வளரும் வாரிசு அரசியல்: எடியூரப்பா - சித்தராமையா மகன்கள் மோதல்! | Dynasty politics continues in Karnataka election! Siddaramaiah's son to face Yeddyurappa's son in Varuna!

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (27/04/2018)

கடைசி தொடர்பு:20:15 (27/04/2018)

வளரும் வாரிசு அரசியல்: எடியூரப்பா - சித்தராமையா மகன்கள் மோதல்!

யதீந்திரா - விஜயானந்தா, கர்நாடகத் தேர்தல்

ர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் மகன் மற்றும் முன்னாள் முதல்வர்கள் 8 பேரின் மகன்கள் போட்டியிடுவதால் கர்நாடகத் தேர்தல் களம் பரபரப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. 

கர்நாடக மாநிலச் சட்டசபைக்கு மே மாதம் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 15-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெங்களுரில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் ராகுல் காந்தி வெளியிட்டார். கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு, காவிரி நதிநீர் குடிநீர்த் திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, பி.ஜே.பி தலைவர் அமித்ஷாவும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் சுற்றுப் பயணம் செய்து பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பிரதமர் மோடி, வரும் 1-ம் தேதியன்று கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். இதுபோன்ற அதிரடிகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டபோதிலும், பி.ஜே.பி-யிலும் அதுபோன்ற போக்கு தற்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகத் தேர்தல் களத்திலும் வாரிசுகள் உதயமாகும் நிலை தொடங்கிவிட்டது. 

தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, வருணா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். 'சபாஷ் சரியான போட்டி' என்ற அடிப்படையில் இந்நாள், முன்னாள் முதல்வர்களின் மகன்கள் மோதுகிறார்கள்.

முதலமைச்சர் சித்தராமையா, 2013-ம் ஆண்டு வெற்றிபெற்ற தொகுதி வருணா ஆகும். தற்போது, அந்தத் தொகுதியில் அவருடைய மகன் டாக்டர் யதீந்திரா நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், வருணா தொகுதியும் நட்சத்திர தொகுதிக்கான அந்தஸ்தைப் பெற்றுள்ளது.சித்தராமையா தன் அரசியல் வாரிசாக்க முற்பட்ட அவரின் மூத்த மகன் ராகேஷ் உயிரிழந்ததால், யதீந்த்ராவை இந்தத் தேர்தலில் களம் இறக்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. 

ஹெச்.டி. ரேவண்ணாகர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் தளபதியாக மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்த சித்தராமையா, அப்போது வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யதீந்திரா, விஜயேந்திரா ஆகிய இரண்டு வாரிசு வேட்பாளர்களைத் தவிர்த்து, தேவகவுடாவின் மகன்களான ஹெச்.டி.குமாரசாமி, ரேவண்ணா ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வரான குமாரசாமி, ராம்நகர் மற்றும் சென்னப்பட்டணம் ஆகிய இருதொகுதிகளில் போட்டியிடுகிறார். ரேவண்ணா, ஹோலேநரசிப்பூர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிர் அரசியல் கட்சியில் இருப்பது, கர்நாடக மாநிலத்திலும் உள்ளது. முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன்களான குமார் பங்காரப்பா, பி.ஜே.பி சார்பிலும், மது பங்காரப்பா காங்கிரஸ் சார்பிலும் சொரபா தொகுதியில் மோதுகிறார்கள். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜே.ஹெச்.பட்டேலின் மகன் மகிமா பட்டேல் சன்னகிரி தொகுதியில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

கர்நாடகத்தின் மேலும் ஒரு முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான அஜய் சிங், ஜிவராகி தொகுதியில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை பி.ஜே.பி சார்பில் ஹவேரி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் வாரிசுகளின் வெற்றி குறித்த தகவல் மே 15-ம் தேதி தெரிய வரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்