் முழுமையான உடல்நலம் பெற்று நம்முடன் இணைந்து பணியாற்றுவார் என்று முழுமையாக நம்புகிறேன்' என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

குரு உடல்நிலை சரியாக வேண்டும் என்று கோவில்களில் பா.ம.க-வினர் வழிபாடு செய்து வருகின்றனர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்