வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (23/04/2018)

கடைசி தொடர்பு:13:56 (24/04/2018)

"மீனவக் கிராமங்களே இல்லாத தமிழக கடற்கரைகள்!” – தமிழக அரசின் புதிய திட்டத்தை எதிர்க்கும் மீனவர்கள்

மீனவர்கள்

மிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம், 'கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்' (Coastal Zone Management Plan) என்னும் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் திட்டத்தின்படி, இனி வரும் ஆண்டுகளில் கடற்கரையையும், கடல் எல்லையையும் எப்படி நிர்வகிப்பது என்பது தீர்மானிக்கப்படும். அதற்கான வரைவுத் திட்டத்தையும், விதிமுறைகளையும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்டது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பு ஆணை, மத்திய அரசின் விதிமுறைகளை மீறியுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

1991-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முதன்முதலில் ‘கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்துக்கான’ விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு, 1996-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. 

வரைபடம்

2011-ம் ஆண்டு, இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, விதிமுறைகள் வெளியிடப்பட்டன. தமிழக அரசு, கடந்த 2013-ம் ஆண்டு தற்போது வெளியிடப்பட்டிருக்கும் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தை வெளியிட முயன்றது. அப்போது மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகின. தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு முறையான மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுமாறு ஆணையிட்டது. 2013 முதல் 2018-ம் ஆண்டுவரை, பழைய மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது.  2017-ம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட ஒரு தீர்ப்பில், மாநில அரசுகள் அனைத்தும் 2018 ஜூலை மாதம் முடிவதற்குள், ‘கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை’ முடித்து வெளியிட வேண்டும் என ஆணையிட்டது. தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் திட்டத்தை வெளியிட்டு, ஏப்ரல் மாத இறுதியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதாக அறிவித்துள்ளது. இந்த மேலாண்மை திட்டம் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் விதிமுறைகளை மீறியுள்ளதாக மீனவ அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. '1:25,000 என்ற அளவில் வரைபடங்கள் முழுமையாக தீர்மானிக்கப்பட்டு அதற்கான திட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்கிறது மத்திய அரசின் விதி. ஆனால், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் 1:25,000 அளவிலான வரைபடத்தில் மீனவர்களுக்கான ‘அபாயக்கோடு’ பற்றி குறிப்பிடப்படவில்லை. 

மேலும் மத்திய அரசு விதிமுறை, ‘மீனவக் கிராமங்கள், மீனவர்களின் பொதுச் சொத்துகள், நிரந்தர வீட்டுவசதி, மற்ற கட்டுமானங்கள் முதலானவற்றை மீனவக் கிராமங்களின் உள்ளூர் நிர்வாகம் எளிதாகப் பயன்படுத்தும்விதத்தில் 1:4,000 என்ற அளவில் சிறியதாக்கி வரைபடங்கள் அளிக்க வேண்டும்’ எனக் கூறுகிறது. தமிழக அரசு வெளியிட்டிருக்கும் திட்டம் மீனவக் கிராமங்களோ, அதற்கான எல்லைகளோ இல்லாமல் வெளியாகியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை நிலங்களையும், நீர் நிலைகளையும் (Coastal Regulation Zone – CRZ) நான்கு மண்டலங்களாக பிரித்து, அவற்றின் தன்மைக்கேற்ப பாதுகாப்பதையும் பயன்படுத்துவதையும் அறிவுறுத்துகிறது. அதன்படி முதலாம் பிரிவில் (CRZ-1), கடற்கரையின் சூழலைப் பாதுகாக்கும் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலான பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளைப் பாதுகாப்பதும், அவற்றில் தொழில் நிறுவனங்கள் கட்டப்படக் கூடாது என்பதும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.  

தமிழக சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் திட்டத்தில் அப்பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நீக்கப்பட்டிருக்கும் பகுதிகளை, வணிக நோக்கத்துக்காக தமிழக அரசு பயன்படுத்தக்கூடும் என சூழலியல் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

பாரதிகடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இந்த மாத இறுதியில் தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி தென்னிந்திய மீனவ நலச்சங்கத் தலைவர் பாரதியிடம் கேட்டபோது, ``கடற்கரையில் மீனவர்களை வாழ அனுமதிக்கும் ஒரே சட்டம், கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், தற்போது வந்திருக்கும் இந்த வரைபடம் எங்களின் இருப்பிடத்தையே காலிசெய்யக் கூடியதாக இருக்கிறது. வெறும் வரைபடம் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்கப்படாமல், கருத்துக்கேட்பு கூட்டத்தை தமிழக அரசு நடத்தி முடிக்க முயற்சி செய்கிறது. இது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்டிருக்கும் தீர்ப்புக்கு எதிரானது. சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தக்கூடாது எனவும், மீனவர்களின் பாரம்பர்ய உரிமைகளை அழிக்கும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் மீனவர்கள் போராட உள்ளோம்” என்றார்.

பூஜாகடற்கரை சூழலியல் செயற்பாட்டாளர் பூஜா குமாரிடம் பேசினோம். ``சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பாணையில், அபாயக்கோடு பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வரைபடத்தில் அபாயக்கோடு இல்லாமல் போனால், கடல்மட்ட உயர்வினால் வரும் விளைவுகளைக் கணிக்க முடியாது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் திட்டமே, அவசர கதியில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றாமல், இந்த அறிவிப்பாணை வெளிவந்திருப்பதால், இந்த அறிவிப்பாணையும், அதன் அடிப்படையில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டமும் சட்ட விரோதமானது” என்றார் அவர்.  

இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது தனி உதவியாளர்தான் பேசினார். ``அமைச்சர் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார்.  அவருடன் நீங்கள் எப்போது பேச முடியும் என்பது தெரியவில்லை" என்று கூறி முடித்துக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து, தற்போது தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் Institute of Remote Sensing பிரிவை அணுகி, 1:5,000 என்ற அளவில் மீனவக் கிராமங்களுக்கு வரைபடம் உருவாக்க நிதி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. எனினும் கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்கெனவே முடிவுசெய்த தேதியில் நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்