வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (03/05/2018)

கடைசி தொடர்பு:12:29 (03/05/2018)

பி.ஜே.பி ஃபார்முலா...குமாரசாமி கணக்கு...ராகுல் நம்பிக்கை! - கர்நாடகா தேர்தல் விறுவிறு

நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடியின் செல்வாக்கை உயர்த்துவதற்கு சமூகவலைதளப் பிரசாரம் பி.ஜே.பி-க்குப் பெரிதாகக் கைகொடுத்தது. அதைப்போலவே, தற்போதைய கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் சமூகவலைதளப் பிரசாரத்தை பி.ஜே.பி பெரிதும் நம்பியுள்ளது. கர்நாடகத்தில், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைதளங்கள் மூலமாக பி.ஜே.பி வேட்பாளர்களை புரொமோட் செய்வதற்குத் தனி டீம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியாவை பி.ஜே.பி பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்துவருகிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். அத்துடன், தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குரூப்களை அமைத்து தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, பிரசாரம் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கட்சியினர் பரப்பிவருகிறார்கள். 

நடுவானில் தத்தளித்த விமானம்!

ராகுல் காந்தி - கர்நாடகா

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கடந்த வாரம் டெல்லியிலிருந்து ஹூப்ளிக்கு, ஃபால்கன் 2000 என்ற விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலரும் பயணம் செய்தனர். திடீரென அந்த விமானம் நடுவானில் தத்தளித்து, கட்டுப்பாட்டை இழந்து கீழ்நோக்கிப் பறந்துள்ளது. விமானியின் சாமர்த்தியத்தால், விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், அந்தச் சம்பவத்தால் ராகுல் உள்பட விமானத்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது, ராகுலுக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று டி.ஜி.பி-யிடம் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என விமானத்துறை அமைச்சகம் அறிவித்தது. பின்னர் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், “நடுவானில் விமானம் தத்தளித்தபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணினேன். அப்போது, எந்த விபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என மானசரோவரில் உள்ள கைலாசநாதரை வந்து தரிசிப்பதாக வேண்டிக்கொண்டேன். அதன்பின்னர், மூன்று முறை குலுங்கிய பிறகு, விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” என்று குறிப்பிட்டார். 

அமித்ஷாவும்.. அசராத வியூகமும்!

அமித்ஷா கர்நாடகா

கர்நாடக தேர்தலில் பி.ஜே.பி-யின் கதாநாயகன் அமித் ஷா தான். ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார். வேட்பாளர்கள் தேர்வு முதல், தேர்தல் பொறுப்பாளர்கள் வரை அனைத்து டேட்டாக்களும் அமித் ஷாவின் கையில் உள்ளன. இவர், ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கு மண்டலப் பொறுப்பாளர்களிடம் தவறாமல் போனில் பேசிவிடுகிறார். சக்தி, மகா சக்தி, கேந்திரா என்ற ரீதியில் உ.பி ஃபார்முலாவையே கர்நாடகாவிலும் செயல்படுத்தும் முயற்சியில் அமித் ஷா உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி முகம் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வந்த பிறகுதான், பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டங்களை அதிகப்படுத்தியுள்ளனர். பிரசார உத்தியிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். கர்நாடகாவில் 26 முறை அமித் ஷா வட்டமிட்டுள்ளார். பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களையும் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் இறக்கிவிட்டுள்ளனர். 

குமாரசாமியின் கணக்கு!

கணிசமான அளவில் எம்.எல்.ஏ-க்களைப் பிடித்துவிட்டாலே போதும் என்று நினைக்கிறார், முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி. காங்கிரஸ், பி.ஜே.பி ஆகியோரில் யார் ஆட்சிக்கு வரவிருந்தாலும், தனது தயவில்லாமல் ஆட்சியில் அமர முடியாத நிலையை உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் கணக்கு. இரண்டு தேசிய கட்சிகளையும் அவர் வெளுத்துவாங்குகிறார். ஆனாலும், ஆளும் காங்கிரஸ் கட்சியை அதிகமாகவே விமர்சனம் செய்கிறார். சமீபத்தில் மங்களுர் பிரசாரத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, “பி.ஜே.பி-யும் குமாரசாமியும் ரகசியக் கூட்டு வைத்துள்ளார்கள். அமித் ஷாவும், குமாரசாமியும் ஒரே விமானத்தில் டெல்லிக்குச் சென்றனர்” எனப் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கிளப்பினார். அதற்கு  பி.ஜே.பி தரப்பிலிருந்தும், குமாரசாமி தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

தேர்தலை முடிவுசெய்யும் தமிழர்கள்!

பெங்களுரை ஒட்டிய 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கணிசமான அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்தத் தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தமிழர்களே முடிவு செய்யும் நிலை உள்ளது. ‘பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்’ என இந்தப் பகுதியில் பி.ஜே.பி-யினர் பிரசாரம் செய்கிறார்கள். இந்த முறை தமிழர்களின் வாக்குகள், பெருமளவில் பி.ஜே.பி-க்கு விழும் சூழ்நிலை உள்ளதாக இந்தப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கிறார்கள். 

பெங்களூரைப் புறக்கணிக்கும் தலைவர்கள்!

தேர்தல் பரபரப்புகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது கர்நாடகா தலைநகர் பெங்களூரு. மோடி, ராகுல் உள்பட அனைத்துத் தலைவர்களுமே தட்சண கர்நாடகா பகுதியில்தான், தங்கள் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். நகர் பகுதிகளைவிட கிராமப்புறங்களையே தலைவர்கள் குறிவைத்து பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி இந்தப் பகுதியில் கிராம மக்களுடன் இணக்கமாகத் தங்களைக் காட்டிக்கொள்வதில் தலைவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்புதான், பெங்களூரு பகுதியில் பிரசாரம் செய்தால் போதும் என்று எல்லா கட்சியினரும் நினைக்கிறார்கள். அதனால், பெங்களூரு அமைதியாக உள்ளது.

உடுப்பி ஹோட்டல் உணவும்... மஞ்சுநாதர் ஆலயமும்!
 

ராகுல் காந்தி

pc: via twitter

மீண்டும் ஆட்சியமைத்துவிட வேண்டும் என்ற உறுதியில் இருக்கும் ராகுல் காந்தி, பாதுகாப்பு அரணையும் தாண்டி மக்களை நெருங்குவதும், அவர்களுடன் கைக்குழுக்குவதும் என பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர், வாகனத்திலிருந்து திடீரென இறங்கி மக்களுடன் நெருங்கிப் பேசுகிறார். உடுப்பி ஹோட்டல் போர்டு தென்பட்டுவிட்டால், அங்கு ராகுலை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அங்கு சமோசா சாப்பிட்டுக்கொண்டே தலைவர்களுடன் பிரசார வியூகங்களை ராகுல் அமைக்கிறார். கர்நாடகாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதர் சுவாமி கோயிலுக்கு விசிட் அடித்த ராகுல், அந்தக் கோவில் வழக்கப்படி மேலாடையின்றி, கோவில் பிராகாரத்தில் வலம்வந்தார். பி.ஜே.பி முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை அவரது கட்சியினர் கோயில் கோயிலாக அழைத்துச் சென்று அர்ச்சனை செய்யச் சொல்கின்றனர். ஹோட்டலில் ராகுலும், கோயிலில் எடியூரப்பாவும் வியூகம் வகுக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்