வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (21/04/2018)

கடைசி தொடர்பு:19:25 (21/04/2018)

``இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம்...!'' மத்திய அரசு அறிவிப்பு!

தானியங்கள்

இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை மானிய விலையில் விற்க வேண்டும் என்று மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை சித்த மருத்துவர் கு.சிவராமன் மகிழ்ந்து வரவேற்றுள்ளார். மானிய விலையில் சிறுதானிய விற்பனைத் திட்டத்தை தொடங்கிய ஜெயலலிதா அரசு, கடந்த 5 ஆண்டுகளாக அதை கிடப்பில் போட்டுவிட்டது. இப்போது அந்தத் திட்டத்தை மத்திய பி.ஜே.பி. அரசு தூசி தட்டியிருக்கிறது. 

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 686 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலம் 2 கோடியே 3 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 கிலோ புழுங்கல் அரிசி, 10 கிலோ பச்சரிசி இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், பருப்பு வகைகள் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தில் கோதுமையை வழங்க வேண்டும் என்று தெரிவித்து, மத்திய அரசு கோதுமை ஒதுக்கீடு செய்வதால் அதை மாநில அரசும் வழங்குவதாகத் கூறப்பட்டது. இந்நிலையில், 'உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகி, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது. நஞ்சில்லா சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும்போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். இதன்மூலம் அந்தத் தானியங்களின் விலையும் படிப்படியாகக் குறையும் என்று பல்வேறு யோசனைகளை சிறுதானிய உற்பத்தியாளர்கள், மத்திய-மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

``உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் தினை அரிசி, மாவு வகைகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யலாம்; மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கிராமப்புற விவசாயிகள் வாழ்வு சிறக்கும்" என்று 2013-ம் ஆண்டு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த சாந்த ஷீலா நாயர் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார். 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி இந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். முதல் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக் கொண்டார். ஆனால், அந்தத் திட்டம் தொடக்க விழாவோடு நின்றுபோனது. 2016-ம் ஆண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், 'சிறுதானியங்கள் பயன்பாட்டை மக்களிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; ரேஷன் கடைகள் மூலம் அவை விநியோகிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. 

ரேஷன் கடை

எனினும், 2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த அ.தி.மு.க அரசு, சிறுதானியங்கள் விற்பனை குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, மத்திய பி.ஜே.பி. அரசுக்குச் சிறுதானியங்களின் பயன்பாடுகள் குறித்தும், அவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

இதையடுத்து, இதுபற்றி ஆய்வுசெய்ய மத்திய வேளாண்மை அமைச்சகம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு, `ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்த சிறு தானியங்களைப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகம் செய்ய பரிந்துரை செய்தது. அந்த அறிவிப்பு, மத்திய அரசிதழில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. 

இதுகுறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறுகையில், ``இந்தியாவில் இன்று நடக்கும், பல விஷயங்கள் நம்மை வெகுவாய்க் காயப்படுத்திக் கொண்டும், தாங்கொணா வேதனையைத் தூண்டிக்கொண்டும் இருக்கும் வேளையில், ஏப்ரல் 10-ம் தேதி வெளியான, மத்திய அரசின் ஆணை (அரசிதழ் அறிவிப்பு) மகிழ்வைத் தந்துள்ளது. ஆம், `தினை, ராகி, கம்பு, சோளம் முதலான அனைத்துச் சிறுதானியங்களும் வெறும் உணவு தானியங்கள் மட்டுமல்ல; உடலுக்கு ஊட்டம் தரும் தானியங்கள். சர்க்கரையைக் கட்டுப்படுத்த உணவில் சேர்க்கப்பட வேண்டியவை. இவை ஒவ்வோர் இந்தியனுக்கும் சகாய விலையில் கிடைக்க வேண்டும்' என இந்திய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. `இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் பொது விநியோக முறையில் இந்தத் தானியங்கள் வழங்கப்பட வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராமன்

இது பல ஆண்டுப் போராட்டத்திற்குக் கிடைத்த சிறிய வெற்றி. சுதந்திரத்துக்குப் பின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும், விவசாய அமைப்புகளும், அரிசி மற்றும் கோதுமையைச் சுற்றியே ஆய்வு நடத்தி, அவற்றின் விநியோகத்தை முடுக்கிவிட்டதில், சாமை, ராகி, கம்பு போன்ற தானியங்கள் ஏறத்தாழ வழக்கொழிந்து போன நிலையில், நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயப் பெருமக்களின் முயற்சியால் இன்று மானிய விலையில் சிறுதானியங்கள் கிடைப்பது சாத்தியப்பட்டுள்ளது. எனவே, இனி அனைத்து ரேஷன் கடைகளிலும் சகாய விலையில் இத்தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, அந்தந்த மாநிலங்களை முடுக்கி விடவேண்டியது நம் கடமை. இந்த அறிவிப்பு கொஞ்சம் மகிழ்ச்சியையும் கூடுதல் உத்வேகத்தையும் தந்துள்ளது. இந்தப் பயணத்தை வேகமாகத் தொடர்வோம். அரசின் ஆணையால் இத்தானியங்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இச்சூழலில், இத்தானியங்களின் உற்பத்தி விவாசாயிகளுக்கு நிச்சயமாகக் கைகொடுக்கும்; வாழ்வு தரும்" என்று  மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதுகுறித்து, தமிழக உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மத்திய அரசின் அறிவிப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. சிறுதானியங்களைப் பொறுத்தவரை இப்போது, சந்தையில் கிலோவுக்கு வரகு அரிசி ரூ.60, தினை அரிசி ரூ.40, குதிரைவாலி அரிசி ரூ.60, சாமை ரூ. 70, பனி வரகு ரூ.60, கம்பு ரூ.35, கேழ்வரகு ரூ.35, நாட்டுக்கம்பு ரூ.40 என்ற விலைகளில் கிடைக்கிறது. இவற்றை மொத்தவிலையில் கொள்முதல் செய்துதான் நியாயவிலைக் கடைகளில் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானியத்துக்கும் மத்திய அரசு எவ்வளவு மானியம் தருகிறது என்பதைப் பொறுத்தே மாநில அரசின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். இப்போது, தமிழகச் சட்டசபையில் விரைவில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்போது, இதுபற்றி முதல்வர் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து, அதுபற்றிய அறிவிப்பை வெளியிடும்'' என்றனர்.

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் சிறுதானியங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை 2013-ம் ஆண்டிலேயே தமிழக அரசு தொடங்கிய போதிலும், அதனை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல் விட்டு விட்டது. 'அம்மா உணவகங்களைப்' பின்பற்றி பரவலாக நாடு முழுவதும் இதுபோன்ற குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் கேண்டீன்கள் இப்போது பிரபலமாகி உள்ளன. அதுபோல, சிறுதானிய விற்பனைத் திட்டத்தையும் தொடங்கிய வேகத்திலேயே முழுமையாக செயல்படுத்தியிருந்தால், அதுவும் இன்றைக்கு நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக அமைந்திருக்கும். ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து, அதை தமிழ்நாடு செயல்படுத்தக்கூடிய நிலைக்கு தற்போது மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது. சிறுதானிய மானிய விலை விற்பனைத் திட்டம் தொடங்கி, ஐந்து ஆண்டுகளாக மாநில அரசு  குறட்டை விட்டு ஆழ்ந்து தூக்கத்தில் இருப்பதால், தமிழக விவசாயிகளுக்கும் மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பயன்கள் பறிபோய் விட்டன. இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்