`` 6 எம்.எல்.ஏ-க்களும்... எக்கச்சக்க ஆஸ்தியும்" - சசிகலா குடும்ப உறவுகள் குழிபறிக்கக் காரணம் என்ன?!

`` 6 எம்.எல்.ஏ-க்களும்... எக்கச்சக்க ஆஸ்தியும்

சசிகலா - தினகரன் - திவாகரன்

``சிகலாவின் குடும்பத்துக்குள் இதுவரை இல்லாத அளவுக்குக் குடும்பப் பூசல் அதிகரித்துள்ளது. இதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், ‘ஆஸ்திக்கு யார்... கட்சிக்கு யார்’ என்ற கோதாவின் விளைவுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்” என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.
 
இதுகுறித்து அவர்கள், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது டி.டி.வி.தினகரன் அணி, திவாகரன் அணி என குடும்பத்தில் இரண்டு அணிகளாகக் களத்தில் நின்றபோது குழம்பிப்போனார்கள் அ.தி.மு.க-வினர். ஆனால், அ.தி.மு.க-வே இரண்டாக உடைந்தபிறகு குடும்பத்துக்குள் குழப்பம் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்த சசிகலா, தம்பி திவாகரனையும், அக்கா மகன் டி.டி.வி.தினகரனையும் அழைத்துச் சமரசத்தை ஏற்படுத்தி வைத்தார். அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியோடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு, திவாகரன் மற்றும் டி.டி.வி.தினகரன் இடையே இருந்த மனக்கசப்பு குறைந்து அ.தி.மு.க-வை முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்தனர். 

டெல்லி தேர்தல் ஆணையத்திலிருந்த அ.தி.மு.க தொடர்பான வழக்கில், எடப்பாடி - பன்னீர் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது தேர்தல் ஆணையம். இதனால், புதிய அமைப்பைத் தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் தினகரன். அதன்பிறகு 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘இது தனிக்கட்சி அல்ல, ஓர் அமைப்பு மட்டுமே. அ.தி.மு.க குறித்த வழக்கு முடிவுக்கு வந்தபிறகு இந்த அமைப்பு அ.தி.மு.க-வுடன் இணைக்கப்படும்’ என்று விளக்கம் கொடுத்தார் தினகரன். ஆனால், அவர் இப்படி ஓர் அமைப்புத் தொடங்கியதில் திவாகரன் தரப்புக்கு உடன்பாடில்லை என்றே சொல்கிறார்கள், தினகரன் ஆதரவாளர்கள். மேலும் அவர்கள், `திவாகரனுக்கு என்று அ.தி.மு.க-வில் தனியாக ஆதரவு வட்டம்  இருந்தது. அவர்கள் யார் பின்னால் செல்வது என்ற குழப்பத்திலும் இருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், 'போஸ் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இது, ஒருவகையில் தினகரனுக்குச் செக் வைக்கும் விதமாகவே தொடங்கப்பட்டது’ என்கிறார்கள். 

திவாகரன் - சசிகலா

அதேநேரம், தினகரன்  தன்னை முன்னிலைப்படுத்தும் வேலையிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். மேலும், மத்திய அரசுக்கு நெருக்கமாகவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். இந்தத் தகவலைத் திவாகரன் தரப்பும், ஆளும் தரப்பும் மோப்பம் பிடித்தது.  அதேநேரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கில் தீர்ப்பு வரலாம் என்ற நிலை உள்ளது. சட்ட வல்லுநர்கள் பலரும் இந்த வழக்கில் தினகரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று சொல்லியுள்ளார்கள். இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்குக் கிடைத்த பிறகுதான், தினகரனை வீழ்த்த அவர் குடும்பத்திலிருந்தே ஆயுதம் எடுக்க முடிவு செய்தனர். ஏற்கெனவே திவாகரனுக்கு ஆதரவாக இருந்த சில நபர்கள் மூலம் இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ‘முதலில் ஆட்சியைக் காப்பற்ற வேண்டும். பி.ஜே.பி முன்புபோல் எங்களைத் தோழமையாகப் பார்க்கவில்லை. ஆட்சியை இழந்துவிட்டால் எல்லாம் போய்விடும். ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், தினகரன் தரப்பைப் பலமிழக்கச் செய்ய வேண்டும்’ என்று  தூதுவிட்டுள்ளார்கள். அதற்கு திவாகரனும் ஓ.கே சொல்லியுள்ளார். அதற்குப் பரிகாரமாகத் தனது மகனுக்குப் பொறுப்பும், தனக்கு வேண்டியதைச் செய்து தரவேண்டும் என்று சொல்லியுள்ளார். இதற்கு எடப்பாடி தரப்பு ஓகே சொல்லியுள்ளது. அதன்பிறகுதான் தினகரன் தரப்பில் இருந்த ஆறு எம்.எல்.ஏ-க்களிடம் திவாகரன் தரப்பிலிருந்து பேசியுள்ளார்கள்.
 
அதாவது, தீர்ப்பு தினகரனுக்கு ஆதரவாக வந்தால், நிச்சயமாகப் பெருமான்மையை நிரூபிக்க வேண்டிவரும். அப்போது நீங்கள் எடப்பாடியை ஆதரித்தால் போதும் என்று சொல்லியுள்ளார்கள். அந்த ஆறுபேரும் அதற்கு ஓ.கே சொல்லியுள்ளனர். இந்தத் தகவல் தினகரன் தரப்புக்கு தெரிந்த பிறகுதான், வெற்றிவேலை வைத்து காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட வைத்துள்ளார். 

அதேநேரம், தினகரன்மீது திவாகரன் கோபத்துக்குக் காரணம் சொத்துப் பஞ்சாயத்தும் ஒன்று என்கிறார்கள். நடராஜன் மறைவுக்குப் பரோலில் வந்த சசிகலாவிடம் சொத்து விவகாரம் குறித்து குடும்ப உறவுகள் கிளறியுள்ளார்கள். அப்போது சசிகலா, ‘கட்சி விஷயத்தைத் தினகரன் கவனித்துக்கொள்ளட்டும்; சொத்துகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியுள்ளார். இப்போது பெரும்பாலான சொத்து இளவரசி குடும்பத்தின் கையில்தான் உள்ளது. அந்தக் குடும்பத்தைத் திவாகரன் தரப்பு சரிசெய்து, விவேக் மூலம் சில காரியங்களைச் செய்துவருகிறது. இது, தினகரன் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்த, ஜெயா டி.வி விவகாரத்துக்குள் மூக்கை நுழைத்தார் தினகரன். இது, எல்லாம் சசிகலாவிடம் சொல்லப்பட்டுப் பஞ்சாயத்துப் பெரிதானதால் பரோல் முடிவுக்கு முன்பே சிறைக்குக் கிளம்பிவிட்டார் சசிகலா. குடும்பத்தில் இத்தனை பிரச்னைகளை வைத்துக்கொண்டு சசிகலா சிறையிலும், மனவருத்தத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆஸ்திக்கு ஏற்பட்ட போட்டி இப்போது ஆட்சியைக் காப்பாற்றும் நிலைக்கு வந்துவிட்டது. ஆட்சியை திவாகரன் தரப்பு காப்பாற்றிவிட்டால், திவாகரன் செல்வாக்கு இனி உயர்ந்துவிடும். ஆனால் தினகரன், ‘என்னுடைய ஆதரவாளர்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். யாரையும் விலைக்கு வாங்க முடியாது’ என்று நம்பிக்கையோடு சொல்லிவருகிறார். ஆறு எம்.எல்.ஏ-க்களும், ஆஸ்தியுமே இந்தத் தினகரன் - திவாகரன் மோதலுக்கு பிள்ளையார்சுழியாக அமைந்துள்ளது” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
மன்னார்குடி குடும்பத்துக்குள் மோதல் தொடங்கிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!