Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17-வது நாளாக மாறாத பெட்ரோல் விலை... கர்நாடக தேர்தலுக்குப் பின் அதிர்ச்சி?

பெட்ரோல் விலை

தினம் தினம் மாற்றத்துக்குள்ளாகி வந்த பெட்ரோலின் விலை கடந்த 17 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 'மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் முறை' அமலில் இருந்திருந்தால் கூட 15 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், கடந்த ஓராண்டாக நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலில் உள்ள நிலையில், தொடர்ந்து 17 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருப்பது பெரும் ஆச்சர்யம்தான். 

கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்பவே பெட்ரோல், டீசலின் விலை மாற்றியமைக்கப்படுவதாகச் சொல்லப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கடந்த மாதத்தின் துவக்கத்தில் 67 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், தொடர்ந்து அதிகரித்து இந்த மாதத்தின் துவக்கத்தில் 75 டாலரைக் கடந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் லேசான மாற்றம் ஏற்பட்டாலே சில காசுகளை உயர்த்திவிடும் எண்ணெய் நிறுவனங்கள், தற்போது தொடர்ந்து 17 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் அமைதி காக்கின்றன.

petrol price list

கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.  "கடந்த ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தேர்தல் மேடைகளில் முக்கிய பேசுபொருள் ஆனது. 2014-ம் ஆண்டோடு ஒப்பிட்டு,  பி.ஜே.பி. அரசு அநியாயமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதாக குற்றஞ்சாட்டியது காங்கிரஸ். இது பி.ஜே.பி.க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பதை நிறுத்தி வைக்க எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. 

அதனாலே பெட்ரோல், டீசல் விலை கடந்த 17 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. 'எரிபொருள் விலையில் நாங்கள் தலையிடுவதில்லை. நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரம், தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றன.' என ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும்போது மத்திய அரசுத் தரப்பில் இருந்து சொல்லப்படும். ஆனால், எரிபொருள் விலையில் அரசின் கட்டுப்பாடு இருக்கவே செய்கிறது. அதைத்தான் தற்போதைய நிலை உணர்த்துகிறது," என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

petrol bunk

அட... பரவாயில்லை. இப்படியாவது பெட்ரோல் விலை ஏறாமல் இருக்கட்டும் என நினைக்கிறீர்களா? அதுவும் வெகுநாள் நீடிக்காது என்கிறது எண்ணெய் நிறுவன வட்டாரங்கள். மே 12-ம் தேதிக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும் எனச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கர்நாடகா தேர்தல் நடக்கும் மே 12-ம் தேதிக்குப் பின்னர் கணிசமாக உயரும் எனச் சொல்லப்படுகிறது.

கர்நாடகா தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையேற்றம் நிறுத்தி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுவதை ஏற்க மறுத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், பொதுமக்களின் நலன் கருதியும், விலையேற்றத்தால் ஏற்படும் அச்ச உணர்வை தவிர்க்கவுமே பெட்ரோல் விலையேற்றத்தை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேசூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதைத் தவிர்க்க இயலாது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தபோதுகூட, அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி பெட்ரோல் விலை குறையாமல் பார்த்துக்கொண்டது. சர்வதேச அளவில் 2014-ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்திருந்தாலும் மத்திய அரசு 9 முறை கலால் வரியை உயர்த்தி உள்ளது. 

 

petrol

தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை என்பது ஏறத்தாழ 36 ரூபாய். இதற்கு வரியாக எண்ணெய் நிறுவனங்களின் லாபம், கலால் வரி, டீலர் கமிஷன், வாட், சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு வரி என ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாய் மத்திய, மாநில அரசுகள் வரி வருவாய் பெறுகின்றன. மத்திய அரசுதான் இதில் பெரும் வருமானத்தைப் பெற்று வருகின்றது. 

பெட்ரோலிய பொருள்கள் என்பது அரசுகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து. பெட்ரோலுக்கு 100 சதவிகிதத்துக்கும் மேல் வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனையில் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு வரியினங்கள் மூலம் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுகின்றன. ஒரே நாடு ஒரே வரி எனும் முழக்கத்துடன் அமலாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பெட்ரோலிய பொருள்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.

அவ்வாறு பெட்ரோலிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால்,  அத்தியாவசியப் பொருள் என்ற அடிப்படையில் 5 சதவிகித வரியை விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை 45 ரூபாயாகக் குறையும். அப்படி விதித்தால் அரசுக்கு ஆண்டுக்கு கிடைக்கும் வரி வருவாய் சுமார் 5.50 லட்சம் கோடி ரூபாயில் இருந்து ஒரு லட்சம் கோடியாகக் குறையும். 4.50 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். பெட்ரோலை ஆடம்பரப் பொருளாக கருதி 28 சதவிகித வரி விதித்தாலும் 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு என்பது அதன் நுகர்வோரை மட்டும் பாதிப்பதில்லை. விலைவாசியை நிர்ணயிக்கக் கூடியதாகவும், ஏழை எளிய மக்கள் வரை பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. சாதாரண மக்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை பொன் முட்டையிடும் வாத்தாகவே கருதுவதுதான் பெட்ரோல் விலை குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement