வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (10/05/2018)

கடைசி தொடர்பு:19:04 (10/05/2018)

``கருத்துக் கணிப்புகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன" - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

கர்நாடகத் தேர்தல் - சி.பி.எம். கருத்து

ர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை (மே 12) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் பரபரப்புக்கு மத்தியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் திட்டமிட்டே, பி.ஜே.பி-யால் பரப்பப்படுவதாக சி.பி.எம். தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக எந்தத் தேர்தலாக இருந்தாலும், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் சில கருத்துத் திணிப்புகள் வெளியிடப்படுவதுண்டு. நாடாளுமன்றத் தேர்தலானாலும், மாநில சட்டசபைகளுக்கான தேர்தலானாலும் பிரபல நிறுவனங்களுடன், நாளிதழ் அல்லது செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று.

குமாரசாமி - சித்தராமையா - எடியூரப்பாதவறான கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையமும் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், அவற்றையும் மீறி சில கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு கருத்துக் கணிப்புகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. சொல்லி வைத்தது போன்று எல்லா கருத்துக் கணிப்புகளுமே கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெறும் என்றும், அதற்கு அடுத்த இடத்தில் மிகக் குறைவான இடங்கள் வித்தியாசத்தில் பி.ஜே.பி. இரண்டாமிடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவித்து தேர்தல் பரபரப்பைக் கூட்டியுள்ளன. மூன்றாவதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று அந்தக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், பல்வேறு தரப்பிலும், நிறுவனங்களும் தங்களின் சொந்த லாபத்திற்காக தங்களுக்குச் சாதகமான அல்லது சார்ந்துள்ள கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, அந்தக் கட்சிகள் வெற்றிபெறும் என்றரீதியில் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நிறைவடையும்வரை, வாக்களித்து விட்டு வெளியே வருவோரிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதற்கிடைய பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி., கர்நாடகத் தேர்தல் தொடர்பாக எந்தவொரு கருத்துக்கணிப்பையும் தங்கள் நிறுவனம் நடத்தவில்லை என்று அறிவித்துள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி 135 இடங்களில் வெற்றிபெறும் என்று பி.பி.சி. நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அந்தத் தகவல்களை பி.பி.சி. மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலகிருஷ்ணன்தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாவது பற்றியும், அவை எந்த அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``பி.ஜே.பி.-யைப் பொறுத்தவரை, கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திட்டமிட்டு இப்படி எல்லாவிதமான முறைகேடுகளையும் பண்ணத் தயாராகி விட்டது. மற்ற மாநிலங்களிலும் ஏற்கெனவே இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை திட்டமிட்டுப் பரப்பும் செயலில் பி.ஜே.பி. ஈடுபட்டது. இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டும் செயலில் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான உத்தரவு. தேர்தல் பிரசாரத்தின்போது, `நாங்கள்தான் வெற்றிபெறுவோம்' என்று சொல்வது வேறு. அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சுதந்திரமாக வாக்களிக்க இருப்போரின் எண்ணத்தைத் திசை திருப்பும் வகையில், `இந்தக் கட்சிக்குத்தான் அதிக இடங்கள், மற்றொரு கட்சிக்கு குறைந்த இடங்கள்' என்பது போன்று கணிப்புகளை வெளியிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதனால்தான் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகிப் போயுள்ளன. கருத்துக்கணிப்புகள் என்பதே, இதுபோன்று குறிப்பிட்ட கட்சிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் வெளியிடப்படுவதுதான். இவை அனைத்தும் தேவையில்லாத ஒரு குழப்பத்தை உண்டாக்கும். அதிலும் பி.ஜே.பி. இதுபோன்ற செயல்களை திட்டமிட்டே செய்துவருகிறது.  

பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், பி.ஜே.பி. வெற்றிபெற்றபோதிலும் இடைத்தேர்தல்களைப் பொறுத்தமட்டில் அக்கட்சி தோல்வியையேச் சந்தித்துள்ளது. குஜராத்தில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்து விட்டார்களே தவிர, கடந்த சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே பல தொகுதிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

ஏன், கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கூட பி.ஜே.பி. 31 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாததால், பி.ஜே.பி. ஆட்சியமைக்க நேரிட்டது. எனவே, தென் மாநிலங்களைப் பொறுத்தவரை பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய வாக்கு சதவிகிதம் எல்லாம் கிடையாது. அக்கட்சியால் கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற இயலாது. தவிர, பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை போன்ற பல விஷயங்கள் கர்நாடக மாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 
இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் செல்லும் ஒருவராவது பி.ஜே.பி-க்கு வாக்களிப்பாரா? இதுவரை இல்லாதவகையில், ஒரு லிட்டர் 78 ருபாய்க்கு விற்பனையாகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தளவுக்கு விலை உயர்ந்தது கிடையாது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகட்டும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பாகட்டும், மக்களுக்கு மிகப்பெரும் சங்கடங்களைத்தான் கொடுத்துள்ளன. நாடு முழுவதும் சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளித் தொழில் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. சிறு விவசாயிகளின் நிலையைக் கேட்கவே தேவையில்லை. 

இதுபோன்ற, சூழலில் பி.ஜே.பி-யால் எப்படி கர்நாடக மாநிலத்தில் வெற்றிபெற முடியும்? அப்படியே வெற்றிபெறுவார்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் பிரதமர் எதற்காக கர்நாடகத்திலேயே முகாமிட்டு, இத்தனை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்? மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, உத்தரப்பிரதேச முதல்வர் உள்பட பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வரை கர்நாடகம் வந்து தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். என்னதான் பிரசாரம் செய்தாலும் கர்நாடகத்தில் பி.ஜே.பி. நினைப்பது நடக்காது" என்றார் தீர்க்கமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்