Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"முடங்க மாட்டேன்.. போலீஸ் அதிகாரியாவேன்!" பாலியல் கொடுமைக்குள்ளான சிறுமியின் நம்பிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அண்மையில் காஷ்மீரில், 8 பேர் கூட்டாக சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக் கொடூரமாக  கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதைத்தொடர்ந்து சிறுமிகளைப் பல்வேறு வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும்விதமாக போக்ஸோ சட்டத்தை திருத்த அவசரச் சட்டம்  கொண்டுவந்தது மத்திய அரசு. சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால், தூக்குத் தண்டனை வழங்கும் அம்சம் அதில் இடம் பெற்றிருந்தது. போக்ஸோ சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் சிறுமிகள் - பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 13 வயது சிறுமியை அவளுடைய தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

 விதவையான இவருடைய தாய் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமி 13 வயதில் பருவமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருடைய தந்தை அவளை பாலியல் வன்புணர்வுக்கு வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்தச் சிறுமி "டாடி என்னை விட்டுவிடுங்கள்... இப்படி செய்யாதீர்கள் " என்று  மன்றாடியுள்ளார். சிறுமியின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாத அந்த நபர் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன்னுடைய தாய்  வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் நடந்த கொடூரத்தைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் . ஆனால், "அவள் பொய் சொல்கிறாள். எதையோப் பார்த்து பயந்து இவ்வாறு பேசுகிறாள்'' என்று சமாளித்துள்ளார் அவளது தந்தை. அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய்  சமாதானமடைந்ததோடு அவ்வாறு  தந்தையைப் பேசக் கூடாது என்று மகளைப் பார்த்துக் கண்டித்துள்ளார்.  

சிறுமி

இப்படியான நிலையில், அடுத்த நாள்  சிறுமியின் தாய் வேலைக்குக் கிளம்புகையில் தன்னை தனியாக விட்டுவிட்டுப் போக வேண்டாம் என கூறியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாத அவளுடைய தாய் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , மீண்டும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் அந்த நபர். 

திரும்பி வந்து பார்த்த தாய், மகள் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து கணவனிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், 'மது மற்றும் போதை மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால், அவ்வாறு நடந்துகொண்டேன்' என்றும் தன்னை மன்னிக்குமாறு கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மகளை சமாதானம் செய்துள்ளார் தாய். நாள்கள் கடந்த நிலையில், மீண்டும் ஒரு நாள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் அவர். அப்போது அந்தச் சிறுமி மறுத்து கத்திய நிலையில் கடுமையாக அவளைத் தாக்கியுள்ளார். தந்தையிடம்  இருந்து தப்பித்துச் சென்ற சிறுமி குளியல் அறையில் பதுங்கியுள்ளார். ஆனாலும் விடாமல் துரத்தியவர் கதவை உடைத்துச்சென்று சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் தாய் வந்துவிடவே மகள் உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார். அதன்பின்னர் கணவரிடம் அவர் சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் நடந்த அந்த மோதலையடுத்து அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் அந்த நபர். பாதிக்கப்பட்ட சிறுமி பேசுகையில் "இந்தச் சம்பவம் தொடர்பாக ஐதராபாத்தில்  உள்ள மூன்று காவல் நிலையங்களில் புகார் அளித்தோம். ஆனால், ஒரு காவல் நிலையத்தில் கூட வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மேலும், இந்தச் சம்பவங்களால் நான் முடங்கிவிட மாட்டேன். தொடர்ந்து படித்து காவல்துறையின் அதிவிரைவுப் படையில் முக்கிய பொறுப்பை ஏற்பதே எனது லட்சியம்" என்று கூறியுள்ளார் .

குழந்தைகள் உரிமைக்காகப் போராடும் அச்சுயுதா ராவ் இதுகுறித்துப் பேசும்போது, "குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தண்டனையை உறுதி செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. நாடு முழுவதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் நான்கு லட்சம் வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை  உறுதி செய்யுமா  நீதிமன்றம்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement